[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

வீட்டிலேயே 10 குழந்தைகள் பெற்ற பெண் : வியந்துபோன மருத்துவர்கள்

a-woman-birth-10-babies-at-home-in-thiruvallur

திருவள்ளூரில் வீட்டிலேயே 10 குழந்தைகளை சுகப்பிரசவத்தில் ஒரு பெண் பெற்றெடுத்துள்ளார். 

அண்மையில் திருப்பூரில் நடந்த சம்பவம் ஒன்று தமிழக அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியது. யுடியூப் வீடியோ பார்த்து மனைவிக்கு கணவர் பிரசவம் பார்த்தார். குழந்தை நலமாக பிறந்தது. ஆனால் மனைவி இறந்துவிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக கணவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து யாரும் வீட்டில் பிரசவம் பார்க்க வேண்டாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஏன்? வீட்டில் பிரசவம் பார்க்கக்கூடாது எனக் கணவர் ஒருவர் பதிவிட்ட வீடியோ வைரல் ஆனது. அத்துடன் இலவச சுகப்பிரசவம் என பயிற்சி முகாம் நடத்திய ஹீலர் பாஸ்கர் என்பவரை கோவை காவல்துறையினர் கைது செய்தனர். இவ்வாறு மகப்பேறு தொடர்பான சம்பவங்கள் அண்மையில் அதிகமாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அத்துடன் வீட்டில் மகப்பேறு என்பது சரியா? தவறா? என விவாதங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் திருவள்ளூரில் பழங்குடியினப் பெண் ஒருவர் அனைவரையும் வியப்படையச் செய்துள்ளார். திருவள்ளூர், பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரசவ வலியுடன் ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு மற்றொரு பெண் வந்துள்ளார். அந்தப் பெண்ணின் கையில் ஒரு கைக்குழந்தை இருந்துள்ளது. இதைக்கண்ட மருத்துவர்கள் பிரசவ வலியில் வரும் பெண்ணுக்கு குழந்தை பிறந்துவிட்டது போல என நினைத்துள்ளனர்.

ஆனால் விசாரித்ததில், பிரசவ வலியில் இருக்கும் பெண்ணுக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை என தெரியவந்துள்ளது. உடனே அந்தப் பெண்ணை மருத்துவர்கள் சிகிச்சைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அவருக்கு சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் உடன் வந்த பெண்ணை மருத்துவர்கள் விசாரித்தனர். 

அழுக்கு நைட்டியுடன், எலும்பும், தோலுமாய் காட்சியளித்த அந்தப் பெண்ணின் பெயர் ஆனந்தம்மாள் (37). அவர் கையில் இருந்தது அவரது குழந்தை தான். அவர் அழைத்து வந்த கர்ப்பிணிப்பெண் வேறு யாரும் இல்லை அவரது மருமகள். ஆனந்தம்மாளின் முதல் மகனின் மனைவிதான் அவர். ஆனந்தம்மாள் கையில் இருந்த கைக்குழந்தை அவரது 10வது குழந்தை. அனைத்துக் குழந்தைகளையுமே ஆனந்தம்மாள் வீட்டிலேயே சுகப்பிரசவத்தில் பெற்றுள்ளார். இதையெல்லாம் கேட்ட மருத்துவர்கள் வியந்துபோயினர். 

ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர் ஆனந்தம்மாள். இவரது கணவர் ராஜி மீனவர்களுடன் கூலி வேலை செய்து வருகிறார். தினந்தோறும் அவர் வாங்கும் ரூ.300 சம்பளத்தில்தான் இவர்களின் குடும்பம் வாழ்கிறது. ஆனந்தம்மாள் பழங்குடியினத்தை சேர்ந்தவர். ராஜியும் அதே இனத்தை சேர்ந்தவர். இவர்கள் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தான் பழவேற்காடு கடற்கரை பகுதியான கூனங்குப்பத்தில் குடியேறியுள்ளனர். 37 வயதே நிரம்பிய ஆனந்தம்மாள், ஏறத்தாழ 20 வயது நிரம்பிய தனது மூத்த மகனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். அந்த மகனின் மனைவிக்கு தான் தற்போது பொன்னேரி மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. தனது மருமகளையும் வீட்டிலேயே குழந்தை பெற்றுக்கொள்ளுமாறு ஆனந்தம்மாள் வலியுறுத்தியுள்ளார். ஆனால் மருமகள் பிடிவாதம் பிடித்து மருத்துவமனையில் குழந்தை பெற்றுள்ளார். 

10 குழந்தைகள் பெற்ற பின்னரும் அவர் இன்னும் கருத்தடை செய்யவில்லை என்று அறிந்த மருத்துவர்கள், அவரிடம் கருத்தடை செய்யுமாறு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். அத்துடன் ஏன்? 10 குழந்தைகள் பெற்றீர்கள் என்றும் கேட்டுள்ளனர். அதற்கு தான் பெண் குழந்தை வேண்டுமென குழந்தைகள் பெற்றதாக அவர் கூறியுள்ளார். தனக்கு 8 ஆண் குழந்தைகள் பிறந்ததாகவும், ஒன்பதாவதாகத் தான் பெண் குழந்தை பிறந்ததாகவும் தெரிவித்துள்ளார். தனக்கு பிறந்த குழந்தைகளில் 3 இறந்துவிட்டதாகவும், அவர் கூறியுள்ளார். ஒன்பதாவதுதான் பெண் குழந்தை பிறந்துவிட்டதே பின்னர் ஏன் 10வது குழந்தை பெற்றீர்கள்? என மருத்துவர்கள் கேட்டபோது, அவர் பதில் அளிக்கத் தெரியாமல் விழித்தபடி நின்றுள்ளார். பின்னர் தான் மருத்துவர்களுக்கு புரிந்துள்ளது, ஆனந்தம்மாள் கருத்தடை விழிப்புணர்வை அறியாதவர் என்று. அவரிடம் சமரசம் பேசி கருத்தடை செய்யுமாறு கூறியுள்ளனர். அவர் மறுத்துள்ளார். அவரது கணவருக்கு குடும்பக்கட்டுபாடு செய்ய முயன்றுள்ளனர். ஆனால் ஆனந்தம்மாளின் கணவர் விவரம் அறிந்தவுடன், அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார்.

இதையடுத்து உடல்நலிவுற்று இருந்த ஆனந்தம்மாளுக்கு மருத்துவ அலுவலர் அனுரத்னா தேவையான காய்கறிகள் மற்றும் உணவுப்பொருட்களை வாங்கிக்கொடுத்துள்ளார். இரண்டு நாட்களுக்கு அவரை அடிக்கடி சென்று கவனித்துள்ளார். தொடர்ந்து அவருக்கு கருத்தடை விழிப்புணர்வுகளை கூறியுள்ளார். இறுதியில் ஒரு வழியாக ஆனந்தம்மாள் சம்மதிக்க, அவருக்கு வெற்றிகரமாக கருத்தடை செய்யப்பட்டது. நாட்டில் சுகப்பிரசவம் என்பது அறிதாக மாறிவிட்ட நிலையில், ஆனந்தம்மாளின் கதை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதேசமயம் கருத்தடை மற்றும் குடும்பக்கட்டுப்பாடு விழிப்புணர்வு என்பது ஆனந்தம்மாள் போன்று அடித்தட்டு மக்களிடம் இன்னும் சென்று சேரவில்லை என்பதையும் உணர்த்துகின்றது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close