[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

கோட்டை விட்ட டிடிவி தரப்பு.. சாதகமாக்கிய தலைமை நீதிபதி..!

18-mla-s-case-ttv-mistakes-and-chief-justice-judgement

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என  சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், தகுதி நீக்கம் செல்லாது என நீதிபதி சுந்தரும் இருவேறு தீர்ப்புகளை கடந்த 14-ஆம் தேதி அளித்தனர். இதனையடுத்து இந்த வழக்கு மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டது. ஆனால் தீர்ப்பு வழங்குவதற்கு முந்தைய நாளில் இருந்தே தீர்ப்பு குறித்து பல எதிர்பார்ப்புகள் நிலவியது. தீர்ப்பு எந்த மாதிரி வரலாம் என்ற வாய்ப்புகள் குறித்தும் பலரும் ஆலோசித்தனர். தலைமை நீதிபதியின் தீர்ப்பு சபாநாயகருக்கு ஆதரவாக இருக்கும் என்றும் யூகிக்கப்பட்டது.

இந்த வழக்கை பொறுத்தவரை ‘சபாநயாகரின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியுமா’ என்பது தான் பலரின் கேள்வியே. ஆனால் இந்த கேள்வி எழவே தேவையில்லை. காரணம் என்னவென்றால், வழக்கில் ஆஜரான இருதரப்பு வழக்கிறஞர்கள் மற்றும் நீதிபதிகளாலும் மூன்று முக்கிய காரணங்களுக்காக சபாநாயகரின் உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியும் என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அதாவது பதவி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு அவர்களது தரப்பினை எடுத்து வைக்க தகுந்த வாய்ப்பு (sufficient opportunity) வழங்கப்படவில்லை அல்லது சபாநாயகர் உத்தரவு கெட்ட எண்ணத்தின் (malafide) அடிப்படையில் அமைந்தது அல்லது ஏற்றுக் கொள்ளத்தக்க முடிவினை (plausible conclusion) சபாநாயகர் எடுப்பதற்கான காரணிகள் இல்லாதிருத்தல் என்பதுதான் அந்த மூன்று முக்கிய காரணங்கள்.எனவே எம்எல்ஏக்கள் வழக்கில் தகுந்த காரணிகள் (factors) இருக்கிறதா என்பதுதான் முக்கியமாக பார்க்கப்பட்டது.

அது என்ன காரணிகள்?

பதவி நீக்கம் செய்யப்பட வேண்டிய குற்றத்தை 18 எம்எல்ஏக்கள் புரிந்துள்ளார்களா என்பதுதான் அவை.

இந்திரா காந்தியின் மரணத்திற்குப் பிறகு அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த ராஜீவ் காந்தி தனது எம்பிக்களை ஆட்சி முடியும் வரை பாதுகாக்கும் எண்ணத்துடன் ‘கட்சித் தாவல் தடைச் சட்டம்’ என்ற பெயரில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 10-வது பட்டியலாக சில பிரிவுகளை இணைத்தார்.

இப்பிரிவுகளின் படி, ஒரு அரசியல் கட்சியால் தேர்தலில் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏ அவரது கட்சி முடிவுக்கு எதிராக சட்டமன்றத்தில் வாக்களித்தால் தனது பதவியை இழப்பார்.

அப்படிப் பார்த்தால், 18 எம்,எல்ஏ.க்கள் அவ்வாறு ஏதும் வாக்களிக்கவில்லை. எனவே இந்தப் பிரிவு இங்கு பொருந்தாது.

அடுத்து எம்.எல்.ஏ தன்னிச்சையாக கட்சி உறுப்பினர் தகுதியை விட்டு விலகினாலும் பதவி இழப்பார் (He has voluntarily given up his membership of such political party)

ஆனால் 18 எம்.எல்.ஏக்கள் ஆளுநரை சந்தித்து மனு ஒன்றினை அளித்தனர். அந்த மனுவில். ‘எடப்பாடி பழனிசாமி முதல்வராவதற்கு முன்பு எங்களது ஆதரவை தெரிவித்தோம். தற்போது எடப்பாடி மீது நம்பிக்கை இழந்து விட்டதால், அவருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுகிறோம். ஆனால் எங்களது கட்சி உறுப்பினர் பதவியை விட்டுக் கொடுக்கவில்லை’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவின் அடிப்படையில்தான் 18 எம்.எல்.ஏக்கள் தன்னிச்சையாக கட்சி உறுப்பினர் தகுதியை விட்டுக் கொடுத்துவிட்டதாக சபாநாயகர் தீர்ப்பு கூறியுள்ளார்.

சபாநாயகரின் தீர்ப்புக்கு அடிப்படையான இந்தக் காரணி போதுமானதா என்பது மட்டுமே இந்த வழக்கின் சாரமாக இருக்க வேண்டியது. கட்சி உறுப்பினர் தகுதியை தன்னிச்சையாக விட்டுக் கொடுப்பது என்பதற்கு அந்த எம்.எல்.ஏ கட்சியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்பதல்ல. அந்த குற்றத்தை அவரது நடத்தையிலிருந்து ஊகித்துக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது. உதாரணமாக ஜி.விஸ்வநாதன் அதிமுகவில் அமைச்சராக செயல்பட்டவர். ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்படுகிறார். அவ்வாறு நீக்கப்பட்ட பின்னர் மதிமுகவில் உறுப்பினராகிறார். கட்சியிலிருந்து ஏற்கனவே நீக்கப்பட்டாலும் ‘கட்சித்தாவல் சட்டத்தைப் பொறுத்தவரை’ அவர் அதிமுக எம்.எல்.ஏவாகத்தான் கருதப்படுவார் என்று கூறி அவரது பதவி நீக்கத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

அடுத்து மகாசந்திர பிரசாத் சிங். காங்கிரஸ் எம்.எல்ஏ. காங்கிரஸிலிருந்து விலகவில்லை. ஆனால் பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். இவரது பதவியும் பறிக்கப்பட்டதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

தலைமை நீதிபதி தனது தீர்ப்பில் அடுத்து குறிப்பிடும் ராஜேந்திர சிங் ராணா வழக்கின் சாரம், 18 எம்.எல்.ஏக்களின் வழக்கிற்கு அருகில் வரும். அந்த வழக்கில் பி.எஸ்.பி கட்சியைச் சேர்ந்த 13 எம்எல்ஏக்கள், எதிர்கட்சி தலைவரை ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநருக்கு கடிதம் எழுதுகிறார்கள். அவர்களது பதவியும் பறிக்கப்பட்டது.

ஆனால் தலைமை நீதிபதிக்கு பிரச்னை அவர் இறுதியில் குறிப்பிடும் எடியூரப்பா வழக்கில் (2011) 7 SCC 1) ஆரம்பிக்கிறது. எடியூரப்பா வழக்கில் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏக்கள், தாங்கள் எடியூரப்பாவுக்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் ஆனால் பிஜேபி வேறு யாரையாவது முன்னிறுத்தி வேறு அரசு அமைக்கலாம் என்றும் ஆளுநருக்கு எழுதிய கடிதம் ‘தன்னிச்சையாக உறுப்பினர் தகுதியை கைவிடுவதல்ல’ என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இரு வழக்குகளிலும் சம்பந்தப்பட்ட முதல்வர் ஊழல் புரிந்த குற்றத்திற்காக இம்முடிவு எடுக்கப்பட்டதாக எம்.எல்.ஏக்களில் கடிதத்தில் கூறப்படுவது கவனிக்கத் தகுந்தது. இரண்டிலும் பெயர் குறிப்பிடப்பட்ட நபருக்கான ஆதரவை வாபஸ் வாங்குவதாகத்தான் கூறப்படுகிறதே தவிர ஆட்சியிலிருக்கும் தகுதி வாய்ந்த கட்சிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கூறப்படவில்லை என்பதும் ஒற்றுமை.

அதிமுக வேறு யாரயாவது கொண்டு ஆட்சி அமைக்கலாம் என்ற வாக்கியம் மட்டும் மிஸ்ஸிங். ஆனாலும் 18 எம்.எல்.ஏக்கள் கடிதத்தில் கூறப்படும் விஷயமும் அதுதான். அதுவரை மிகுந்த தன்னம்பிக்கையுடன் பயணிக்கும் தலைமை நீதிபதியின் தீர்ப்பு எடியூரப்பா வழக்கை மட்டும் தட்டுத்தடுமாறி கடக்கிறது.

இப்படி ஒரு சிறிய வித்தியாசத்தை வைத்துக் கொண்டு பல்லாயிரக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி ஒருவரின் பதவியை ஒரு நிமிடத்தில் பறித்துவிட முடியுமா..? என்பதுதான் கேள்விக்குறி..

இதுதான் சாரம். இந்தக் கேள்விக்கு விடை எம்.எல்.ஏ.க்களுக்கு சாதகமாக இருந்தால் அடுத்து சபாநாயகரின் செயல் கெட்ட எண்ணம் கொண்டது. தகுந்த காரணி இல்லை. தங்களது செயலின் நியாயத்தை விளக்க எம்.எல்.ஏக்களுக்கு போதிய வாய்ப்பு தரப்படவில்லை என்பது எல்லாம் அடுத்தடுத்து அவர்களுக்கு சாதகமாகவே முடியும்.

கட்டுரையாளர் : பிரபு ராஜதுரை, வழக்கறிஞர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close