[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தடியடி
  • BREAKING-NEWS தமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் தலைமை தகவல் ஆணையராக நியமனம்
  • BREAKING-NEWS சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி

விழுப்புரம் ஆராயி கொலையை ஏன் மறந்தோம்?: கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்

attack-on-dalit-family-near-villupuram

தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து, தனது நடிப்புத் திறமையால் இந்தியா முழுவதும் பெரும் புகழை அடைந்த ஸ்ரீதேவியின் மரணச் செய்தியை பலரும் கவனித்துக் கொண்டிருந்தபோது, தமிழ்நாட்டில் சற்று அமைதியாக இன்னொரு கொடூரச் சம்பவமும் அரங்கேறியிருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூர் அருகே உள்ள வெள்ளம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆராயி.  வயது 45. தனது கணவரை இழந்துவிட்ட ஆராயிக்கு மொத்தமாக 6 குழந்தைகள். கணவரின் வருமானம் இல்லாதக் காரணத்தினால் வெவ்வேறு இடங்களில் தனது 4 குழந்தைகளைக் கூலித்தொழிலுக்கு அனுப்பிவிட்டு வீட்டில் ஒரு மகள் மற்றும் மகனுடன் வசித்து வந்திருக்கிறார் ஆராயி. சிறு கூட்டில் தனது குழந்தைகளை பத்திரமாகக் காத்து வந்த ஆராயின் குடும்பத்தில் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது ஒரு கும்பல்.

கடந்த 22ம் தேதி ஆராயி தனது மகள் மற்றும் மகனுடன் இரவில் தூங்கிக் கொண்டிருக்க, வீட்டில் புகுந்த கும்பல் ஒன்று ஆராயி மற்றும் அவரின் இரண்டு குழந்தைகளை சரமாரியாக தாக்கியுள்ளது. ஆராயி வீட்டில் இருந்து முணுமுணுப்பு சத்தம் கேட்க, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரின் வீட்டிற்குச் சென்று பார்த்திருக்கின்றனர். அங்கு ஆராயி குழந்தைகளுடன் இரத்த வெள்ளத்தில் மிதந்திருக்கிறார். மேலும் அவரின் 14 வயது மகள் அரைகுறை ஆடையுடன் கிடந்த நிலையில் அவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதும் தெரிய வந்திருக்கிறது. மேலும் ஆராயின் மகனும் கொலை வெறித் தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஆராயிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த குறிப்பிட்ட சமூகத்தினருக்கும் பல மாதங்களாக நிலத் தகராறு இருந்துள்ளது. ஆராயின் நிலத்தில் 12 செண்ட் இடத்தை தனக்கு விற்குமாறு, குறிப்பிட்ட சமூகத்தில் ஒருவர் கேட்க, அதற்கு ஆராயி மறுத்துள்ளார். இதனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்னரே ஆராயி மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதன்தொடர்சியாகத் தான் இந்தத் தாக்குதல் சம்பவமும் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் தலித் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி புதிதல்ல. தருமபுரி இளரவசன் மரணத்தில் இன்றுவரை நடந்தது என்ன..? என்பது நம் யாருக்கும் தெரியாது. அதேபோல் உயர்ந்த ஜாதி பெண்ணை மணம் முடித்ததற்காக உடுமலை சங்கர் நடுரோட்டிலே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அந்த வகையில்தான் இந்தச் சம்பவமும் நடைபெற்றிருக்கிறது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் ஐடி மென்பொறியார் சுவாதி படுகொலை செய்யப்பட்டபோது அதுகுறித்த செய்திகளை தொடர்ச்சியாக ஊடகங்கள் ஒளிபரப்பின. நகரத்தில் நடந்ததால் இச்சம்பவம் அதிகம் பரபரப்பாக்கப்பட்டது. ஆனால் கிராமத்தில் குற்றங்கள் நடந்தால் அதனை ஊடகங்கள் கண்டுகொள்ளமாட்டாகளா..? என்ற விமர்சனத்தை அனைத்து தரப்பினரும் எழுப்புகின்றனர்.  முதலமைச்சர் பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட எந்தத் தலைவரும் இந்த விஷயத்தில் கண்டனக்குரலை பதிவு செய்யாதது வருத்தமே என்றும் கூறப்படுகிறது.

தனது நடிப்புத் திறமையால் இந்தியா முழுவதும் பெரும் புகழை சம்பாதித்து தற்போது மரணம் அடைந்திருக்கும் நடிகை ஸ்ரீதேவி தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதில் எந்தக் மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த தலித் குடும்பத்திற்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கும்போது அதனை விடுத்து ஊடகங்கள் ஸ்ரீதேவியை தூக்கிப் பிடிப்பது சரியல்ல என சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இதனிடைய இவ்விவகாரம் தொடர்பாக தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இவ்விவகாரத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு நீதிக் கிடைக்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத் துணை தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close