[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சட்டவிரோதம்: உயர்நீதிமன்றம் கருத்து

alanganallur-jallikattu-is-illegal-madurai-high-court

நடப்பாண்டில் ஜல்லிக்கட்டிற்கான அரசாணை வெளியிடப்படாமல் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டுகளை சட்டவிரோதமானதாக கருதலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்தது. இதையடுத்து இந்த ஆண்டுக்கான அரசாணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

ஸ்ரீவைகுண்டத்தில் வரும் பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதேபோல, திண்டுக்கல் மாவட்டம் உலகம்பட்டியிலும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக் கோரி மனு தாக்கல் செய்ய‌ப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, ஜல்லிக்கட்டு அரசாணையை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 2017 ஜனவரியில் அரசு வெளியிட்ட அரசாணையில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்த முடியும் என்றும், அதில் இடம்பெறாத ஸ்ரீவைகுண்டம், உலகம்பட்டி கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க முடியாது என்று கூடுதல் அரசு வழக்கறிஞர் வாதிட்டார். ஆனால், கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு தொடர்பாக 16 அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதில் குறிப்பிடாத இடங்களிலும் ஜல்லிக்கட்டு நடந்துள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தாக்கல் செய்துள்ள ஜல்லிக்கட்டு அரசாணை 2017-ம் ஆண்டிற்குரியது என்றும் நடப்பாண்டில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக அரசாணை இல்லாததால் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் நடத்திய ஜல்லிக்கட்டுகளை சட்டவிரோதமானதாக கருதலாம் என்றும் நீதிபதி தெரிவித்தார்.நடப்பாண்டில் ஜல்லிக்கட்டிற்கான அரசாணை வெளியிடுவது தொடர்பாக அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

இந்நிலையில், 2018 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் அரசாணை வெளியிடப்பட்டதாக நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தகவல் தெரிவித்தார். இதனை நீதிபதி ஏற்றுக்கொண்டார். அரசு தரப்பில் கடந்த 12-ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணை 14-ன்படி மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு அலங்காநல்லூர், ஆகிய இடங்களிலும் சிவகங்கை மாவட்டம் சிராவயல், கண்டுப்பட்டி ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 13-ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணை 21ன்படி, 9 மாவட்டங்களில் 78 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரும் 31 ஆம் தேதி வரையே ஜல்லிக்கட்டுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close