[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த படம் மற்றும் தொடரை வெளியிட தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS அயோத்தி வழக்கில் சீராய்வு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
  • BREAKING-NEWS விருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்படுவதை தடுத்த இளைஞர் அடித்துக்கொலை: 7 பேர் கைது
  • BREAKING-NEWS சிறார்களின் ஆபாச வீடியோக்களை முகநூலில் பதிவேற்றம் செய்த ஏசி மெக்கானிக் திருச்சியில் கைது
  • BREAKING-NEWS தெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

களத்தில் இறங்கிய கலைஞர்கள்

jallikattu-issue-tamilnadu-actors-support

ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக இளைஞர்கள், பெண்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களைத் தொடர்ந்து திரைப் பிரபலங்களும் களத்தில் இறங்கியுள்ளனர்.

ரஜினிகாந்த்

ஜல்லிக்கட்டு குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, பெரியவர்கள் ஒரு கலாச்சாரத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள். அதனை நாம் காப்பாற்ற வேண்டும். சில கட்டுப்பாடுகளை விதியுங்கள், ஆனால் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்று தனது ஆதரவு கருத்தினை ஒரு நிகழ்ச்சியில் பதிவு செய்திருந்தார்.

கமல்ஹாசன்

ஜல்லிக்கட்டு என்பது மிருகவதை இல்லை என்றும் ஏறுதழுவுதல் என்ற வார்த்தையிலிருந்து உருவானது எனவும் கூறி ஜல்லிக்கட்டிற்கு ஆதரவான தனது கருத்தை கமல்ஹாசன் பதிவு செய்தார். மேலும் ஜல்லிக்கட்டுக்கு தடை போட்டால், பிரியாணிக்கு தடை கோர முடியுமா? என்றும் கேள்வி எழுப்பினார்.

சிம்பு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மக்கள் அனைவரும் ஜனவரி 12-ஆம் தேதி 10 நிமிடம் மவுனமாக தங்களது எதிர்ப்பைக் கடைபிடிக்க வேண்டும் என்று ஜல்லிக்கட்டிற்கான ஆதரவை பதிவு செய்தார் நடிகர் சிலம்பரசன். தனது தந்தை டி.ராஜேந்தருடன், தனது வீட்டின் முன் அந்தப் போராட்டத்தை அவர் நடத்தினார்.

போராட்டத்தில் ஆர்யா

ஜல்லிக்கட்டிற்கு அனுமதி வழங்கக் கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் மதுரை அவனியாபுரம் பேருந்து நிலையம் அருகே இளைஞர்கள் கடந்த 14-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இயக்குநர் அமீர், நடிகர் ஆர்யா, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் பங்கேற்று ஜல்லிக்கட்டிற்கு தங்களது ஆதரவைப் பதிவு செய்தனர். இயக்குனர் கவுதமன், ஹிப்ஹாப் ஆதி போன்றோரும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவான போராட்டங்களில் பங்கேற்றனர். கவுதமன் கைதும் செய்யப்பட்டார். தாக்குதலுக்கும் உள்ளானார்.

சிவகார்த்திகேயன்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ட்விட்டரில், ‘ஏறுதழுவுதல் நம் தமிழர்களின் கலாசாரம், பண்பாடு. அதை மீட்க விரும்பும் பல கோடிபேரில் ஒரு தமிழனாய் நானும் ஒருவன் என சிவகார்த்திகேயன் பதிவிட்டிருந்தார்.

ஜி.வி.பிரகாஷ் போராட்டம்

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வலியுறுத்தி சேலத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் ஆகியோர் போராட்டம் நடத்தினர்.

டி.ராஜேந்தர் ஆதரவு

அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி சென்னை மெரினாவில் நடக்கும் போராட்டத்துக்கு ஆதரவாக நடிகர்கள் டி.ராஜேந்தர் மற்றும் மயில்சாமி ஆகியோர் முழக்கங்களை எழுப்பினர்.

சூர்யா

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு போராடுபவர்களின் உணர்வோடு கைகோர்ப்பதாக நடிகர் சூர்யா தெரிவித்தார். அமைதி‌ வழியில் உரிமைகளை நிலைநாட்டப் போராடுகிற அனைவரையும் பாராட்டுவதாக கூறிய சூர்யா, ‌அவர்களது உணர்வோடு தானும் கைகோர்ப்பதாகத் தெரிவித்தார். மக்களி‌ன் போராட்டம் வெற்றி பெற்று ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

சர்ச்சையில் சிக்கிய த்ரிஷா

ஜல்லிக்கட்டு தடைக்குக் காரணமான பீட்டா அமைப்புக்கு ஆதரவாக நடிகை த்ரிஷா செயல்பட்டு வருவதாக அவருக்கு எதிராக இணையத்தில் கண்டனக் குரல்கள் எழுந்தன. சமூக வலை தளங்களிலும் அவருக்கு எதிரான மீம்ஸ்-கள் பரப்பப்பட்டு வந்தன.

இதனால் தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து த்ரிஷா தற்காலிகமாக வெளியேறினார். மேலும் ஜல்லிக்கட்டுக்குத்தான் எதிரானவள் இல்லை எனவும், பிறப்பால் ஒரு தமிழச்சி என்றும் கூறினார்.இதனிடையே, பீட்டா அமைப்பில் த்ரிஷா உறுப்பினராக இல்லை என்றும், அவர் பீட்டா அமைப்பிற்கு விளம்பர தூதுவர் கிடையாது என்றும் த்ரிஷா தயார் உமா விளக்கம் அளித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close