[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

கச்சத்தீவு அந்தோணியார் ஆலயமும்..தமிழக மீனவர்களும்

bond-between-katchatheevu-anthoniyar-church-and-thamilnadu-fisherman

கச்சத்தீவில் புதிதாக கட்டப்பட்ட அந்தோணியார் ஆலயம் இன்று திறக்கப்பட்டது. இவ்விழாவில் கலந்துகொள்வதற்காக ராமேஸ்வரத்தில் இருந்து 82 பேர் படகுகளில் கச்சத்தீவிற்கு சென்றனர். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் அந்தோணியார் கோயில் திருவிழாவில் பல்வேறு கட்டுப்பாடுகளைக் கடந்து தமிழக மீனவர்கள் கலந்து கொண்டு வருகின்றனர். இதற்கான காரணம் என்னவாக இருக்க முடியும்?, அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் தமிழக மீனவர்கள் பங்கேற்க ஏன் இவ்வளவு கட்டுப்பாடுகள்?, அதற்கான அரசியல் காரணங்கள் என்ன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

கச்சதீவு அந்தோனியார் திருவிழா என்பதற்கு அப்பால் இருநாட்டு மக்களும் சந்தித்து பொருட்களை பண்டமாற்றம் செய்யும் இடமாகவே நீண்டகாலமாக இருந்து வந்தது. இலங்கையிலிருந்து செல்பவர்கள் தேங்காய் எண்ணெய், சவர்காரம் ஆகியவற்றை எடுத்து சென்று அங்கு வரும் தமிழக மக்களிடம் பட்டுப்புடவைகள் உட்பட இந்திய உற்பத்தி பொருட்களை பண்டமாற்று செய்து கொள்வது வழக்கமாக இருந்தது.

மேலும், கடலில் இயற்கைச் சீற்றம், புயல் மற்றும் பேராபத்து காலங்களில் காப்பாற்றவும், பெருமளவு மீன் கிடைக்க வேண்டும் என்றும் மீனவர்கள் வழிபாடு நடத்திய பின்னரே கடலுக்குள் செல்வது வழக்கம். இதற்காக ராமேஸ்வரம் ஓலைக்குடாவைச் சார்ந்த அந்தோணிப்பிள்ளை பட்டங்கட்டி மற்றும் தொண்டியை சார்ந்த சீனிக்குப்பன் பட்டங்கட்டி ஆகியோரால் கடந்த 1913ம் ஆண்டு கச்சத்தீவில் சிறிய ஓலைக் குடிசையில் புனித அந்தோனியார் ஆலயம் நிறுவப்பட்டது.

இலங்கையில் இனக் கலவரம் தொடங்குவதற்கு முன் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் அந்தோனியார் ஆலய விழா நடைபெற்று வந்தது. இதற்கு தமிழகம் மற்றும் இலங்கையில் இருந்து அதிகளவில் பக்தர்கள் சென்று வந்தனர். இரு நாட்டு மக்களும் சங்கமிக்கும் அமைதி தீவாக விளங்கிய கச்சதீவு 1975 ஒப்பந்தத்திற்கு பின் இலங்கைக்கு சொந்தமானது.

அப்போது இலங்கை பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்காவுக்கும், இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, கச்சதீவில் தமிழக மீனவர்கள் தங்கி மீன்பிடித்து திரும்பவும், கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய விழாவில் எப்போதும் போல் கலந்து கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த ஒப்பந்தத்திற்கு முன்னர் அந்தோனியார் ஆலய நிர்வாகம் தமிழ்நாடு தங்கச்சிமடத்தைச் சேர்ந்த கத்தோலிக்க பங்குத்தந்தையின் கீழ் இருந்துவந்த நிலையில் ஒப்பந்தத்திற்குப் பின்னர் நெடுந்தீவு பங்குத்தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது.

கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானதற்கு பின் கச்சத்தீவு விழாவிற்கான ஏற்பாடுகளை இலங்கை அரசு செய்தது. ஆயினும் திருப்பலி சடங்குகளை தங்கச்சிமடம் ரோமன் கத்தோலிக்க பங்கு தந்தையர்களே செய்து வந்தனர். இந்நிலையில் 1983 இல் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தை தொடர்ந்து பாதுகாப்பு கருதி கச்சத்தீவு விழா நிறுத்தப்பட்டது. இந்நிலையில் 2002ம் ஆண்டில் மீண்டும் கச்சத்தீவு விழா யாழ்ப்பாணம் மறைமாவட்ட பங்கு தந்தையர்களால் நடத்தப்பட்டது. 20 வருடங்கள் கழித்து நடந்த விழாவில் தமிழகத்தை சேர்ந்த கிறிஸ்தவர்களும் கலந்து கொண்டனர். தொடர்ந்து கச்சத்தீவு அந்தோணியார் ஆலய விழாவில் ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் இருந்து பக்தர்களும், பத்திரிகையாளர்களும் சென்று திரும்புகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close