[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

தமிழ் சினிமா வரலாற்றின் வெற்றி நாயகி 'கலைச்செல்வி' ஜெயலலிதா...வாங்கிக் குவித்த விருதுகள்

jayalalithaa-cinema-history

நடிகை ஜெயலலிதா முதலமைச்சரான வரலாறும், அதன் பிறகு அவரது அரசியல் வாழ்கையின் ஏற்ற இறக்கங்களும் அனைவருக்கும் தெரியும். ஆனால் கோமளவல்லி என்ற அம்மு, ஜெயலலிதா என்ற இமாலயப் புகழ் பெற்ற நடிகையான கதை சுவாரஸ்யமானது. ஒரு நடிகையாக இன்று வரையிலும், வேறு எந்த ந‌டிகையாலும் முறியடிக்கமுடியாத பல சரித்திர சாதனைகளைப் படைத்தவர் “கலைச்செல்வி” ஜெயலலிதா.

ஜெயலலிதா நடித்த முதல் தமிழ்ப்படம் வெண்ணிற ஆடை. அப்போது அவருக்கு வயது 16. வெண்ணிற ஆடை படத்தின் கதை, வசனங்களை எழுதி தயாரித்து, இயக்கியவர் ஸ்ரீதர். தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களீல் ஒருவரான ஸ்ரீதர் முதலில் இந்தப் படத்திற்காக ஹேமாமாலினியை தேர்வு செய்திருந்தாராம். பிறகு ஹேமாமாலினியை விட நடிப்பிலும், நடனத்திலும் திறமையான புதுமுகம் வேண்டும் என்பதற்காக ஜெயலலிதாவை தேர்வுசெய்து அறிமுகப்படுத்தினார்.

ஜெயலலிதா முதன்முதலில் நடிக்கத் தொடங்கிய படம் வெண்ணிற ஆடை என்றாலும், அந்தப் படம் ரிலீஸாவதற்கு முன்பாகவே சின்னத கொம்பே, மனே அலியா ஆகிய இரண்டு கன்னட படங்கள் வெளியாகிவிட்டன. எனவே அதிகாரப்பூர்வமாக ஜெயலலிதாவின் முதல் படம் 1964-ல் வெளியான கன்னட படமான சின்னத கொம்பே. அதற்கு முன் ஜெயலலிதா முன்னாள் குடியரசுத் தலைவர் வி.வி..கிரியின் மகன் சங்கர் கிரி இயக்கிய “EPISTLE” என்ற ஆவண படத்திலும், ஸ்ரீ ஷைல மஹாத்மே என்ற கன்னட படத்தில் குழந்தை நட்சத்திரமாக சிறிய கதாப்பாத்திரத்திலும் தோன்றியிருந்தார். பல மேடை நாடகங்களிலும் நடித்தவர் ஜெயலலிதா. தன் தாயாருடன் இணைந்து கதாநாயகியாக அவர் நடித்த UNDER SECRETARY என்ற நாடகம் பெயர் வாங்கிக்கொடுத்தது. அந்த நாடகத்தில் ஜெயலலிதாவின் ஜோடியாக நடித்தவர் சோ.ராமசாமி.

பிறகு வெண்ணிற ஆடை படம் 1965-ல் வெளியானதும் ஜெயலலிதா தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமானார். அடுத்த ஒரே வருடத்துக்குள் அதாவது 1966-க்குள் ஜெயலலிதா 23 திரைப்படங்களில் ஒப்பந்தமானார். அந்த 23 படங்களில் ஒன்றுதான் ஆயிரத்தில் ஒருவன். முதன்முதலாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக இயக்குநர்-தயாரிப்பாளர் பி.ஆர்.பந்துலுவால் ஒப்பந்தம் செய்யப்பட்டார் ஜெயலலிதா. அந்தத் தருணத்தில் தான் ஓர் வரலாறு தொடங்கியது. ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா இணைந்து நடித்த அனைத்து படங்களும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றன. 1965 தொடங்கி 1973-ம் ஆண்டில் வெளியான பட்டிக்காட்டு பொன்னையா வரையில் எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா இணைந்து நடித்த 28 படங்களும் வசூலைக் குவித்தன.

ஜெய்ஷங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன் என்று அந்தக்கால தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நட்சத்திரங்களோடும் நடித்தார் ஜெயலலிதா. என்.டி.ராமாராவ், நாகேஸ்வரராவ் போன்ற தெலுங்கு சினிமா முன்னோடிகளுடனும் நடித்து வெற்றி பெற்றார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனோடு அவர் 17 திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆனால் அவர்கள் இருவரும் இணைந்து நடித்த முதல் படமான மோட்டார் சுந்தரம்பிள்ளை திரைப்படத்தில் சிவாஜியின் மகளாக நடித்திருந்தார் ஜெயலலிதா.

சிவாஜி - ஜெயலலிதா ஜோடி சேர்ந்த பட்டிக்காடா பட்டணமா திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றது. அதே படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றார் ஜெயலலிதா. சந்திரோதயம், அடிமைப் பெண், எங்கிருந்தோ வந்தாள் மற்றும் தெலுங்கு படமான ஸ்ரீ கிருஷ்ண சத்யா ஆகியவையும் அவருக்கு பிலிம்பேர் விருதுகளைப் பெற்றுத்தந்தன. தங்கக்கோபுரம், ராமன் தேடிய சீதை, சூரியகாந்தி, திருமாங்கல்யம், யாருக்கும் வெட்கம் இல்லை ஆகிய படங்களுக்காக தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருது அவரைத் தேடி வந்தது. இதில் திருமாங்கல்யம் அவரது 100-வது திரைப்படமாகும்.

மேலும் அந்தத் திரைப்படத்தில் மூன்று பாடல்களைப் பாடி, பாடகியாகவும் அசத்தியிருப்பார் ஜெயலலிதா. திருமாங்கல்யம், சூரியகாந்தி போன்ற படங்களில் அவர் பாடியிருந்தாலும், இன்றளவும் அவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் நடித்த அடிமைப் பெண் படத்தில் பாடிய அம்மா என்றால் அன்பு பாடல் தான் அவரது ரசிகர்களின் மறக்கமுடியாத விருப்பப்பாடலாக உள்ளது.

ஓர் நடிகையாக எண்ணற்ற சாதனைகள் புரிந்தவர் ஜெயலலிதா. சினிமா உலகில் ஒரு படம் 25 வாரங்கள் தொடர்ந்து வசூல் வெற்றியோடு ஓடினால் சில்வர் ஜூப்ளி எனப்படும். ஜெயலலிதா கதாநாயகியாக நடித்த 92 தமிழ்ப் படங்களில் 85 படங்கள் சில்வர் ஜூப்ளீ ஹிட்டாகின. இதன்மூலம் 80 வருட தமிழ் சினிமா பேசும் பட வரலாற்றில் வெற்றிகரமான கதாநாயகி என்ற யாராலும் முறியடிக்க முடியாத சாதனை மகுடம் ஜெயலலிதாவிற்கே சொந்தம். அதுமட்டுமல்லாமல் 28 தெலுங்கு சில்வர் ஜூப்ளி ஹிட்டுகளையும் தந்தவர் அவர்.

இவற்றுக்கெல்லாம் மேலாக, 1965-ம் ஆண்டிலிருந்து 1980-ம் ஆண்டு சினிமாவிலிருந்து விலகி அரசியலில் இணையும் வரையில், ஒட்டுமொத்த இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகி என்ற உச்சநட்சத்திரத்துக்கான பெருமையை தன்னகத்தே தக்கவைத்துக்கொண்ட சாதனையாளர் ஜெயலலிதா. 1967-ல் அவருக்கு காவிரி தந்த கலைச்செல்வி என்ற பட்டம் வழங்கப்பட்டது. அப்போதிருந்து பல படங்களில் அவரது பெயர் ‘கலைச்செல்வி’ ஜெயலலிதா என்றே குறிப்பிடப்பட்டது.

சினிமா துறையில் தொடர் வெற்றிகளை குவித்த ஜெயலலிதா, 1980-ம் ஆண்டு நதியைத் தேடி வந்த கடல் என்ற திரைப்படத்தோடு சினிமாக்களில் தோன்றுவதை நிறுத்திக்கொண்டார். இரண்டாண்டு இடைவெளிக்குப் பிறகு 1982-ல் அதிமுகவில் இணைந்து தன் அரசியல் வாழ்வைத் தொடங்கினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close