[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

முதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சை கடந்துவந்த பாதை... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் இன்று வரை

cm-jayalalithaa-s-apollo-days

நாட்டின் தலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரது கண்களும் அப்போலோவை நோக்கியே இருக்கின்றன. மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அப்போலோவில் முதலமைச்சருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இரண்டு மாதங்களுக்கு மேலாக, தொடர் சிகிச்சையில் இருக்கிறார் முதலமைச்சர். அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, தொடர்ந்து, பல்வேறு நலத்திட்டங்களையும், மெட்ரோ ரயில் உள்ளிட்ட திட்டங்களையும் தொடங்கி வைத்த முதலமைச்சர் ஜெயலலிதா, ஒருநாள் இரவில் திடீரென உடல்நலக் குறைவால் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக்குறைபாடு என முதலில் அப்போலோ தரப்பில் கூறப்பட்டது. அன்றைய தினம் முதல், தற்போது வரை, ஒரே மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவற்றை ஒருமுறை திரும்பி பார்ப்போம்.

கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி இரவு 10.30 மணி அளவில், உடல்நலக் குறைவால் சிகிச்சைக்காக முதலமைச்சர் ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்சத்துக் குறைபாடு என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அன்றைய தினம் முதலாக, அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி, செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, முதலமைச்சர் ஜெயலலிதா பூரண உடல்நலத்துடன் இருப்பதாகவும், அரசு அலுவல்களை மேற்கொள்வதாகவும் கூறினார்.

நீர்ச்சத்து குறைபாடு, காய்ச்சலுக்கு சிகிச்சை என கூறிவந்த அப்போலோ, அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி, நோய்தொற்றுக்கான சிகிச்சை முதலமைச்சருக்கு வழங்கப்படுவதாக கூறியது. மேலும், அன்றைய தினம் வெளியிட்ட மருத்துவமனை அறிக்கையில், லண்டன் புனித தோமையார் மருத்துவமனை டாக்டர் ரிச்சர்டு பீலேவின் ஆலோசனையின்படி சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறியது. முதலமைச்சரின் உடல்நிலை குறித்து பல்வேறு ஐயங்கள் கிளம்பியதால், அப்போலோ மருத்துவமனை, அக்டோபர் 7ஆம் தேதி விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், முதலமைச்சருக்கு, செயற்கை சுவாசக் கருவி உதவியுடன், நுரையீரல் தொற்றுக்கான சிகிச்சை, ஊட்டச்சத்து மேம்பாட்டு சிகிச்சை, பொது மருத்துவ சிகிச்சை ஆகியவை அளிக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது. பின்னர் மீண்டும், அடுத்தடுத்த நாட்கள் கடந்துபோயின. நவம்பர் மாதம் மூன்றாம் தேதி, அப்போலோ மருத்துவமனை குழுமத் தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி, முதலமைச்சர் தன்னைச் சுற்றி நடப்பவை குறித்து அறிந்திருப்பதாகவும், தன்னைச் சுற்றி நடப்பது குறித்து தெளிவான புரிதலோடு இருப்பதாகவும் கூறினார்.

நவம்பர் 13ஆம் தேதி, முதலமைச்சர் ஜெயலலிதா கையெழுத்திட்ட கடிதம் ஒன்று வெளியானது. அதில், தொண்டர்களின், பொதுமக்களின் பிரார்த்தனையால் மறுபிறவி எடுத்திருப்பதாகவும், பூரண நலம் பெற்று வழக்கமான மக்கள் பணிக்குத் திரும்பத் தயாராக இருப்பதாகவும், கடிதத்தில் முதலமைச்சர் தெரிவித்திருந்தார். தமிழகத்தின் மூன்று தொகுதி, புதுச்சேரியில் ஒரு தொகுதிக்கு தேர்தல் நடைபெற்ற நவம்பர் 19ஆம் தேதி அன்று, நிகழ்வு ஒன்றில் பேசிய அப்போலோ குழுமத் தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி, செயற்கை சுவாசக் கருவி உதவியின்றி முதலமைச்சர் ஜெயலலிதா சுவாசிப்பதாகவும், விரைவில் குணமாகி, விரும்பும்போது அவர் வீடு திரும்புவார் என்றும் கூறினார்.

இந்த நிலையில், நேற்று நான்காம் தேதி அதிமுக சார்பில் அதன் அமைப்புச் செயலாளர் பொன்னையன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, முதலமைச்சர் பூரண நலம்பெற்று விட்டதாகவும், தொடர்ந்து பல நாட்களாக மருத்துவமனையில் இருந்ததால், அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் கூறினார். ஆனால், நேற்று மாலையே முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அப்போலோ அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், முதலமைச்சரின் உடல்நிலை குறித்து மாலை வெளியான தகவல் உண்மையில்லை என மறுப்புத் தெரிவித்து அப்போலோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close