பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 174 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி கேப்டன் மகமதுல்லா பவுலிங் செய்ய தீர்மானித்தார். இதனையடுத்து இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்களில் சஃபியூல் இஸ்லாம் பந்துவீச்சில் 2 ரன்களுக்கு அவுட் ஆனார்.
இவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஷிகார் தவான் 16 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 19 ரன்னில் வெளியேறினார். பின்னர் கே.எல்.ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் டி20 போட்டிகளில் தனது 6ஆவது அரை சதத்தை பதிவு செய்தார். இவர் 35 பந்துகளில் 7 பவுண்டரிகளின் உதவியுடன் 52 ரன்கள் விளாசினார். இவர் அல் அமின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
எனினும் மறுமுனையில் ஸ்ரேயாஸ் ஐயர் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். குறிப்பாக அஃபிஃப் ஹோசைன் வீசிய 15ஆவது ஓவரின் முதல் மூன்று பந்துகளிலும் சிக்சர் அடித்து அசத்தினார். அதே ஓவரில் டி20 போட்டிகளின் வரலாற்றில் தனது முதல் அரை சத்தையும் ஸ்ரேயாஸ் ஐயர் பூர்த்தி செய்தார். இதனைத் தொடர்ந்து ரிஷாப் பன்ட் இந்தப் போட்டியிலும் சரியாக விளையாடாமல் 9 பந்துகளில் 6 ரன்களுடன் வெளியேறினார். ஸ்ரேயாஸ் ஐயர் 33 பந்துகளில் 5 சிக்சர்கள், 3 பவுண்டரிகளின் உதவியுடன் 62 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இறுதியில் மணிஷ் பாண்டே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 13 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் குவித்தார்.20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது. பங்களாதேஷ் அணி வெற்றிப் பெற்ற 175 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.