[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

தோனி எனும் மிகப்பெரிய கண்ணாடி பிம்பம் உடைபடுகிறதா ?

dhoni-image-is-shattering-down-because-of-his-performance-in-world-cup

இந்தியக் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இருந்த கேப்டன்களில் மிகச் சிறந்தவர் தோனி. அதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது. 2007 டி20 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பை, 2013 ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை என இந்திய அணிக்காக தலைமையேற்று வெற்றிகளை குவித்தது ஏராளம். இவையெல்லாம் மகேந்திர சிங் தோனி எனும் கேப்டன் இந்தியாவுக்காக வாங்கிக் கொடுத்தது. அவரின் தலைமையின் கீழ் இந்திய அணி பல புதிய மாற்றங்களுக்கு வித்திட்டது. ஆனால், ஒரு பேட்ஸ்மேனாக தோனி எப்படி ? என காலங்கள் கடந்து இப்போது விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளது. இது தேவையா..? தேவையில்லையா..? என்ற விவாதம் ஒரு பக்கம் சென்றுக்கொண்டிருக்க, இதற்கு எரியும் திரியில் எண்ணெய் ஊற்றியவர் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்.

தோனியை போல சச்சினுக்கும் இன்று வரை ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்தியாவின் தலைச் சிறந்த கேப்டனாக தோனி இருந்தார் என்றால் இந்திய அளவில் மட்டுமல்ல உலகளவில் தலைச் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தவர் சச்சின் டெண்டுல்கர். இன்றளவும் கோலி முதல் ஜோ ரூட் வரை சச்சினின் சாதனைகளை உடைக்க பேட்டிங்களில் கலக்கி கொண்டிருக்கிறார்கள். ஆப்கானிஸ்தான் உடனான ஆட்டத்தின் போது தோனி - ஜாதவ் மிகவும் பொறுமையாக ஆடினார்கள், இது தனக்கு ஏமாற்றமளித்ததாக சச்சின் கூறியிருந்தார்.

Image result for dhoni sachin

இது குறித்து விரிவாக கருத்து தெரிவித்த சச்சின் "இந்திய அணியின் ஆட்டத்தைக் கண்டு ஏமாற்றமடைந்தேன். இன்னும் நன்றாக ஆடியிருக்கலாம். தோனி- கேதர் ஜாதவ் பார்ட்னர்ஷிப் எனக்கு மகிழ்ச்சியாக இல்லை. அவர்கள் மிகவும் மெதுவாக ஆடினார்கள். அது நேர்மறையான ஆட்டம் இல்லை. 34 ஓவர்கள் ஸ்பின் பந்துகளை சந்தித்து 119 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளோம். விராத் கோலி ஆட்டமிழந்த பின், 45 வது ஓவர் வரை அதிகமான ரன்கள் சேர்க்கவில்லை. மிடில் ஆர்டரில் சிறப்பாக ஆடி, அதிக ரன்கள் சேர்த்திருக்கவேண்டும்" என்றார்.

Image result for dhoni sachin

இதற்கு சமூக வலைத்தளங்களில் தோனி ரசிகர்கள் சச்சின் டெண்டுல்கரை கடுமையாக வசைப்பாட ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் தோனி - சச்சின் ரெக்கார்டுகளை ஒப்பிட்டு மீம்ஸ்களும் பதிவிட்டனர். ஒரு கட்டத்தில் தோனி ரசிகர்களும் சச்சின் ரசிகர்களும் கடுமையாக வார்த்தை போர்களில் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் ஈடுபட்டனர். ஆனால், தோனி குறித்த விமர்சனத்துக்கு இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறுகையில் " தோனி மிகவும் சிறந்த பேட்ஸ்மேன். இந்த உலகக் கோப்பை தொடரிலேயே தோனி தன் மீது எழுந்துள்ள விமர்சனங்களுக்கு ஆட்டத்தின் மூலம் பதிலளிப்பார்" என கூறியுள்ளார். கங்குலி இப்படி கூறியதில் ஆச்சரியம் ஏதும் இல்லை ஏன் என்றால் கங்குலி கேப்டனாக இருந்தபோதுதான் தோனி இந்திய அணிக்குள் நுழைந்தார், அவருக்கு வாய்ப்பும் வழங்கப்பட்டது.

தோனி என்ற பேட்ஸ்மேன்....

தோனியின் ஆட்டத்திறன் மீது யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் அவரின் ஆட்ட நுணுக்கங்கள் குறித்த சந்தேகத்தை எப்போதும் கிரிக்கெட் விமர்சகர்கள் வைப்பார்கள். தோனி அதிரடியாக விளையாடக் கூடியவர் என்பதால் நுணுக்கங்கள் அவ்வளவு அவசியமில்லை, ஆனால் அதிரடியாக ஆட முடியாத சூழ்நிலையில் அணி இருக்கும்போது பேட்டிங் நுணுக்கங்கள் ஒரு பேட்ஸ்மேனாக அவசியமாகிறது. இப்போதெல்லாம் ஐபிஎல் போட்டிகளை தவிர தோனி இந்திய அணிக்காக அதிரடியாக விளையாடி பார்த்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலே ஆகிறது. 2017-ம் ஆண்டு கட்டாக்கில் இங்கிலாந்துக்கு எதிராக  139 ரன்கள் சேர்த்தார் தோனி. அதன்பின் இன்னும் ஒரு போட்டியில் கூட சதம் அடிக்கவில்லை.

Image result for dhoni failure

2018 இல் தோனி ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. ஆனால் இந்தாண்டு தொடக்கத்தில் ஆஸி மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான தொடர்களில் மூன்று அரை சதங்கள் அடித்தார் அவ்வளவுதான். கடந்த இரு ஆண்டுகளாக சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் மிக மோசமான பேட்டிங் ஃபாரம் வைத்திருப்பவரைதான் உலகக் கோப்பை அணியில் நாம் சேர்த்துள்ளோம். ஏன் என்றால் இப்போதுள்ள இந்திய அணிக்கு ஒரு சீனியர் தேவைப்படுகிறது. கோலிக்கு ஒரு வழிக்காட்டி தேவைப்படுகிறது. தோனி என்கின்ற லட்சுமி வெடி பேட்டிங்கில் எப்போது வெடிக்கும் என்று தெரியாது. எனவே, தோனி எப்போதும் இந்திய அணிக்குள் இருந்தால் பலம் என்று பிசிசிஐ உறுதியாக நம்புகிறது, ரசிகர்களும் நம்புகிறார்கள்.

Image result for dhoni failure

உலகக் கோப்பையில் தோனி...

2007 உலகக் கோப்பை தொடரில் ராகுல் டிராவிட் தலைமையில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. அப்போது இந்திய அணிக்காக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தோனிதான் இருந்தார். இந்தியா ஆடிய 4 போட்டிகளில் தோனி 3 போட்டிகளில் விளையாடினார் அதில் பங்களாதேஷ்க்கு எதிராக 0, பெர்முடாவுக்கு எதிராக 29, இலங்கைக்கு எதிராக 0. மொத்தம் 29 ரன்தான் எடுத்தார். 2011 உலகக் கோப்பை வென்றதற்கு கேப்டனாக இருந்தார் தோனி. கடைசி ஆட்டத்தில் 91 ரன்கள் எடுத்தார். 2015 உலகக் கோப்பைக்கும் தோனிதான் கேப்டன் அந்த தொடரில் அரையிறுதி வரை சென்றது இந்தியா. அத்தொடரில் தோனி 8 ஆட்டங்களில் 233 ரன்களை மட்டுமே எடுத்தார்.

எப்படி கூட்டிக் கழிச்சு பார்த்தாலும் சச்சின் தோனி மீது வைத்த விமர்சனம் நூற்றுக்கு நூறு உண்மை. அதற்காக சச்சின் டெண்டுல்கரின் பேட்டிங்குடன் தோனியின் பேட்டிங்கை ஒருபோதும் ஒப்பிட முடியாது. சச்சின் கிளாஸ் என்றால் தோனி மாஸ் அவ்வளவுதான். தோனி மீது இந்திய ஊடகங்களும், முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் ஒரு மிகப்பெரிய கண்ணாடி பிம்பத்தை இத்தனை ஆண்டுகாலம் உருவாக்கிவிட்டார்கள். இப்போது அந்த கண்ணாடி பிம்பத்தின் மீது ஒரு கல் விழுந்துள்ளது, அது நொறுங்காமல் பார்த்துக்கொள்வது தோனியின் கையில்தான் இருக்கிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close