[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS மேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

‘ட்ரீம் லெவன்’ எனும் கிரிக்கெட் ரசிகர்களின் ‘மாய உலகம்’

dream-11-game-whats-are-the-reality

‘ட்ரீம் லெவன்’ என்ற வார்த்தை கிரிக்கெட் தெரியாதவர்களுக்கு புதிதாக இருக்கும். ஆனாலும் அலுவலங்களில் கிரிக்கெட் பார்க்கும் சிலர் பேசிக்கொள்ளும் போது, கேள்விப்பட்டிருக்க வாய்ப்புண்டு. இந்தியாவில் மட்டும் அங்கீகாரம் பெற்றுள்ள இந்த மொபைல் செயலி மூலம் கிரிக்கெட், கால்பந்து மற்றும் ஹாக்கி ஆகிய போட்டிகளில் பணம் கட்டி விளையாட முடியும். 
ஆனாலும் இதில் பங்கேற்பவர்களில் பெரும்பாலானோர் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே பணம் கட்டி விளையாடுகின்றனர். சாமனியர் ஒருவரிடம் இந்த ‘ட்ரீம் லெவன்’ பற்றி விரிவாக எடுத்துக்கூறினால் ‘சூதாட்டம்’ என ஒரே வார்த்தையில் சொல்லிவிடுவார். ஆனாலும், ரூ.10 ஆயிரத்திற்கு மேல் இதில் ஜெயிப்பவர்களிடம் 30% வரி பிடித்தம் செய்யப்படுவதால், இது அரசின் அனுமதி பெற்றே இயங்குகிறது.

ஐபிஎல் நேரங்களில் இந்த ‘டீரிம் லெவன்’ செயலி மிகுந்த பிசியாக இருக்கும். தற்போது உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்று வருவதால், அந்த பிசி தொடர்கிறது. இந்தச் செயலில் ரூ.10, ரூ.17 எனத் தொடங்கி ரூ.5 ஆயிரம், பத்தாயிரம் வரை பணம் கட்டி விளையாடலாம். 15 லட்சம் பேர் பங்கேற்கும் போட்டி, ஒரு லட்சம் பேர் பங்கேற்கும் போட்டி, 40 ஆயிரம் பேர் பங்கேற்கும் போட்டி எனப் பல வகைகள் இதில் உண்டு. 

இதுதவிர மூன்று பேர் பங்கேற்கும் போட்டி, ஒத்தைக்கு ஒத்தை ஆகிய போட்டிகளும் உள்ளன. இந்தச் செயலி இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதற்கு முதல் காரணம், எளிமையான தொகையை செலுத்தி சூதாட முடியும் என்பதுதான். அதுமட்டுமின்றி உங்களுடன் சேர்ந்து சூதாடும் நபர்களை நீங்கள் இதற்கு முன்னர் அறிந்திருக்க கூட மாட்டீர்கள். அவர்கள் யாரோ, நாம் யாரோ..! இதனால் பணம் விவகாரத்தில் எந்தப் பிரச்னையும் வாராது.. அதுமட்டுமின்றி இந்தச் செயலிக்கான விளம்பரத்தில் கிரிக்கெட் வீரர் தோனி நடித்ததால், இதன் மீதான நம்பிக்கை ரசிகர்களுக்கு ஏற்பட்டது.

ஒரு கிரிக்கெட் போட்டி தொடங்கும் அதே நேரத்தில், ஒரு ‘டீரிம் லெவன்’ போட்டி தொடங்கும். அது முடிந்தால், இதுவும் முடிந்துவிடும். கிரிக்கெட் போட்டியில் இரு அணிகளையும் சேர்த்து 22 பேர் விளையாடுவார்கள். ஆனால் இதில் 11 பேர் கொண்ட அணியை மட்டுமே போட்டியாளர்கள் தேர்வு செய்ய முடியும். அதிலும் கட்டுப்பாடுகள் உண்டு. 1லிருந்து 4 கீப்பர்கள் வரை தேர்வு செய்யலாம். 3லிருந்து 6 பேட்ஸ்மேன் வரை தேர்வு செய்யலாம். 1லிருந்து 4 ஆல்ரவுண்டர்கள் மற்றும் 3லிருந்து 6 பவுலர்களை தேர்வு செய்யலாம். இந்த எல்லைக்குட்பட்டு 11 பேரை தேர்வு செய்ய வேண்டும். இதிலும் 100 பாய்ண்ட்டுகள் மட்டும் கொடுக்கப்படும். அதற்கு ஏற்றாற்போல்தான் வீரர்களை தேர்வு செய்ய முடியும். நீங்கள் தேர்வு செய்த கிரிக்கெட் வீரர்கள் அன்றைய போட்டியில் விளையாடுவதை பொறுத்து உங்கள் வெற்றி தீர்மானம் செய்யப்படும். 

இந்தப் போட்டியில் பங்கேற்று பெருந்தொகையை வெற்றி பெறுவது என்பது ‘குறிஞ்சி மலர்’ பூப்பது போலதான். ஏனென்றால் நாம் எடுக்கும் 11 பேரில் ஒருவர் சரியாக விளையாடாமல் போனாலும் அதிக தொகையை வெல்வது சாத்தியமற்றது. இருப்பினும் இந்தப் போட்டிக்கு கிரிக்கெட் ரசிகர்கள் விரும்பக் காரணம், சிறு தொகையை கட்டி பங்கேற்கும் போது, பாதி ரேங்கிற்கு வந்தால் கட்டிய தொகை கைக்கு வந்துவிடும் என்பதுதான். 

அதற்குமேல் ரேங்குகள் பெரும் பட்சத்தில் படிப்படியாக உங்கள் வெற்றிப் பணம் உயரும். சிறுதொகை தானே என நினைக்கும் ரசிகர்கள், ‘முடியை கட்டி மலையை இழுக்கும்’ கதையாக இதனை விளையாடுகிறார்கள். ஆனால் உண்மையில் இந்தப் போட்டியில் ஒவ்வொரு முறையும் தோல்வியை சந்திக்காமல் வெற்றி பெறுவது ‘டீரிம் லெவன்’ செயலியின் நிறுவனம்தான்.

உதாரணத்திற்கு, 16 லட்சம் பேர் ரூ.49 கட்டி ஒரு ‘டீரிம் லெவன்’ போட்டியில் பங்கேற்கிறார்கள் என்றால், பந்தயத்தில் குவியும் மொத்த தொகை ரூ.7.84 கோடி. இந்தத் தொகையில் ரூ.6 கோடியை 10 லட்சம் பங்கேற்பாளர்களுக்கு ‘ட்ரீம் லெவன்’ பரிசாக பிரித்துக் கொடுத்துவிடுகிறது.  மீதமுள்ள ரூ.1.84 கோடி கம்பெனிக்குதான். 

எப்படி பார்த்தாலும் பெரும் லாபம் கம்பெனிக்குதான். இருப்பினும் என்றாவது ஒருநாள் நாம் முதலிடம் வந்து ரூ.20 லட்சம் அல்லது ரூ.25 லட்சத்தை வென்றுவிடலாம் என்ற கனவில் இதனை கிரிக்கெட் ரசிகர்கள் தொடர்கின்றனர். இது அடிப்படையில் சூதாடும் எண்ணத்தை பெருக்கிறது என சமூக ஆர்வலர்கள் குறை கூறுகின்றனர். அதுமட்டுமின்றி போட்டி நடந்து கொண்டிருக்கும் போது, தான் தேர்வு செய்த வீரர் (கேப்டன், துணை கேப்டன்) அவுட் ஆகிவிட்டால், எதார்த்தமாக கிரிக்கெட் பார்ப்பவர்களைவிட, ‘டீரிம் லெவனில்’ போட்டியாளர்கள் அதிகம் உணர்ச்சிவசப்படுகிறார்கள்.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close