[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

பாரதியாரின் சிஷ்யர் நெல்லையப்பரின் பள்ளிக்கு நேர்ந்த அவலம் 

parali-nellaiappar-school-special-story

‘அங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ என்றார் பாரதி. அந்தப் பாரதியின் உற்ற நண்பராக இருந்தவர் பரலி சு நெல்லையப்பர். இவர்தான் பாரதியின் படைப்புக்களை முதன்முதலாக அச்சிட்டு வெளியிட்டவர். அன்று முதல் பாரதியின் கொள்கை வீரராக தன் வாழ்க்கையை வாழத் தொடங்கியவர்.. பரலி சு நெல்லையப்பருக்கு பாரதி எழுதிய கடிதம் உலக வரலாற்றில் மாபெரும் காவியம். ‘தம்பி ஏதோ செய்வேனடா’ என உரிமை பொங்க தன் வறுமை வாழ்வுக்கு உதவி கேட்டு பரலிக்குதான் பாரதி கடிதம் போட்டார். பரலி பெரும் செல்வந்தர் இல்லை. வ.உ.சி. கப்பல் கம்பெனியில் ஒரு கணக்குப் பிள்ளை. ஒரு சாதாரண பொருளாதார பின்புலம் கொண்ட மனிதர்.

ஒரு பக்கம் பாரதிக்கு தம்பி. இன்னொரு பக்கம் வ.உ.சிக்கு சிஷ்யன். ஒரே நேரத்தில் பிரிட்டீஷாரின் இரட்டைப் பகையை சம்பாதித்தவர் நெல்லையப்பர். ‘லோகோபகாரி’ உட்பட சில பத்திரிகைகளை வாங்கி நடத்திய பின் நெல்லையப்பர் வறுமை வாழ்வுக்குத் தள்ளப்பட்டார். ஆனாலும் நெல்லையப்பரின் சுயமானம் சுருண்டுவிடவில்லை. தன்மான வாழ்வு வாழ்ந்தார். சென்னையிலுள்ள குரோம்பேட்டை பகுதில்தான் அவர் வாழ்ந்தார். 

அவர் தனக்கு சொந்தமான 5 ஆயிரம் சதுர அடி நிலத்தை தன் மறைவுக்குப் பிறகு பள்ளியாக நடத்த வேண்டும் என்று கூறி உயில் எழுதி வைத்தார். அதன் படி அங்கே ஆரம்பள்ளி தொடங்கப்பட்டது. அதில் 1998 வரை 800க்கும் மேற்பட்ட பிள்ளைகள் படித்து வந்தனர். அதன் பிறகு அந்தப் பள்ளியின் வருகைப் பதிவு சரியாக இல்லை என்று நகராட்சி நிர்வாகம் மூடி விட்டது. அதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து 20 ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். தியாகி நெல்லையப்பரின் உயில்படி மீண்டும் அங்கே கல்வி சாலை திறக்க முயற்சி செய்து வருகிறார்கள். மனு மேல் மனு போட்டும் பயனில்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள். ஆகவே அதனை அறிந்த குமரி ஆனந்தன் மீண்டும் பள்ளியை தொடங்க கோரிப் போராட்டத்தை கையில் எடுத்துள்ளார். இந்தப் பிரச்னை குறித்து அவர் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

“இந்தியா சுதந்திரம் பெற்றதும் ராஜாஜி, நெல்லையப்பரின் தியாக வாழ்வை மதித்து அரசிடமிருந்து 100 ரூபாய் உதவி தொகை பெற்று தந்தார். ஆனால் காமராஜர் அப்படியில்லை. ஒருநாள் காமராஜர் வீட்டுக்கு முன் ஒரு பெண் கையேந்தி கண்ணீர் வடித்தார். ‘ஐயா, ஒரு வயதான முதியவர் வறுமையில் உழல்கிறார். அவர் சாதாரண மனிதர் இல்லை. இந்த உலகை உய்விக்க வந்த உத்தமர். அவருக்கு உதவுங்கள்’ என்றார். உடனே காமரார் என்ற கர்மயோகி புழுப்போல் துடிக்கிறார். தேசத்தியாகிக்கு இந்தக் கதியா என்று குரோம்பேட்டையில் 5 ஏக்கருக்குக்கு குறைவான நிலம் அவருக்கு ஒதுக்கினார். 

அன்று நெல்லையப்பருக்காக உதவிக் கேட்டு நின்றவர் வேறு யாருமல்ல பாரதி புதல்வி சகுந்தலாதான். அந்த நிலத்தை தன் வாழ்நாள் வறுமையைப் போக்க கொஞ்சம் நெல்லையப்பர் விற்றார். கொஞ்சம் பட்டியலின மக்கள் மேம்பாட்டிற்காக எழுதி கொடுத்தார். மீதம் இருந்த 5 ஆயிரம் சதுர அடியை ஏழைப் பிள்ளைகள் கல்விக்குப் பாட சாலை பயில எழுதிக் கொடுத்தார்”  எனப் பெருமையாக கூறுகிறார் குமரி ஆனந்தன்.  

இப்போராட்டத்தில் ஈடுப்பட்டு வருபவர் ஒரு மூத்த எழுத்தாளரிடம் பேசினோம். “இந்த நிலம்தான் இப்போது சமூக விரோதிகளின் கூடாரமாகி விட்டது. 20 ஆண்டுகளாக போராட்டம் நீடிக்கிறது. அங்கே ஏழைக்கு எழுத்தறிவு வழங்கப்படவில்லை. கல்வி கடவுள் சரஸ்வதி தன் வீணையை மீட்டவில்லை. நகராட்சி நிர்வாகம் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் மைதானமாக அதனை மாற்ற முயற்சி எடுத்தது. அதனை அப்பகுதி மக்களாகி பொதுமக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்” என்கிறார் அந்த எழுத்தாளர் சிகரம் செந்திநாதன். 

நெல்லையப்பரின் கல்வி கனவு மீண்டும் உயிர்ப்பு பெறுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close