[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்

நயன்தாரா எனும் ’’தனி ஒருத்தி’’

an-article-about-actress-nayanthara

சமீப காலமாக திரைத்துறையில் நிறைய நேர்மறையான விஷயங்கள் அரங்கேறி வருகின்றன. அந்தக் காலங்களில் கதாநாயகர்களின் பெயரால் மட்டுமே ஒரு திரைப்படம் மக்களிடம் போய்ச் சேர்ந்தது. ஆனால் தற்போதெல்லாம் படத்தில் பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் ஒரு ரசிகர்கள் வட்டம் இருக்கிறது. கதாநாயகர்களும் அதில் அடக்கம் அவ்வளவு தான். எத்தனை பெரிய ஹீரோவாக இருந்தாலும் முதல் நாளுக்கு பிறகு படத்திற்கு கூட்டம் வர வேண்டுமென்றால் படம் நன்றாக இருக்க வேண்டும். அதற்கு பல உதாரணங்களை சொல்லலாம். பெரிய எதிர்ப்பார்ப்புடன் வந்த பெரிய நடிகர்களின் படங்கள் கண்டும் காணாமல் போனதும், எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி திரைக்கு வந்து பெரிய வெற்றி அடைந்த சிறிய பட்ஜெட் படங்களும் உண்டு. இது ஒரு ஆரோக்ய நிலை என்றால், கதாநாயகர்களுக்கு இணையாக கதாநாயகிகளும் வளர்ந்து வருவது கவனிக்கத்தக்க மற்றொரு விஷயம்.

அந்தக் காலங்களில் கதாநாயகிகள் ஒரு காட்சிப்பொருளாகவே திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டனர். காதல் காட்சிகளுக்கும், பாடல்களுக்குமே கதாநாயகிகள் என்ற நிலை இருந்த காலமும் உண்டு. தற்போது அந்த நிலை முழுவதுமாக மாறிவிட்டது என்ற கூறிவிட முடியாது என்றாலும் வேகமாக மாறிவருகிறது என்பது உண்மை. சாவித்ரியாக நடித்த கீர்த்தி சுரேஷ், வெளிவர இருக்கும் குயின் ரிமேக் படத்தில் காஜல் அகர்வால் என பல உதராணங்கள் இருந்தாலும், 'சோலோ ஹீரோயின்' படம் என்றால் முதலில் நினைவுக்கு வருவது நயன்தாரா.

2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படம் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமானார் நயன்தாரா. ஒரு கிராமத்து பின்னணியில் உருவான அத்திரைப்படத்துக்கு அப்படியே பொருந்தி போனார். கிராமத்தில் கை நீட்டினால் நயன்தாரா போல் ஒரு பெண் இருப்பார் என்று சொல்லுமளவுக்கு கிராமத்து பெண்ணாக இருந்தார். அதே வேளையில் தெலுங்கு மலையாளம் மொழிகளிலும் நடித்து வந்தார். தமிழில் மெல்ல மெல்ல கிராமத்துப்பெண் என்ற பார்வையை உடைத்தார் நயன்தாரா. வல்லவன், ஈ, பில்லா உள்ளிட்ட பட படங்கள் அவரை வேறு கோணத்தில் காட்டத்தொடங்கின. 

இதற்கிடையே காதல் உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கி திரைத்துறையில் தன் வேகத்தை குறைத்துக்கொண்டார். தன்னைச் சுற்றிய சர்ச்சைகளை சமாளித்து மீண்டும் களத்தில் குதித்த நயன்தாராவுக்கு ஆதவன், பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி, ஆரம்பம், தனி ஒருவன் உள்ளிட்ட படங்கள் பெரிய அளவில் கைகொடுத்தன. திரையுலகுக்கு வந்து 10 வருடங்களைக்கடந்திருந்த நயன்தாரா தனக்கென ஒரு தனித்துவமான ஸ்டைலை பின்பற்ற தொடங்கினார். அது தான் கதாநாயகியை மட்டுமே முக்கிய கதாபாத்திரமாக கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்கள். 

படத்தை முழுக்க கதாநாயகியே தாங்கிச்செல்லும் போக்கு பாலிவுட்டில் தடம் பதித்தது. வித்யாபாலன், கங்கனா உள்ளிட்ட கதாநாயகிகள் கதநாயகர்களுக்கு இணையாக பாலிவுட்டை கலக்கினர். அதே ஸ்டைலை முன்னிறுத்தி தமிழில் களம் இறங்கினார் நயன்தாரா. மாயா, டோரா, அறம், கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் என நயன்தாரா, கதையை மட்டுமே நம்பி நடிக்கத் தொடங்கினார். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்தது. இது தான் ஸ்டைல் என்று கணிக்க முடியாத அளவுக்கு ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசம் காட்டியதே நயன்தாராவின் வெற்றி. 

மாயா, டோராவில் பயந்த முகத்தை காட்டிய அவர், அறம் படத்தில் அதிகாரமாக குரலை உயர்த்தினார். கோலமாவு கோகிலா அதற்கு நேர் எதிராக எடுக்கப்பட்ட நகைச்சுவை படமாக அமைந்தது. பெரிய கதாநாயகி என்ற இமேஜ் வரம்பு எதுவும் வைக்காமல் கதைக்கு தேவைப்படும் போதும் நகைச்சுவை நடிகருடன் கூட டூயட் பாடினார். அடுத்து த்ரில்லர் மூவியாக அமைந்த இமைக்கா நொடிகளில் அதிரடி காட்டினார். இந்த வரிசையில் நேற்று ட்ரைலர் வெளியான ஐரா படமும் சேர்ந்துள்ளது.  இரு வேறு லுக்குகள், முகத்தில் பயம் என ஐராவை தாங்கி நிற்கிறார் நயன்தாரா. அடுத்து வெளிவரக்கூடிய கொலையுதிர் காலம் திரைப்படத்திலும் நயன்தாராதான் முக்கிய கதாபாத்திரம்.

படத்தில் கதாநாயகி இருக்கவேண்டும் என்ற போக்குமாறி கதாநாயகியை மட்டுமே மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்கள் திரைத்துறைக்கு ஆரோக்யமான நிலை தான். அதை முன்னெடுத்து சென்றுக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. அவரை பின்பற்றி மற்ற கதாநாயகிகளும் 'சோலோ ஹீரோயின்ஸ்' திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதே சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close