[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

இந்திய கிரிக்கெட்டின் புதிய சுவர்: ’நின்று’ சாதிக்கும் புஜாரா!

pujara-a-new-wall-in-indian-cricket

இந்திய கிரிக்கெட் அணியின் சுவர், ஆகியிருக்கிறார் புஜாரா. ‘நின்று’ சாதிப்பதில் ராகுல் டிராவிட்டுக்குப் பிறகுதான் இவர்தான் என்கிறது மொத்த கிரிக்கெட் உலகமும்.

‘’ஒரு நாள் போட்டியிலோ, டி20-யிலோ அடித்து ஆடுவது ஒருவகை என்றால் டெஸ்ட் போட்டிகளில் ஆடுவது தனிக் கலை. டி20 போட்டிகளில் சாதிப்பவர்களால் டெஸ்ட்டில் சாதிக்க முடிவது கடினம். ஏனென்றால் இது தனித்துவமானது. இதற்கு நிதானமான மனவலிமை வேண்டும்’’ என்கிறார் முன்னாள் வீரர் ஒருவர்.

அது உண்மைதான். வருகிற பந்துகளை எல்லாம் விளாசி, 50 பந்தில் நூறு ரன், 20 பந்தில் 50 ரன் என பதம் பார்ப்பவர்களால், பந்துகளைத் தேர்வு செய்து விரட்டுவது எளிதல்ல. மனதளவில் எல்லா பந்துகளையும் அடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஓரங்கட்டி வைத்துவிட்டு, பொறுமை யாக, பொறுப்பாக, நிதானமாக ஆடுவதுதான் டெஸ்ட். இதற்கு பொறுமைதான் பெருமை சேர்க்கும். அதாவது, சுவர் போல நிற்பது. அப்படி நிற்பதில் பெருமை சேர்க்கிறார், புஜாரா!

அதனால்தான் ஆஸ்திரேலிய அணியின் இளம் பேட்ஸ்மேனான மார்னஸ் லாபுஸ்சாங், ’’இவரை போல ஆடணும்னு ஆசை’’ என்கிறார். ‘’கிளாஸ் பேட்ஸ்மேன், புஜாரா. களத்துல அவ்வளவு பொறுமையா, நீண்ட நேரம் களத்துல நின்னு அர்ப்பணிப்போட அவர் ஆடறதைப்
பார்த்தா, நிறைய கத்துக்கலாம் தோணுது’’ என்கிறார். இப்படி பொறுமையின் சிகரமாக புஜாரா இருப்பது இன்றோ, நேற்றோ வந்ததல்ல. சிறு வயதிலேயே அவர் அப்படித்தான் என்கிறார்கள். 

14 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியிலேயே, முச்சதம் அடித்தவர் புஜாரா. அப்போதே, வருங்காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியில் இவர் முக்கியமானவராக  இருப்பார் என்றார்கள். அதை நிறைவேற்றியிருக்கிறார் இப்போது! பின்னர் 19 வயதுக்கு உட்பட்டோருக் கான போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக டபுள் செஞ்சுரி அடிக்க, முதல் தரக் கிரிக்கெட்டுக்குள் வந்தார் புஜாரா. அதிலும், நின்று கலக்கினார். இரண்டு இரட்டை சதமும் ஒரு முச்சதமும் அடித்திருந்த அவரை, 2010-ல் இந்திய அணிக்கு கொண்டு வந்தது தேர்வுக் குழு. ஆஸ்திரேலியா வுக்கு எதிராக அப்போது இந்தியாவில் நடந்த தொடரில், முதல் இன்னிங்ஸில் வெறும் 4 ரன்னில் அவுட் ஆகிவிட்ட புஜாரா, அடுத்த இன்னிங் ஸில் 72 ரன் எடுத்தார். இந்த டெஸ்ட்டில் இந்தியா வெற்றி பெற அவரது 72 உதவியது. 

இந்திய கிரிக்கெட்டின் முந்தைய சுவரான, ராகுல் டிராவிட், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற, அந்த இடம் புஜாராவின் கையில் தானாக வந்து அமர்ந்தது. அதை அப்படியே தத்தெடுத்துக்கொண்ட அவர், ராகுல் டிராவிட்டுக்கு வழங்கப்பட்ட சிறப்பு பெயரான ’சுவரை’யும் தனதாக்கிக் கொண் டார். 

வெளிநாட்டு ஆடுகளங்களில் நின்று ஆடுவது எல்லோராலும் முடியாத விஷயம். அதில் கில்லாடி, ராகுல் டிராவிட். அவருக்கான அந்த பெயரை யும் தனக்கு சொந்தமாக்கி இருக்கும் புஜாரா, பொறுமைக்கு மனவலிமையை எப்படி பெற்றார்?

‘’உழைப்பு. கடின உழைப்பு. கிரிக்கெட்தான் எனக்குத் தெரியும். என்னை நிலை நிறுத்திக்க அதுக்கான பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டேன். அது எனக்கு பலன் கொடுக்குது’’ என்கிறார், இந்த ராஜ்கோட்காரர்! 

ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருந்த புஜாரா, அதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. பிறகு டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்டாக தன்னை உயரத்திக் கொண்டார். 

ஆஸ்திரேலியாவில் தற்போது நடந்துவரும் டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளை இந்தியா வெல்ல காரணமாக இருந்தவர் இவர்தான். இந்தத் தொடரில் அவர் மூன்று சதங்களை விளாசியிருக்கிறார். வெறும் ஏழு ரன்னில், மூன்று இரட்டைச் சதம் விளாசியவர் என்ற பெருமையை இழந்திருக்கிறார். இருந்தாலும் இந்தத் தொடரில் இன்னும் சில சாதனைகளை செய்திருக்கிறார் புஜாரா.

ஆஸ்திரேலிய தொடரில் அதிக பந்துகளை (1245) சந்தித்த வெளிநாட்டு வீரர் என்ற பெருமை இவருக்கு கிடைத்திருக்கிறது. இன்னும் ஒரு இன் னிங்ஸ் இருப்பதால் இது இன்னும் அதிகரிக்கலாம். அதோடு இந்த தொடரில் இதுவரை 1868 நிமிடங்கள் களத்தில் நின்றிருக்கிறார். இதற்கு முன் கவாஸ்கர் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக1978 நிமிடங்கள் களத்தில் நின்றிருக்கிறார். இதே போல அவரது பக்கங்களில் சாதனைகள் ஏறிக்கொண்டே இருக்கிறது. 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா, 18 சதங்களை விளாசியிருக்கிறார். அவர் இன்னும் சாதிப்பார் என்கிறார்கள், முன்னாள் வீரர்கள். 

’’கிரிக்கெட் ஸ்பிரிட் அப்படிங்கறது, நீங்க கொடுக்கிற வழிகாட்டல்களால வர்றது கிடையாது. அது வேற’’ என்று ஒருமுறை சொல்லியிருந்தார் தோனி. அது புஜாராவுக்கு அப்படியே பொருந்தும் என்கிறார்கள், சில முன்னாள் வீரர்கள்!

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close