[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை

ஆணவக் கொலை முதல் மறுமணம் வரை ! கவுசல்யா எனும் போராளி

the-rebel-path-of-gowsalya-after-she-humiliated-by-the-honor-killing-of-her-husband-shankar

தமிழகம் பல ஆணவப் படுகொலைகளை பார்த்திருக்கிறது. இளவரசன், கோகுல்ராஜ் என இந்தப் பட்டியல் நீளும். ஆனால் உடுமலைப்பேட்டை சங்கரின் ஆணவப் படுகொலை வழக்கு தனித்துவமானது. இந்தப் படுகொலை சம்பவம் நீதிமன்றம் வரை சென்று தீர்ப்பும் இரண்டு ஆண்டுகள் முடிவடைவதற்குள் கிடைத்துவிட்டது. குற்றவாளிகள் யாரும் ஜாமீனில் ஒருமுறை கூட விடுவிக்கப்படவில்லை. ஆணவப் படுகொலை விவகாரங்களில் நாட்டிலேயே முதல்முறையாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தூக்குதண்டனை அதிக அளவில் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காரணங்களுக்காக மட்டும் சங்கர் படுகொலை விவகாரம் சிறப்பானது என சுறுக்கி விடமுடியாது. இவை எல்லாவற்றையும் விட ஒரு இளம் பெண் கவுசல்யா தனது கணவரின் கொலைக்காக நீதி கேட்டு நீதிமன்றம் ஏறி அந்த அனுபவம் தந்த படிப்பினையில் அவர் இன்று போராளி பெண்ணாக இந்தத் தமிழ் மண்ணில் அசைக்க முடியாத அடையாளத்தைக் கட்டி எழுப்பியிருக்கிறார். அதுதான் இங்கே மிக சிறப்பு வாய்ந்தது. இப்போது அதே வேகத்துடன் பறையிசை கலைஞரான சக்தியை இன்று மறுமணம் செய்து கொண்டார். 

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு நடுவேதான் இந்தத் தீர்ப்பு வெளியானது. கவுசல்யாவின் தந்தை உள்ளிட்ட 6 பேருக்கு மரண தண்டனை அளிக்கப்படுகிறது. தீர்ப்பு வெளியான பின்னர் நீதிமன்ற வளாகத்தில் நின்று கொண்டிருந்த செய்தியாளர்களிடம் கவுசல்யா பேசுகிறார். அப்போது, உங்கள் தந்தையை குற்றவாளி என்று நீதிபதி தெரிவித்திருக்கிறாரே அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்ப, அதற்கு “ குற்றவாளியை குற்றவாளி என்றுதான் கூற முடியும்” என்று பளிச்சென கூறுகிறார் கவுசல்யா. அவரது தெளிவு அந்த இடத்தில் மிகவும் கூர்மையாக வெளிப்பட்டது. 

தண்டனை அறிவிக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போதும் தவறி ஒருமுறை கூட அம்மா அன்னலட்சுமி, அப்பா சின்னசாமி என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை. விடுவிக்கப்பட்டவர்களை  எதிர்த்து மேல்முறையிடு செய்வேன் என்று கவுசல்யா உறுதியாக கூறினார். விடுவிக்கப்பட்டவர்களில் அவரது தாயும் உள்ளார். தந்தைக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் தனது தாய்க்கு தண்டனை கிடைக்கும் வரையும் ஓயமாட்டேன் என்றார் கவுசல்யா. அப்படி என்றால் தனது காதல் கணவரை பலிக் கொடுத்த பெண்ணாக மட்டும் இருந்திருந்தால் இப்படி அவரால் பேசியிருக்க முடியாது. சங்கர் படுகொலை செய்யப்பட்ட போது இருந்த கவுசல்யா இல்லை அவர்.

தற்போது அவர் அறிவு தளத்திலும், பக்குவத்திலும் பல படங்கு முன்னேறிய பெண்மணியாக மாறியுள்ளார். அதற்கு மற்றுமொரு உதாரணம் அவரது பேச்சில் நம்மால் காண முடியும். அதன் அடையாளமாக “ தூக்கு தண்டனை குறித்த எனது கருத்து, வேறாக இருந்தாலும் இனி சாதி வெறியர்கள் கௌரவக் கொலை செய்ய  இந்தத் தீர்ப்பு பெரும் மனத்தடையையும், அச்சத்தையும்  ஏற்படுத்தும்” என்கிறார். இந்த வழக்கில் தொடக்கம் முதலே கவுசல்யாவுக்கு உறுதுணையாக இருந்த எவிடென்ஸ் கதிர் தீர்ப்புக்கு பின்,.“இந்த வழக்கில் வெற்றி  பெற்றே தீர வேண்டும் என்ற கவுசல்யாவின் ஆளுமைதான் இந்தத் தீர்ப்பு வரக் காரணம்”.

ஆவணப்படம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கவுசல்யா, “நான் இன்னும் அந்த சிசிடிவி காட்சிகளை பார்க்கவில்லை. பார்க்கும் தைரியம் எனக்கு இல்லை” என்று உருக்கமாக பேசி இருந்தார். இது கவுசல்யாவின் இளகிய மனதையும், சங்கர் மீதான அவரது காதலையும் தெளிவாக காட்டுகிறது. இந்தப் பேச்சை கேட்பவர்கள் என்ன இவர் தாய், தந்தை என்றுகூட பார்க்காமல் குற்றவாளி என்று பேசுகிறாரே என விமர்சித்தால் அவை எல்லாம் அபத்தமான பேச்சுகள்தான். ஒன்று மட்டும் நம்மால் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. சங்கருடன் காதலியாக, மனைவியாக வாழ்ந்த கவுசல்யா இப்போது இல்லை. உயிருக்கு உயிராக நேசித்த தன்னுடைய காதல் கணவனை இழந்த பிறகு கவுசல்யா புதிய பெண்ணாக உருவாகியுள்ளார்.

சங்கர் இறந்து ஒரு வருடம் 8 மாதங்கள் உருண்டோடிவிட்டன. இந்த 20 மாதங்களில் கவுசல்யாவிடம் எவ்வளவோ மற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இணையதளங்களில் அவர் பேசிய வீடியோக்கள் பல இன்றும் காணக்கிடைக்கின்றன. அதனை பார்த்தால் கவுசல்யாவிடம் ஏற்பட்ட மாற்றங்களை நம்மால் ஒரு வரைபடமிட்டு உணர முடியும். பெரியார், சுயமரியாதை இன்னும் எத்தனை எத்தனை வார்த்தைகளை அவர் உச்சரிக்கிறார். அவர் முகம் அதை அழகாக வெளிப்படுத்துகிறது. அகத்தின் அழகு என்பது அதுதான். இப்பொழுது அவர் சமூக செயல்பாட்டாளர் கவுசல்யா. ”யாரை நேசித்து, என்னுடைய வாழ்நாள் முழுவதும் உடன் இருப்பார் என்று நினைத்து வாழ்க்கையை தொடங்கினேனோ அவரை சாதி கொன்றுவிட்டது. அந்தச் சாதியை எதிர்த்து போராடுவதுதான் என்னுடைய வாழ்வின் நோக்கம்” என்கிறார் அவர்.

தன்னுடைய கணவர் சங்கரின் பெயரில் தலித் குழந்தைகளுக்கு என தனி பயிற்சி மையம் ஒன்றினை நடத்தி வருகிறார். குழந்தைகளுக்கு பள்ளிப் பாடத்தோடு, சமூக கல்வியையும் கற்றுக் கொடுக்கிறார்.  தன்னை தற்காத்துக் கொள்ளும் நோக்கில் கராத்தே கற்றுக் கொண்டும் வருகிறார். பறை இசை கற்றுக் கொண்டு வருகிறார். பல்சர் பைக் ஓட்டுகிறார்.பெரியார், அம்பேத்கரின் புத்தகங்களை தொடர்ச்சியாக வாசித்து வருகிறார். வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் சமூகநீதிக்கான பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டு, சாதிக்கு எதிராக தனது குரலை பதிவு செய்து வருகிறார். மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு பேரணி, பெரியார் திடலில் நடைபெற்ற சாதி ஒழிப்பு மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து பேசி வருகிறார். கணவனை பறிகொடுத்த பின்னர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல், பொதுவெளியில் சமூக செயற்பாட்டாளர்களுடன் தொடர்ச்சியாக இயங்கி வருகிறார். 

அவருடைய இந்த மாற்றத்திற்கு பின்னாள் இடதுசாரி அமைப்புகள், எவிடென்ஸ் கதிர் உள்ளிட்ட சமூக செயல்பாட்டளர் பலரும் உள்ளனர்.  “சங்கர் உயிரோடு இருந்திருந்தால் இதே வீரத்தோடு தொடர்ந்து சாதிய ஆதிக்கத்திற்கு எதிராக போராடிக் கொண்டிருந்திருப்பேன், ஆனால் நான் ஒரு சமூக செயல்பாட்டாளராக மாறியிருக்க மாட்டேன். சங்கரின் மரணம் என்னை வேறொரு ஆளாக மாற்றியுள்ளது” என்ற அவரது பேச்சு இங்கு முக்கியமனது.

சங்கரின் படுகொலைக்கு பிறகு பலரும் கவுசல்யாவுக்கு நிதி உதவி செய்தார்கள். அரசு தரப்பிலும் நிதியுதவி வழங்கப்பட்டு வந்தது. இருப்பினும் தனது சொந்த முயற்சியில் படித்து தேர்வு எழுதி மத்திய அரசு வேலையில் தற்போது கவுசல்யா உள்ளார். அவர் நீண்ட முடியை கத்தரித்தது குறித்தும் அதை வளர்க்காமல் தவிர்த்தற்கான காரணங்களை அவர் விளக்கும் சித்தாந்தங்கள் அவரது மனத் தெளிவை காட்டுகின்றன. அவர் ஒரு சமூக செயற்பாட்டாளர் என்பதை உறுதி செய்கிறது.  கவுசல்யா கடந்து வந்தப் பாதை நமக்கு தெளிவுபடுத்துவதும் இதைதான். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close