[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கேரள அரசு வழங்கும் நீரை தமிழக அரசு ஏற்க மறுத்ததாக வந்த தகவலில் உண்மையில்லை - அமைச்சர் வேலுமணி
  • BREAKING-NEWS தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்னை குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மாமூல் வசூல், லஞ்சம் வாங்கும் போலீசார் மீது லஞ்ச ஒழிப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உள்துறை செயலர், டிஜிபி 4 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
  • BREAKING-NEWS வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தண்ணீர் பிரச்னைக்காக திமுக அறிவித்துள்ள போராட்டம் ஒரு கபட நாடகம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS ஜூன் 24ம் தேதி காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத்தில் இருந்து 53 உறுப்பினர்களை நீக்கிய நடைமுறை சரியே - சென்னை உயர்நீதிமன்றம்

பெற்றோர்களே குழந்தைகளைக் கொல்லும் கொடூரம்?- விளக்கம் தரும் மனநல ஆலோசகர்

dr-abilasha-explains-about-parents-stress-and-how-to-sort-out-this-issue

“குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்”

தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையைச் சுவைக்காதவரே குழலின் இசை இனியது, யாழின் இசை இனியது என்கிறார் திருவள்ளுவர்.

ஆனால் சமீப காலமாக குழந்தைகளை பெற்றோர்களே கொலை செய்வது வேதனைக்குரிய செய்தியாகியுள்ளது. 10 மாதம் சுமந்து பெற்ற குழந்தையை நொடிப்பொழுதில் கொன்றுவிடும் அளவுக்கு அவர்கள் மனம் கடும்பாறையாகி விடுவது ஏன்..?  கணவர் இல்லாமல் வேறு ஒருவருடன் ஏற்பட்ட உறவு காரணமாக தான் பெற்ற இரண்டு குழந்தைகளுக்கு விஷம் வைத்து கொன்றதாக குன்றத்தூர் அபிராமி கைதாகி இருக்கிறார். குழந்தைக்கு பால் கொடுக்கும்போது மார்பில் ஏற்பட்ட வலியை கணவரிடம் எடுத்துச் சொன்னபோதும், கணவர் கண்டுகொள்ளாத காரணத்தினால் 2 மாத குழந்தையை கொன்றாக வேளச்சேரி உமா சிறையில் இருக்கிறார்.

இப்போது மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக தான் பெற்ற இரண்டு மகள்களை கோவை பத்மநாபன் கொலை செய்திருக்கிறார் என்கிறது காவல்துறை. கணவன் ஏமாற்றி தன்னை இரண்டாவது திருமணம் செய்தது தெரியவந்ததால் பிறந்து 18 நாட்களே ஆன குழந்தையை கொன்றுவிட்டதாக பழி ஒன்று காசிமேடு செலஸ்டின் மீது விழுந்திருக்கிறது. குடும்ப பிரச்னை காரணமாக இரண்டு பெண் குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார் தேனியை சேர்ந்த ராம்பிரியா.

இப்படி ஏகப்பட்ட பெற்றோர்கள் குழந்தைகளுக்கு எமனாக மாறிய சம்பவங்கள் தமிழ்நாட்டில் அரங்கேறியுள்ளன. ஆசை ஆசையாக வளர்த்த குழந்தைகளை பெற்றோர்களே கொல்வதற்கு முக்கிய காரணமாக அமைவது குடும்ப பிரச்னைதான். இந்த மனநிலைக்குள் இவர்கள் போக என்ன காரணம்? இந்தப் போக்கை மாற்றுவது எப்படி? விவரிக்கிறார் மனநல ஆலோசகர் அபிலாஷா.

(அபிலாஷா- மனநல மருத்துவர்)

“குழந்தைகளை பெற்றோர்களே கொல்வதற்கு பல காரணங்கள் உள்ளன. தங்கள் ஆதாயத்திற்கு கொல்வது, கணவர் அல்லது மனைவி மீதோ விரக்தி ஏற்படும்போது நம் குழந்தைகள் தானே என்று நினைக்காமல் குழந்தை அவரோட வாரிசுதானே என நினைத்து கொல்வது, தகாத உறவுகள் நீடிக்க முடியாமல் போவதற்கு குழந்தைகள் தடையாக இருப்பதால் அவர்களை கொல்வது, நானே சாகப்போகிறேன்; அப்படியிருக்க குழந்தைகள் மட்டும் இந்த உலகத்தில் ஏன் கஷ்டப்பட வேண்டும்?  அவர்களை யார் பார்த்துக் கொள்வார்கள்? தனிமையில் அவர்களை விட்டுச் செல்ல வேண்டாமே என்ற எண்ணத்தில் கொல்வது என பல்வேறு காரணங்கள் இதற்குள் ஒளிந்திருக்கின்றன” என்கிறார் அபிலாஷா.

மேலும் அவர், “இதற்கெல்லாம் காரணம் மனநிலை பிரச்னைதான். நம்முடைய பிரச்னைகளை சொல்வதற்கு ஒரு ஆள் இல்லையே என தவிப்பது. இவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்கிறோமே என்ற எண்ணத்தில் கிடந்து உழல்வது. ஒரே விஷயத்தை மனதில் நினைத்து நினைத்து வேதனை அடைவது. இப்படியாக பல காரணங்கள் மனநிலை பிரச்னை உருவாக காரணங்களாக இருக்கின்றன. 

பெரும்பாலான நேரத்தில் மற்றவர்களை விட குழந்தைகளே எளிதாக பெற்றோர்களின் கோவத்திற்கு ஆளாகிவிடுகிறார்கள். 
பெற்றோர்கள் எதையாவது உட்கொள்ள கொடுத்தால் குழந்தைகள் அதை ஆராய்ச்சி செய்வதில்லை. வாங்கி அப்படியே குடிக்கவே செய்வார்கள். இந்த ஒரு விஷயத்தை பெற்றோர்கள் தங்களுக்கு சாதகமாக்கி கொள்கிறார்கள். மிருகங்கள் கூட தங்களின் குட்டியை பாதுகாப்புடன் வைத்திருக்கும். ஆனால் சில பெற்றோர்கள் சுயநலம் படைத்தவர்களாக இருந்துவிடுகின்றனர். பெற்றோர்களுக்கான அர்ப்பணிப்பு, தியாகம் அறவே இல்லாமல் இருக்கின்றனர். தங்களின் சந்தோஷத்தையே மட்டுமே பிரதானமாக நினைக்கிறார்கள். குழந்தைகளை கொன்றால் தங்களின் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இப்படி செய்து விடுகிறார்கள்.

மக்களிடம் விழிப்புணவு இல்லாமல் இருப்பது, பொருளாதார பிரச்னை, நோய் நொடிகள் அதிகமாக இருப்பது, உறவுகள் தூரத்தில் இருப்பது, மனக் கசப்புகளை சொல்ல ஆள் இல்லாமல் போவது, உறவுகள் சிதைந்து கிடப்பது என ஏகப்பட்ட காரணங்கள் பெற்றோர்களின் இந்த மனநிலைக்கு காரணமாக உள்ளன.

அப்படி மனதில் ஏதாவது சஞ்சலம் ஏற்படுமாயின் உடனே மனநல மருத்துவர்களிடம் சென்று கவுன்சிலிங் பெற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் நம் ரகசியங்களை வெளியே சொல்விடுவார்களே என்று பயப்படத் தேவையில்லை. முறையான கவுன்சிலிங் கொடுத்து நல்ல மனநிலைக்குதான் அவர்கள் உங்களை திருப்பிவிடுவார்கள். 

அத்துடன் மனநல மருத்துவரை பார்க்கச் செல்வதற்கு யோசிக்க வேண்டியதில்லை. குற்ற உணர்ச்சியும் கொள்ளத் தேவையில்லை. உங்கள் மனம் குழம்பியிருப்பதை போல நீங்கள் உணர்ந்தால் தைரியமாக மனநல மருத்துவரிடம் செல்லலாம். தேவையான ஆலோசனைகள் பெறலாம்” என்ற அபிலாஷா மீண்டும் தொடர்ந்தார்.

“எல்லாவற்றிற்கும் மேலானது தனிமனித ஒழுக்கம். அடுத்தவரின் பொருட்களுக்கு ஆசைப்படக்கூடாது எனக் குழந்தைகளுக்கு மட்டும் சொன்னால் போதாது. பெற்றோர்களும் அதனை பின்பற்ற வேண்டும். நாம் தனி மனித ஒழுக்கத்துடன் இருந்தால் நம்மால் அடுத்தவர்களுக்கு தொந்தரவு வராது. தேவையில்லாத மன உளைச்சல் வராது. வழிதவறி செல்வதற்கு வாய்ப்பு குறைவு. நல்ல துணி போட ஆசைப்படுகிறோம். ஜிம்மிற்கு செல்கிறோம். நாகரிகமாக வாழ்கிறோம். ஆனால் அதனைவிட எல்லாவற்றிக்கும் முக்கியமானது ஒவ்வொரு மனிதரும் தனிமனித ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். அதுவே நல்லதொரு சமூகத்தை உருவாக்கும்.” என்கிறார் மனநல ஆலோசகர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close