[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்
  • BREAKING-NEWS “மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
  • BREAKING-NEWS நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS குடியுரிமை மசோதாவில் மாற்றம் செய்யாவிடில் ஆதரவில்லை: உத்தவ் தாக்கரே

“தனிப்பட்ட வாழ்க்கை ஒரு பொருட்டல்ல” - நெல் ஜெயராமன் நெகிழ்ச்சி பேட்டி 

a-special-interview-with-nel-jayaraman

விவசாயத்தையே முழுமையாக நம்பியிருக்கும் டெல்டா பகுதியை கஜா புயல் கடுமையாக தாக்கியுள்ளது. கஜாவால் டெல்டாவே சீரழிந்து கிடக்கிறது. இந்நேரத்தில் இயற்கை விவசாய பண்ணையை உருவாக்கி நடத்தி வரும் நெல் ஜெயராமன்  டெல்டாவின் அருமை குறித்தும் பேசியுள்ளார்.

இந்து தமிழ் திசை நாளிதழுக்கு நெல் ஜெயராமன் கொடுத்த பேட்டியில் பல தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார். அதில்
நாம் மரபில் இழந்த விஷயங்களையெல்லாம் மீட்டெடுத்தால், அடுத்த பத்திருபது வருடங்களுக்குள் காவிரி விவசாயிகள் மீண்டும் தலை நிமிர்ந்துவிடுவார்கள். அதோடு, நம் தமிழ் மக்களும் நஞ்சில்லா உணவைச் சாப்பிடுவார்கள். இயற்கை வேளாண்மை இதற்கு நிச்சயம் வழிகாட்டும். அப்போது காவிரிப் படுகையின் முகமும் மாறும். அதற்கு நிறைய வேலை செய்ய வேண்டியிருக்கிறது. 

இதில் என்ன ஒரு வேதனை என்றால், நோய் என்னைக் கடுமையாகப் படுத்துகிறது. எனக்கு என்னுடைய குடும்பம், தனிப்பட்ட வாழ்க்கையெல்லாம் ஒரு பொருட்டல்ல. மக்களுக்காக ஓடுகிறோம். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால், நிறைய வேலை இருக்கும்போது பாதியைக்கூட முடிக்கவில்லையே என்ற கவலைதான் என்னைக் கடுமையாக வருத்துகிறது என்று நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

மேலும் இதுவரை 60க்கும் மேற்பட்ட நெல் ரகங்களை மீட்டிருப்பேன் என்றும், தமிழ்நாட்டிலேயே பாரம்பரிய நெல் ரகங்கள் அதிக அளவில் கிடைத்தது வேதாரண்யம், தலைஞாயிறு பகுதிகளில்தான் என்று தெரிவித்துள்ளார். பிறந்த பதினாறாவது நாள் காப்பரிசி தொடங்கி இறந்த பின் வாய்க்கரிசி வரை அரிசியும் நெல்லும் நம்மோடு ஒட்டி உறவாடுபவை. திருமணக் காலத்துக்கு முன்பு மாப்பிள்ளைச் சம்பா, பின்பு கருப்புக் கவுணி, மகப்பேறு காலத்தில் பூங்கார், குழந்தை பிறந்த பிறகு பால் குடவாலை, குழந்தைக்கு ஆறு மாதத்தில் முதல் உணவாக வாடன் சம்பா, மேலும் சாப்பாடு என்றில்லாமல் நம் வாழ்க்கையோடும் பண்பாட்டோடும் பின்னிப்பிணைந்தவை அரிசியும் நெல்லும்தான் என்று தெரிவித்தார்.

நெல் ரகங்கள் குறித்து பேசிய அவர், ஒடிஷாவின் மத்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராக இருந்த ரிச்சார்யா,  இந்தியா மொத்தம் இரண்டு லட்சம் பாரம்பரிய நெல் ரகங்களின் தாயகம். அவற்றில் இரண்டாயிரம் ரகங்களாவது நல்ல விளைச்சலைக் கொடுக்கக் கூடியவை. ஒரு ஹெக்டேருக்கு 7,500 கிலோ வரைக்கும் அறுக்கலாம் என்று அவர் ஒரு விஷயத்தை பல ஆண்டுகள் முன்பே நினைவு கூர்ந்ததாக தெரிவித்துள்ளார்.  

தனக்கு நெல் ரகங்களை மீட்டெடுக்கும் யோசனை எப்படி வந்தது என்பது குறித்தும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.“நுகர்வோர் இயக்கச் செயல்பாடுகள்தான் தொடக்கத்தில் என் களம். வெறும் ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த நான் ஐந்நூறுக்கும் மேற்பட்ட வழக்குகளைக் கையாண்டேன். 

‘ஏன் நாம் நஞ்சில்லாத உணவு நுகர்வோருக்குக் கிடைப்பதற்காகப் போராடக் கூடாது?’ என்று ஒரு நாள் கேள்வி எழுந்தது. நம்மாழ்வாரைத் தேடிப்போனேம். இப்படித்தான் அவருடன் என்னுடைய பயணம் தொடங்கியது. ஒரு முறை தமிழாசிரியர் ஒருவர் பாரம்பரிய நெல் ரகமான காட்டு யானத்தை நம்மாழ்வாரிடம் கொடுத்து, இதை நீங்கள் மீட்டெடுக்க வேண்டுமென்று தெரிவித்தார். 

''ஒரு நெல்ல மீட்டுட்டோம். இனி இப்படியான ரகங்கள் அத்தனையையும் மீட்டெடுப்போம்'' என்று சொன்னார் நம்மாழ்வார். அப்படியான 7 நெல் ரகங்களை சேகரித்து “இன்னையிலருந்து உங்களுக்கு நெல் ஜெயராமன்னு பேரு வைக்கிறேன். நம்முடைய பாரம்பரிய நெல் வகைகளைச் சேகரிங்க” என்று சொன்னார் நம்மாழ்வார். 

இதுவரை 174 ரகங்களை மீட்டெடுத்திருக்கிறோம். 41 ஆயிரம் விவசாயிகளிடம் இந்த ரகங்களைக் கொண்டு சேர்த்திருக்கிறோம்'' என்று தெரிவித்தார்.

கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கடும் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளான ஜெயராமன் தற்போது தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close