[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

‘20 ரூபாய் டாக்டரின் வியக்க வைக்கும் செயல்கள்’ - மனம் கலங்கும் பதிவுகள்

chennai-rs-20-doctor-die-some-sentiment-incidence

சென்னையில் உள்ள மந்தைவெளி பகுதியில் நேற்று முதல் பரவலாக பேசப்படும் விஷயம் ‘20 ரூபாய் டாக்டர் இறந்துட்டாராம்’ என்பதுதான். இதைப்பேசும் அனைவருமே, ‘அடப்பாவமே. நல்ல மனுஷன். காசே இல்லாம கூட மருத்துவம் பார்ப்பாரு’ என சோகத்தை பரிமாறிக்கொள்கின்றனர். நேற்று முன்தினம்  மதியம் கூட நன்றாக இருந்தவர், திடீரென மாலை நேரத்தில் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அடுத்த நாளே உயிரிழந்துவிட்டார். அவரது இறப்பு செய்தியை கேட்கும் பலருக்கும் இது நம்ப முடியாத அதிர்ச்சி சம்பவமாகவே இருக்கிறது.

நெல்லை மாவட்டம் மேலப்பாவூரில் 1942ஆம் ஆண்டு பிறந்தவர் ஜெகன்மோகன். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவம் பயின்றார். சேவை நோக்கத்தோடு கிளினிக் ஆரம்பித்து மருத்துவம் பார்த்து வந்த இவர், ஆரம்பக்காலத்தில் மக்களிடம் மருத்துவக்கட்டணமாக பெற்ற தொகை வெறும் ஒரு ரூபாய். பின்னர் நீண்ட மாதங்களுக்குப் பிறகு ரூ.2, அடுத்த சில வருடங்களுக்குப்பிறகு ரூ.5 கட்டணமாக பெற்று வந்துள்ளார். இவர் ரூ.5 கட்டணமாக பெறும் காலங்களிலேயே பல கிளினிக்குகளில் ரூ.100ஐ தாண்டிவிட்டது மருத்துவக்கட்டணம். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தான் ரூ.20 கட்டணம் பெறத்தொடங்கியுள்ளார் ஜெகன்மோகன். குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளித்து வந்ததோடு மட்டுமின்றி, வசதி இல்லாதோருக்கு தனது சொந்தப் பணத்தில் மேல்சிகிச்சை பெற ஏற்பாடுகள் செய்துதந்துள்ளார். 

இவரது மறைவு மந்தைவெளி மட்டுமின்றி பல பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் இவரிடம் சிகிச்சை பார்ப்பவர்கள் மந்தைவெளியை மட்டும் சேர்ந்த மக்கள் அல்ல. மணலி, எண்ணூர், திருவொற்றியூர், வேளச்சேரி உட்பட சென்னையின் பல பகுதிகளில் இருந்து இவரிடம் சிகிச்சை பெற்றுள்ள மக்கள் வருகை தந்துள்ளனர். அத்துடன் மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, வந்தவாசி, வேலூர் போன்ற வெளிமாவட்டங்களில் இருந்தும் சிகிச்சைக்காக பலர் வந்து செல்கின்றனர். அவரது மறைவிற்குப் பிறகு அந்த கிளினிக் நிலை குறித்து அறிய, புதிய தலைமுறை இணையதளம் சார்பில் சென்றிருந்தோம்

அப்போது ஜெகன்மோகனின் கிளினிக்கிற்கு வெளியே இருந்த அவரது இரங்கல் பேனரை சோகமாக பார்த்தபடி ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவரிடம் பேச்சுக் கொடுத்தபோது, “என் பெயர் மருதுபாண்டியன். நான் வேளச்சேரியில் இருந்து குடும்பத்துடன் ஜெகன்மோகனிடம் சிகிச்சை பெற்றுவந்தேன். ஆனால் நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் மந்தைவெளியில்தான். சிறுவயதில் எனக்கு உடம்பு சரியில்லை என்றால் இந்த டாக்டரிடம் தான், எனது பெற்றோர் அழைத்து வருவாங்க. அந்த நேரத்தில் அவர் ரூ.2 தான் கட்டணமாக வாங்குவார். எனக்கு மட்டுமில்ல, எனது குடும்பமே இவர்கிட்ட தான் சிகிச்சை எடுப்போம். யாருக்குமே ஊசியே போடமாட்டார். எந்த காய்ச்சலா இருந்தாலும், மருத்து மாத்திரை தான் கொடுப்பாரு. அதுலயே சரியாகிடும். 

அதுனாலேயே குழந்தைகளுக்கு இந்த டாக்டர ரொம்ப பிடிக்கும். தவிர்க்க முடியாத நிலைமையிலதான் இவர் ஊசியே போடுவாரு. கடந்த வாரம் கூட இவர பாத்துட்டு போனேன். நான் சின்ன வயசுல பார்க்கும்போது அவர் ஒரு இங்க் பென் (மை ஊற்றி எழுதும் பேனா) பயன்படுத்துவாரு. இப்பவும் அதே பேனா தான் பயன்படுத்துறாரு. இந்தப்பக்கம் வரும்போதெல்லாம் அவர ஒருதடவ பார்ப்பேன். அவர் இறந்த செய்தி இப்ப தான் தெரியும். தெரிஞ்ச உடனே மாலை வாங்கிப்போட்டு, பார்க்கலாம்னு வந்தேன். அவர் உடல அதுக்குள்ள கொண்டு போய்டாங்க. அவர் முகத்த பார்க்கமுடியல. அந்த சோகத்த என்னால இப்ப சொல்ல முடியல” என்று கலங்கினார். அவரது பேச்சில் ஒரு டாக்டரை இழந்ததைவிட, தனது குடும்பத்தில் ஒருவரை இழந்த சோகத்தை பார்க்க முடிந்தது.

அவரிடம் பேசி முடித்த பின்னர் கிளினிக்கிற்கு உள்ளே சென்றோம். சிலர் சோகத்துடன் பந்தலை பிரிப்பது, அங்கிருந்த நாற்காலிகளை ஓரமாக வைப்பது என வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தனர். அங்கிருந்த பெண்மனி ஒருவரிடம் தகவலைக்கேட்டோம். அந்தப்பெண் வேறு யாரும் இல்லை, ஜெகன்மோகனிடம் கடந்த ஆறு வருடங்களாக உதவியாளராக இருந்த டில்லிபாய் (41). அவர் கண்களில் அழுத ஈரம் கூட காயவில்லை. டாக்டரை பற்றி பேசத்தொடங்கியதும், மீண்டும் அழுகையை ஆரம்பித்தார். பின்னர் தன்னை தேற்றிக்கொண்டு பேச ஆரம்பித்தார். 

“என்னை அவர் பொண்ணு மாறி தான் பார்த்துப்பாரு. அவர் உடல்நிலை சரியா இருந்தபோது, எந்தநேரத்துல நோயாளிகள் வந்தாலும் சிகிச்சை பார்ப்பாரு. ஒருமுறை ஒருத்தர் வந்து வயிறு வலினு சொன்னத்துக்கு, தொட்டுப்பார்த்தே அப்பெண்டிக்ஸ் இருக்கு ஸ்கேன் பண்ணுங்கனு சொல்லிட்டாரு. ஸ்கேன் பண்ணிப்பார்த்தா அதே பிரச்னைதான். நான் ஆடிப்போய்ட்டேன். தொட்டுப்பார்த்தே சொல்லிட்டாரேனு. காசில்லாம யாரச்சும் வந்தாக்கூட சிகிச்சை செய்வாரு. அவங்களுக்கு மாத்திரை வாங்கவும் இவரே காசு கொடுத்து அனுப்புவாரு. எவ்வளவு நேரம் ஆனாலும் நோயாளிகள் கிட்ட பொறுமையா நடந்துக்குவாரு. என்னை பொறுமையா பேசனும்னு சொல்லுவாரு. அவர் இறந்ததுட்டார்னு என்னால இன்னும் நம்ப முடியல. இந்த கிளினிக்குள்ள அவர் இன்னும் இருக்குறா மாதிரியே தான் இருக்கு” எனக்கூறிவிட்டு மீண்டும் கண் கலங்கினார். 

அவர் மட்டுமல்ல, கிளினிக்கிற்கு வெளியே மேலும் பலர் வந்து, வந்து பார்த்துவிட்டு புலம்பிக்கொண்டு சென்றனர். அப்படி குழந்தைகளுடன் புலம்பிவிட்டு சென்ற ஒரு பெண்ணிடம் கேட்டபோது, “நாங்களாம் ஏழைங்கப்பா. எங்களுக்கு குறைந்த காசுல நல்ல சிகிச்சை இந்த டாக்டர் கொடுத்தாரு. இனிமே எங்க போய் சிகிச்சை பார்க்கப்போறோம். எல்லாரும் காசு தான் பறிப்பாங்க. அவர் இறந்துட்டாரு, உடலை எடுக்குறாங்கனு கூட தெரியாது. நிறைய பேருக்கு என்ன மாதிரி தகவல் தெரியல. தெரிஞ்சுறுந்தா கண்டிப்பா ஒரு கூட்டமே வந்துருக்கும்” என்று கூறிவிட்டு சென்றார். வாழும்போது நாம் செய்யும் சேவைகளே, இறந்த பின்னர் நாம் யார்? என்பதை கூறும் என்பதற்கு ஜெகன்மோகன் ஒரு உதாரணம்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close