[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS தனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

சூப்பர் ஸ்டார்களுக்கு ஏணியாய் திகழ்ந்த சாண்டோ சின்னப்பா தேவர்..!

sandow-m-m-a-chinnappa-devar-death-anniversary-special-article

பால், அரிசி, சோடா என பல வியாபாரங்களை பார்த்து விட்டு, ஜிம் ஆரம்பித்து ஸ்டண்ட் மேனாகி திரைக்கனவில் மிதந்த கட்டுமஸ்தான தேகத்துக்கு சொந்தக்காரர் சாண்டோ சின்னப்பா தேவர்.

எம்ஜிஆர் வற்புறுத்தலால் ராஜகுமாரி (1947) படத்தில் வாய்ப்பு பெற்று 45 ரூபாய் சம்பளத்திற்கு படத்தில் அற்புதமாக சண்டை போட்ட ஒரு துணை நடிகர். பின்னாளில் அவரை வைத்து அதிகமாக படங்கள் தயாரித்தவர் என்ற பெருமை பெறும் அளவுக்கு உயர்ந்தவர். தேவர் தயாரிப்பாளராகி தனது தம்பி எம்.ஏ. திருமுகத்தையே டைரக்டராக்கி எம்ஜிஆரை வைத்து முதன் முதலில் தயாரித்து 1956-ல் வெளியிட்ட ‘தாய்க்குப் பின் தாரம்’ சக்கை போடுபோட்டது. ஆனால் தெலுங்கில் எம்ஜிஆரை கேட்காமல் வெளியிட்டதில் தகராறு முளைத்தது.

உடனே வாள்வீச்சில் எம்ஜிஆருக்கு முன்பே பெயரெடுத்த முன்னணி நடிகர் ரஞ்சனை வைத்து ‘நீலமலை திருடன்’ எடுத்தார். பின்னர், கன்னட நடிகர் உதயகுமார், ஜெமினி கணேசேன், பாலாஜி போன்றோரை வைத்து அடுத்தடுத்து படங்களை கொடுத்தார். எம்ஜிஆரும் தேவரை கண்டுகொள்ளவில்லை, தேவரும் எம்ஜிஆரை கண்டுகொள்ளவில்லை.

இப்படிப்பட்ட சூழலில்தான் 1960-ல் அசோகனை வைத்து ‘தாய் சொல்லை தட்டாதே’ என்று ஒரு படத்தை ஆரம்பித்தார்.. பாடல்களெல்லாம் ரெக்கார்ட் ஆகிவிட்டன. பாடல்களை எதேச்சையாக கேட்ட எம்ஜிஆருக்கு வரிகளும் டியூனும் அற்புதமாய் தெரிந்தன. நைசாக கதையையும் கேட்டார். அங்குதான் பிடித்தது அசோகனுக்கு சனி. இந்த மாதிரி கதையெல்லாம் என்னை வெச்சி எடுக்கமாட்டீங்களா என்று எம்ஜிஆர் கேட்க, மனக்கசப்பு நீங்கி தேவர் சம்மதித்தார். விளைவு? அசோகன், படத்தில் வில்லனாக்கப்பட்டார். தாய் சொல்லை தட்டாதேவில் எம்ஜிஆர் ஹீரோவானார்.

1950-களில் எம்ஜிஆர் ஏராளமான படங்களில் நடித்தாலும் சமூகப்படங்கள் ஒன்றிரண்டைத் தவிர எல்லாமே வாட் சண்டைகள் நிறைந்த அரச கதை தான். 1936ல் இன்ஸ்பெக்டராக நடித்து அறிமுகமான எம்ஜிஆருக்கு மறுபடியும் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம் கொடுத்தது சின்னப்பா தேவர்தான். தாய்ச்சொல்லை தட்டாதே படத்தை தேவர் கச்சிதமாக தயாரித்து 1961-ல் வெளியிட்டு வெற்றியாக்கிய விதம் பல்வேறு இயக்குநர், தயாரிப்பாளர்களை மட்டுமின்றி எம்ஜிஆரையும் கவர்ந்தது.

படத்தின் பூஜை தினத்தன்றே ரிலீஸ் தேதியையும் சின்னப்பா தேவர் சொன்னபோது வியப்பு வராமல் என்ன செய்யும். ஆனால் சொன்னதை செய்து காட்டினார் தேவர். படங்களில் நடித்து முடித்து கொடுப்பதை கொஞ்சம் இழுவையாக செய்யும்போக்குள்ள எம்ஜிஆர் சின்னப்பாவின் தேவரின் ராணுவ கட்டுப்பாட்டை பார்த்து ஒழுங்கான ரூட்டிற்கு போயே ஆகவேண்டிய கட்டத்திற்கு தள்ளப்பட்டார். அதனால்தான் வருடத்திற்கு இரண்டு படங்கள் என எம்ஜிஆரை வைத்து எடுத்தார் தேவர்.

நல்லவன் வாழ்வான், சபாஷ் மாப்பிள்ளை, பாசம், மெகா ஹிட்டாகாமல் திணறிக்கொண்டிருந்த எம்ஜிஆருக்கு, தாய்ச்சொல்லை தட்டாதே, தாயைக்காத்த தனயன், குடும்பத்தலைவன், தர்மம் தலைகாக்கும், வேட்டைக்காரன் என வரிசையாய் ஹிட் படங்களாய் கொடுத்து எம்ஜிஆரை அடுத்த தளத்திற்கு கொண்டுபோனவர் சின்னப்பா தேவர்.

அதேபோல இசைக்கு கேவி மகாதேவன், பாடல்களுக்கு கண்ணதாசன், பின்னணி பாட டிஎம்ஸ், சுசீலா முக்கிய பாத்திரத்திற்கு எஸ்.ஏ.அசோகன் என தேவர் போட்ட நிபந்தனை வட்டத்தை எம்ஜிஆரால் தகர்க்கவே முடியவில்லை. தாய்க்குபின் தாரம் படத்தில் காளையுடன் சண்டை போட்ட எம்ஜிஆரை, புலி, சிங்கம், சிறுத்தை, குதிரை யானை என பல மிருகங்களுடன் நடிக்க வைத்தவர் தேவர். மிருகங்களை செல்லமாக வளர்த்த தேவர், அவைகளை வைத்து தானும் வளர்ந்தார்.

1962-ம் ஆண்டிலிருந்து 1968 வரை எம்ஜிஆர் ஒர் ஆண்டில் எத்தனை படங்களில் நடித்தாலும் அதில் இவரின் படங்கள் இரண்டு கட்டாயமாக இருக்கும். 1972ல் வந்த நல்லநேரம் படம்வரை மொத்தத்தில் 16 படங்கள். நல்லநேரம் என்றவுடன் இங்கே இன்னொரு சுவாரஸ்யமான தகவலையும் சொல்லவேண்டும். ஒரு கட்டத்தில் எம்ஜிஆர் ஒளிவிளக்கு, அடிமைப்பெண், நம்நாடு என பிரமாண்டமான வண்ணப்படங்களை நோக்கி நகர்ந்தபோது சின்னப்பாதேவர் அவரை நம்பியிருக்காமல் வேறு களத்தை அமைக்கத் தொடங்கினார்.


 
தெய்வச்செயல் என சுந்தர்ராஜனை ஹீரோவாக போட்டு ஏற்கனவே பிளாப் ஆன தனது படத்தின் கதையை தூசுதட்டி எடுத்துக்கொண்டு 1969ல் மும்பைக்கு பறந்தார். இந்தியில் முன்னணியில் இருந்த நடிகர் சஞ்சீவ் குமாரிடம் கதையை சொன்னார். அவருக்கு கதை பிடித்திருந்தாலும் ஒத்துக்கொள்ள முடியாத சூழல். இருந்தபோதிலும் அவர் தேவருக்கு யோசனை சொன்னார். ராஜேஷ் கண்ணா என்றொரு நடிகர் வளர்ந்து வருகிறார். அவரை வைத்து எடுத்தால் எல்லாவற்றிற்கும் சரியாக வரும் எனக்கூறினார்.

புகழ்பெறாத நடிகனாய் ஆராதனாவில் ராஜேஷ் கண்ணா நடித்துக்கொண்டிருந்த நேரம். ஒரே பேமான்ட்டாய் எடுத்த எடுப்பிலே சின்னப்பா தேவர் பெருந்தொகை கொடுத்தவுடன் ராஜேஷ் ஆடிப்போய்விட்டார். அப்போது மும்பையில் கட்டிவரும் புதிய வீட்டை தேவர் கொடுத்த பணத்தை வைத்து முடித்துவிடலாம் என்பதால் உடனே வாங்கிக்கொண்டார். யானைக்கும் ஒரு மனிதனுக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டம்தான் ராஜேஷ் கண்ணாவை வைத்து தேவர் எடுக்கத்தொடங்கிய ஹாத்தி மேரே சாத்தி படத்தின் கதை.

இந்த படத்திற்கு லக்ஷமிகாந்த்-பியாரிலால் இசையமைக்க வேண்டும் என்று தேவர் விரும்பினார். ஆனால் பயங்கர பிசியால் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.மும்பையில் பேச்சுவார்த்தை காத்துக்கொண்டிருந்த சமயம். லக்ஷ்மி காந்தின் குழந்தைக்கு அன்று இரவு பிறந்த நாள் பார்ட்டி நடக்கப்போகிறது என்பதை தேவர் தெரிந்துகொண்டார்.

உடனே ஒரு நகைக்கடைக்கு ஓடிப்போய் தங்க காசுகளை கை நிறைய வாங்கிக்கொண்டு பார்ட்டி நடந்த இடத்திற்கு அழையா விருந்தாளியாக போனார் தேவர். எல்லாரும் அதிர்ச்சி அடையும் வகையில் தங்ககாசுகளை குழந்தையின் தலையில் கொட்டி வாழ்த்தினார். லக்ஷ்மிகாந்தின் மனைவியிடம் தன் படத்திற்கு இசையமைக்க கணவரை வற்புறுத்துங்கள் என்றார். அவ்வளவு தான், ''இதோ பாருங்கள் இங்கே வந்திருப்பவர்களில் பலரும் பார்ட்டியில் குடிக்கவந்தவர்கள். ஆனால் இவரோ நம் செல்வத்தை தங்கத்தால் அபிஷேகம் செய்து வாழ்த்தியுள்ளார். இவர் படத்திற்கு இசையமைக்காவிட்டால் நடப்பது வேறு என்று கணவரிடம் பொங்கினார் திருமதி.

அப்புறமென்ன.. தேவர் படத்திற்கு பொங்கிய லக்ஷ்மிகாந்த்- பியாரிலால் ஜோடி இசை, இந்தியாவையே சல்..சல்…மேரே ஹாத்தி என தாளம் போடவைத்தது.. இந்த இசை ஜோடியை புக் செய்யச்சொல்லி முதன் முதலில் ஐடியா தந்த இயக்குநர் ஸ்ரீதரே, தேவரின் இந்த தடாலடியை பார்த்து மிரண்டு போய்விட்டார். ஹாத்தி மேரா சாத்தி இந்தி திரைப்பட வரலாற்றில் மிகப்பெரிய வசூலை குவித்த படங்களின் பட்டியலில் இடம் பிடித்தது. படத்தின் வசூல் வேகத்தை பார்த்து ராஜேஷ் கண்ணாவே முதன் முறை யாக ஜாம்பவான் சக்தி சமந்தாவுடன் சேர்ந்து சக்திராஜ் என்ற சொந்த கம்பெனியை ஆரம்பித்து விநியோகஸ்தர் உரிமையை கைப்பற்றிக்கொண்டார்.

ஹாத்தி மேரா சாத்திதான் தமிழில் நடித்து, நல்லநேரம் படமாக வந்து ஹிட்டானது. எம்ஜிஆரை வைத்து தேவர் எடுத்த ஒரே வண்ணப்படமும்  கடைசிப்படமும் இதுதான்..எம்ஜிஆர் அத்தியாயத்திற்கு பிறகு சின்னப்பா, இரண்டாம் கட்ட நட்சத்திரங்களையும் மிருகங்களையும் கதைக்குள் நுழைத்து பக்தியையும் குறிப்பிட்ட சதவீதம் கலந்து வெற்றிப்படங்களாய் போட்டுத்தாக்கினார்.

தெய்வம், திருவருள் என பக்திப்படங்கள் ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம், ஒரு பாம்பை வைத்து வெள்ளிக்கிழமை விரதம் என்ற படத்தையும் ஒரு ஆட்டை வைத்து ஆட்டுக்கார அலுமேலு படத்தையும் தந்து பெண்களையும் குழந்தைகளையும் சாரை சாரையாய் தியேட்டருக்கு வரவழைத்து வசூலை மூட்டை மூட்டையாய் சின்னப்பா தேவர் கட்டிய விதத்தை பார்த்து தமிழ் திரையுலகமே மிரண்டுபோனது.. பிரமாண்ட தயாரிப்பு நிறுவனங்களே புகைச்சல் விட்டன.

இந்தியில் தர்மேந்திரா-ஹேமாமாலின் ஜோடியை வைத்து மா (அம்மா) என்ற படத்தை எடுத்தார். குட்டி யானையை அதன் தாயிடம் சேர்த்துவைக்க, வேட்டைக்காரன் ஒருவன் போராடுவதே கதை. படத்தில் தேவர் வைத்த மிருகங்கள் தொடர்பான வேட்டைக் காட்சிகளை பார்க்க பள்ளிக்கூட குழந்தைகள் தியேட்டர்களுக்கு அழைத்துச்செல்லப்பட்ட சம்பவங்களும் அரங்கேறின.

எளிமையாக செய்வார், தன்னம்பிக்கையோடு செய்வார்..அதில் சாதனையும் படைப்பார். அவர்தான் சின்னப்பா தேவர். தேவரின் தன்னம்பிக்கை என்பது தனி ரகம். எம்ஜிஆர் சுடப்பட்டு மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது அங்கே சென்றவர்களெல்லாம் பீதியோடு இருக்க,, டிபன்பாக்ஸ் நிறைய பணத்தை எடுத்துபோய் அவரிடம் கொடுத்துவிட்டு சீக்கிரம் எழுந்து வந்து என் படத்தில் நடி தெய்வமே என்று சொன்ன வியப்பின் அடையாளம் அவர்..

இன்று உலகநாயகனாக திகழும் கமல்ஹாசன் இளைஞனாக முதன் முதல் பாடல் காட்சியில் நடனமாட வாய்ப்பு கிடைத்ததும் இவர் தயாரித்த மாணவன் (1970) படத்தில்தான். 1978ல் ரஜினியை வைத்து தாய்மீது சத்தியம் படத்தை தேவர் தயாரித்தார். ரஜினி முதன்முறையாய் மேற்கத்திய கௌபாய் வேடத்தில் நடித்த படம் இந்த படத்தின் ஷுட்டிங்கின்போது திடீர் உடல்நலக்குறைவால் கோவை மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு செப்டம்படர் எட்டாம்தேதி சிகிச்சை பலனின்றி சின்னப்பா தேவர் காலமானார்.

தேவர் மறைந்தபிறகும் ரஜினிக்கு அன்னை ஓர் ஆலயம், அன்புக்குநான் அடிமை உள்பட பல வெற்றிப்படங்களை தேவர் பிலிம்ஸ் நிறுவனம் தந்தது. படத்தில் கிடைக்கும் லாபத்தை முருகன் கோவில்களுக்கு செலவழித்த சாண்டே சின்னப்பா தேவரால் உருப்பெற்றதே இன்று  புகழ்பெற்ற வழிபாட்டுத்தலமாக கோவை அருகே இருக்கும் மருதமலை முருகன் கோவில்,

கோவை தந்த கோமகன் சாண்டோ சின்னப்ப தேவரின் 40 வது நினைவு தினம் இன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close