[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

மீனாட்சியம்மன் கோயிலில் நடந்த ஆலய பிரவேச புரட்சி..!

the-worship-of-all-the-people-in-1939-by-meenakshi-amman-temple

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஒரு சில சமூகத்தை சேர்ந்தவர்கள் வழிபாடு செய்து வந்த நிலையில் அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் வழிபாடு செய்ய ஏதுவாக 1939-ல் ஆலய பிரவேசம் நடத்தினார் வைத்தியநாத அய்யர்.

தமிழகத்தின் தொன்மையான பழைமையான நகரமான மதுரையில் அமைந்துள்ளது மீனாட்சியம்மன் கோயில். இங்கு வழிபாடு நடத்த 1939-ம் ஆண்டு ஜுலை 8-க்கு முன்னர் வரை ஒரு சில உயர் சாதியினரை தவிர 140-க்கும் மேற்பட்ட சாதியினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பல தரப்பில் இருந்தும் ஹரிஜன மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்கிற குரல்கள் வந்தாலும் அதனை செயல் வடிவத்தில் எடுத்து சென்றது அ.வைத்தியநாத அய்யர்.

சுதந்திர போராட்ட தியாகி, வழக்கறிஞர், சமூக சீர்திருத்தவாதி என்று பன்முகம் கொண்ட அ.வைத்தியநாத அய்யர், நெற்களஞ்சியமான தஞ்சாவூரில் அருணாசலம்–லட்சுமியம்மாள் தம்பதியினருக்கு 1890 மே 16-ஆம் நாள் 2-வது குழந்தையாக பிறந்தவர். ஏழை, எளிய ஹரிஜன மக்களின் குழந்தைகள் தடையின்றி கல்வி பயில 1932-ஆம் ஆண்டு வைகையாற்றின் கரையோரத்தில் வாடகை கட்டிடத்தில் 192 மாணவர்களுடன் சேவாலைய விடுதியை தொடங்கினர். 1938-ல் சொந்த கட்டிடத்தில் உள்ள விடுதி கட்டிடத்தை ராஜாஜி துவக்கி வைத்தார்.

1936-ல் ஆலய பிரவேச சட்டம் கொண்டு வரப்பட்டாலும் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் சென்று ஹரிஜன மக்கள் வழிபாடு செய்ய எதிர்ப்புகள் அதிக அளவில் இருந்தது. சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தாலும் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் நடைபெறும் சமூக தீண்டாமைக்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிற எண்ணம் இருந்தால் ஹரிஜன மக்களுடன் ஆலய பிரவேசம் நடத்த ஏதுவான தருணத்தை பார்த்து கொண்டிருந்தார் அ.வைத்தியநாத அய்யர்.

பிராமணர் குடும்பத்தில் பிறந்து விட்டு ஹரிஜன மக்களுக்கு ஆதரவாக செயல்பட கூடாது எனவும் தொடர்ந்து செயல்பட்டால் வைத்தியநாத அய்யரை குடும்பத்துடன் எரித்து கொலை செய்வோம் என பல மிரட்டல்கள் வந்தன. இந்நிலையில் இராஜாஜி பச்சை கொடி காட்ட முத்துராமலிங்க தேவர் பாதுகாப்புடன் 1939-ம் ஆண்டு ஜுலை 8-ஆம் நாள் இரவு 8 மணியளவில் கக்கன் (முன்னாள் அமைச்சர்), முருகானந்தம், சின்னையா, பூவலிங்கம், சண்முகம் உள்ளிட்ட 6 பேரை அழைத்து சென்று மதுரை மீனாட்சியம்மன் கோயில் கருவறையில் மீனாட்சியம்மனை வழிபட செய்தார் வைத்தியநாத அய்யர்.

முன்னதாக கோயிலுக்குள் வழிபாடு நடத்த வந்தவர்களை கோயில் அறங்காவலரான எஸ்.ஆர்.நாயுடு வரவேற்று அழைத்து சென்றார். பின்னர் கோயிலுக்கு வெளியே கூடியிருத்த கூட்டத்தினர் மத்தியில் ஆலய பிரவேசம் நடைபெற்றதாக அறிவித்தார். இந்த தகவல் மதுரை முழுக்க காட்டு தீயாக பரவ மீனாட்சியம்மன் கோயிலில் பூஜை செய்து வந்த பிராமணர்கள், ஹரிஜன மக்கள் கோயிலில் வழிபாடு செய்ததால் மீனாட்சி கோயிலில் இருந்து வெளியேறி தலைமை குருக்கள் நடராஜய்யர் வீட்டில் குடியேறி விட்டனர். அத்தோடு மட்டுமில்லாமல் நடராஜய்யர் வீட்டில் மீனாட்சியம்மன் சிலையை வைத்து வழிபாடு செய்ய ஆரம்பித்ததோடு மீனாட்சியம்மன் கோயில் கருவறையை பூட்டி சாவியையும் எடுத்துச் சென்றனர்.

தகவல் தெரிந்து கோயில் அறங்காவலரான எஸ்.ஆர்.நாயுடு கருவறை பூட்டை உடைத்து பக்தர்கள் வழிபாட்டுக்கு கருவறையை திறந்து விட்டார். ஹரிஜன மக்களுடன் ஆலய பிரவேசம் என்பது பல போராட்டங்கள், எதிர்ப்புகளுக்கு இடையே நடைபெற்றது. ஆலய பிரவேசத்தை நடத்திய வைத்தியநாத அய்யருக்கு முத்துராமலிங்கத் தேவர், என்.எம்.ஆர்.சுப்புராமன், எஸ்.ஆர்.நாயுடு ஆகியோர்களின் ஆதரவு இருந்தது. வெற்றிகரமாக ஆலய பிரவேசம் நடத்திய வைத்தியநாத அய்யருக்கு காந்தியடிகள் கடிதம் எழுதி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

சுதந்திரத்திற்கு பின்னர் சட்டமன்ற உறுப்பினராகவும், சாதீய கொடுமைகளுக்கு எதிரான போராளியாகவும் செயல்பட்ட வைத்தியநாத அய்யர் 1955 பிப்ரவரி 23-ல் உடல்நலக் குறைவால் காலமானார். வைத்தியநாத அய்யரை கவுரவப்படுத்தும் விதமாக மாநில அரசு 1973-ல் மீனாட்சியம்மன் கோயில் அருகே அவருக்கு சிலை வைத்தது. மத்திய அரசு 1999-ல் தபால் தலை வெளியிட்டது. குடும்ப சூழ்நிலை காரணமாக வைத்தியநாத அய்யர் வாழ்ந்த வீட்டினை அவரது குடும்பத்தினர் விற்று விட்டனர். இதனிடையே தற்போது அந்த வீட்டினை தமிழக அரசு மீட்டு வைத்தியநாத அய்யரின் நினைவு இல்லமாக மாற்றி அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்துள்ளனர் பலரும். மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் இன்று எளிதில் சென்று வழிபாடு செய்ய வைத்தியநாத அய்யர் 1939-ல் நடத்திய ஆலய பிரவேசம் மிக முக்கியமான பங்கு வகித்து உள்ளது என்றால் அது மிகையாகாது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close