[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் நேற்று உயிரிழந்ததையடுத்து சூலூர் பேரவை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு
  • BREAKING-NEWS 2016 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர் - அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமமுகவின் தேர்தல் அறிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்; மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி ஆசிரியர்கள் நியமன முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது
  • BREAKING-NEWS முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டி; வேட்பு மனு தாக்கல் செய்தார்

கர்நாடக தேர்தலும் கம்யூனிஸ்ட் கட்சிகளும்  

communist-party-with-karnataka-election

கர்நாடகாவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியிருக்கிறது. அங்கு காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்றால் அது, ஒரே கட்சி அடுத்தடுத்து வெற்றிபெற்றதில்லை என்ற முப்பது ஆண்டுகால வரலாற்றை மாற்றுவதாக மட்டுமல்லாமல், 2019ல் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலையும் தீர்மானிப்பதாக இருக்கும். அங்கு பா.ஜ.க.வுக்கு பின்னடைவு ஏற்பட்டால், இன்னும் சில மாதங்களில் தேர்தலை சந்திக்க உள்ள மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் அந்தத் தோல்வி எதிரொலிக்கும். இந்நிலையில், 2019ல் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள இடதுசாரிக் கட்சிகள் கர்நாடக தேர்தலில் அதற்கு எந்த விதத்தில் பங்களிப்புச் செய்கிறார்கள் என்று பார்ப்பது அவசியம்.

கர்நாடக மாநிலத்தில் இடதுசாரிக் கட்சிகள் இப்போது வலுவாக இல்லை. கடந்த 2013 தேர்தலில் அவை போட்டியிட்டாலும் ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. இருந்தபோதிலும் சி.பி.ஐ., சி.பி.ஐ.எம். ஆகிய கட்சிகளுக்கு ஓரளவு ஊழியர் பலம் அங்கே உள்ளது. அதன் அடிப்படையில் அவர்கள் கர்நாடகா தேர்தல்களில் தொடர்ந்து போட்டியிட்டு வருகிறார்கள். தேசிய அளவில் மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்று குரல் கொடுத்து வரும் இடதுசாரிகள் கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வந்தன. ஆனால், அதில் பயன் எதுவும் ஏற்படவில்லை. அதனால், இப்போது அவர்கள் தனித்து போட்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

1983 ஆம் ஆண்டில் சி.பி.ஐ. மற்றும் சி.பி.ஐ.எம். கட்சிகள் இணைந்து போட்டியிட்டு 6 இடங்களில் வெற்றி பெற்றன. அதுதான் கர்நாடக வரலாற்றில் இடதுசாரிகள் பெற்ற அதிகபட்ச வெற்றியாகும். 1985 தேர்தலில் அந்த எண்ணிக்கை 5 ஆகக் குறைந்தது. 1994, 2004 தேர்தல்களில் சி.பி.ஐ.எம். மட்டும் பாகேபள்ளி தொகுதியில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் அக்கட்சியாலும் எந்தத் தொகுதியிலும் வெற்றிபெற முடியவில்லை. 2004 க்குப் பிறகு இடதுசாரி கட்சிகளால் கர்நாடக மாநிலத்தில் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியவில்லை. 

2013 சட்டமன்ற தேர்தலில் சி.பி.ஐ. 8 இடங்களில் போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்ததோடு டெபாசிட்டையும் இழந்தது. எட்டு தொகுதிகளிலும் சேர்த்து மொத்தமாக 25,450 வாக்குகளை அக்கட்சி பெற்றது. அது அத்தேர்தலில் பதிவான வாக்குகளில் 0.08 சதவீதம் ஆகும். சி.பி.ஐ.எம். 16 இடங்களில் போட்டியிட்டு, அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது. ஒரேயொரு தொகுதியில் மட்டுமே அது டெபாசிட்டை தக்க வைத்துக் கொண்டது. 16 தொகுதிகளிலும் சேர்த்து 68,775 வாக்குகளை அக்கட்சி பெற்றது. அது அத்தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் 0.22 சதவீதம் ஆகும். இந்த இரண்டு கட்சிகள் அல்லாமல் அவற்றுடன் இணைந்து போட்டியிட்ட பார்வர்டு பிளாக் கட்சி 3 தொகுதிகளிலும், எஸ்.யூ.சி.ஐ. கட்சி 11 இடங்களிலும், சி.பி.ஐ.எம்.எல். (லிபரேஷன்) கட்சி 10 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தின. அவற்றால் சில ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.

2013 தேர்தலில் 223 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க. 40 இடங்களில் வெற்றி பெற்றது. 110 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது. மொத்தம் 62,36,227 வாக்குகளை அக்கட்சி பெற்றது. அது பதிவான வாக்குகளில் 19.89 சதவீதம் ஆகும். பா.ஜ.க.வில் இருந்து வெளியேறி தனிக்கட்சி துவக்கியிருந்த எடியூரப்பாவின் கே.ஜே.பி. என்ற கட்சி 204 தொகுதிகளில் போட்டியிட்டு 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அது 30,69,207 வாக்குகளைப் பெற்றது. மொத்தம் பதிவான வாக்குகளில் அது 9.79 சதவீதம் ஆகும். இந்திய தேசிய காங்கிரஸ் 224 தொகுதிகளில் போட்டியிட்டு 122 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அது பெற்ற மொத்த வாக்குகள் 1,14,73,025 ஆகும். பதிவான வாக்குகளில் அது 36.59 சதவீதம் ஆகும். காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும் மாற்றாக தன்னை முன்னிறுத்தும் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சி 222 தொகுதிகளில் போட்டியிட்டு 40 இடங்களைக் கைப்பற்றியது. அது பெற்ற மொத்த வாக்குகள் 63,29,158 ஆகும். பதிவானதில் அது 20.19 சதவீதம் ஆகும். 

தற்போது எடியூரப்பாவின் கட்சி மீண்டும் பா.ஜ.க.வில் இணைந்து விட்டது. அவரே இப்போது பா.ஜ.க.வின் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். கடந்த தேர்தலில் பா.ஜ.க.வும், எடியூரப்பாவின் கே.ஜே.பி.யும் சேர்ந்து பெற்ற வாக்குகள் 99 லட்சத்தைத் தாண்டுகின்றன. சதவீத அளவில் பார்த்தாலும் 29 சதவீதத்தை அது தாண்டுகிறது. இந்நிலையில் தற்போதைய போட்டி பா.ஜ.கவுக்கும், காங்கிரசுக்கும்தான் என்பது தெளிவாகி விட்டது. கடந்த முறை பெற்ற வாக்குகளைக்கூட மதச்சார்பற்ற ஜனதா தளத்தால் இந்த முறை பெற முடியாது என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

இந்தச்சூழலில் இடது சாரிக் கட்சிகள் தற்போது நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலிலும் தங்களது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. சி.பி.ஐ.எம். கட்சி 19 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது. அதுபோலவே, சி.பி.ஐ. கட்சியும் 4 இடங்களில் தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. கடந்த தேர்தலில் இரண்டு கட்சிகளும் சேர்ந்து பெற்ற வாக்குகள் 1 சதவீதம்கூட இல்லை என்ற நிலையில் இடதுசாரிகள் இப்படி தனியே வேட்பாளர்களை நிறுத்தியிருப்பது எதற்காக? அதனால் யாருக்கு லாபம்? அவர்கள் சொல்லும் மதச்சார்பற்ற கட்சிகளின் ஒற்றுமைக்கும் தேசிய அளவில் பா.ஜ.க.வை வீழ்த்துவதற்கும் இது உதவுமா என்ற கேள்விகள் இப்போது எழுகின்றன. 

கடந்த 2013 தேர்தலில் சி.பி.ஐ.எம் வேட்பாளர்கள் ஒரு தொகுதியில் இரண்டாவது இடத்தையும், இன்னொரு தொகுதியில் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். சி.பி.ஐ. வேட்பாளர்கள் முடிகாரே தொகுதியில் 4வது இடத்தையும் பெல்லாரி நகரம் தொகுதியில் 5வது இடத்தையும் பிடித்தனர். இந்த நான்கு தொகுதிகளைத் தவிர, வேறு எந்தத் தொகுதியிலும் இந்தக் கட்சிகளால் பொருட்படுத்தத் தக்க வாக்குகளைப் பெற முடியவில்லை. 

கர்நாடகாவில் இடதுசாரிக் கட்சிகளுக்கு வாக்கு பலம் குறைவாக இருந்தாலும் அவர்களுக்கென்று பிரச்சார பலம் கணிசமாக இருக்கிறது. அது பா.ஜ.க.வை குறி வைத்து மேற்கொள்ளப்பட்டால் நிச்சயம் பா.ஜ.க.வின் தோல்விக்கு கூடுதல் வலு சேர்க்க முடியும். ஆனால், தனித்துப் போட்டியிடுகின்ற காரணத்தால் அந்தப் பிரச்சார பலத்தை பா.ஜ.க.வுக்கு எதிராக ஒருங்கிணைப்பதில் இடதுசாரி கட்சிகள் தோல்வி அடைந்துள்ளன. இது தேசிய அளவில் 2019 பொதுத்தேர்தலுக்கு அவர்கள் வகுக்க விரும்பும் அரசியல் செயல் திட்டத்துக்கு எந்த விதத்திலும் உடன்பாடானதாக இல்லை.

2019 பாராளுமன்றத் தேர்தலுக்கு ஒரு ஆண்டுகூட இல்லாத நிலையில் மதச்சார்பற்ற கட்சிகளின் வாக்குகளைச் சிந்தாமல், சிதறாமல் ஒருங்கிணைக்க வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் அக்கறை காட்டாமல் இருப்பது கவலைக்குரியதாக உள்ளது. கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் ஒருவேளை பா.ஜ.க. வெற்றி பெற்று விட்டால், அது 2019 பாராளுமன்றத் தேர்தலுக்கு மிகப்பெரிய ஊக்கமாக அவர்களுக்கு அமைந்து விடும். அப்படி நடந்தால் பா.ஜ.கவின்  வெற்றியைத் தடுப்பதற்கு உருப்படியாக எதையும் செய்யவில்லை என்ற  வரலாற்றுப் பழியை இடதுசாரிகள் சுமக்க நேரிடும்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close