[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

 ‘லுங்கிமேன் ’சிவகுரு .. ஐஏஎஸ் ஆன கதை....!

m-sivaguru-prabakaran-upsc-topper-slept-on-platforms-overcame-poverty

’என்ன கொடுமை சார்’ என சினிமாவில் டயலாக் பேசினால் நாம் விசில் அடிப்போம். ஆனால் அப்படி ஒரு உண்மையான கொடுமையை சந்தித்து சாதனை படைத்திருக்கிறார் சிவகுரு பிரபாகரன். இளம் ஐஏஎஸ் அதிகாரி. நடந்து முடிந்த சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 101 இடத்தை எட்டிப் பிடித்திருக்கிறார். அவரது வெற்றிக் கதைகளுக்குப் பின்னால் இருப்பது ரணகளமான வாழ்க்கை. புதிய தலைமுறை இணையதளத்திற்காக அவரை சந்தித்தோம். 

உங்களுடைய குடும்ப பின்னணி..?

“வீட்ல அப்பா, அம்மா, அக்கா, தம்பி, நான். அக்காவுக்கு கல்யாணம் ஆகிடுச்சி..புதுக்கோட்டைல இருக்காங்க. கொஞ்சம் விவசாய நிலம் இருக்கு. நமக்கு ஒரு மரம் அறுக்கும் மில் ஒண்ணு சின்னதா இருக்கு. அதுல பெருசா வருமானம் வரல. தென்னங்கீற்று பின்னி வரும் வருமானத்தை வச்சுதான் குடும்பத்தை நடத்தி வர்றோம். அம்மா, பாட்டி இருவரும் தென்னங்கீற்று பின்னுற வேலையைதான் பாக்குறாங்க. தாத்தா இவங்களுக்கு ஒத்தாசையா இருக்காரு. வீட்ல பணத் தேவை இருந்ததால் நானும் வேலைக்கு போக வேண்டி இருந்தது. ஸ்கூல் படிக்கும் போது 4 மாணிக்கே அம்மா எழுப்பி விட்டுடுவாங்க. மில்லுக்கு போய் தூள் அள்ளுவது; சுத்தம் செய்வது போல மாதிரியான வேலையை பார்த்து பணம் சம்பாதிச்சேன். அத வச்சுதான் குடும்பம் பிழைச்சது. இந்தப் பணத்தை வச்சு எனக்கு படிப்புக்குத் தேவையான விஷயங்களை வாங்கிப்பேன். 

அப்பாவுக்கு லேசான குடிப்பழக்கம் இருந்தது. அதனால வீட்டுக்கு அவர் பணம் தர மாட்டார். உதவி செய்ய வர்றவங்களும் அவரை காரணம் காட்டி உதவ மறுப்பாங்க. அவரால கடன் கொடுப்பவங்களும் கொஞ்சம் தயங்கினாங்க. என் அக்கா படிக்காம போனதுக்கு முக்கியமான காரணமே இந்தக் குடிதான். அக்கா நல்லா படிப்பாங்க. ப்ளஸ்டுவில் 930 மார்க் வாங்கி இருந்தாங்க. ப்ளஸ்டுக்கு மேல நான் மேற்கொண்டு படிக்காம வேலைக்கு போனதற்கும் குடும்ப வறுமைதான் காரணம். இன்றைக்கு பல தடைகளை தாண்டி அக்கா எம்.ஏ. பி.எட் பட்டதாரி. கல்யாணத்துக்கு பிறகும் அக்காவுக்கும் படிக்க ஆசை. அத புரிஞ்சுக்கிட்டு மேற்கொண்டு மாமா படிக்க வச்சாங்க. முதல்ல அக்காவுக்கு நரசிங் படிக்கனும்னு ஆசை இருந்தது. ஆனா அந்தக் கனவு எல்லாம் குடும்ப வறுமையால காத்தோட காத்தா கரைஞ்சிப் போச்சு. ஒரு ஏழையின் கனவு எந்தளவுக்கு உயிர்ப்பெற முடியும்? நானும் 12 வது முடிச்சி நாலு வருசம் படிக்காம வேலை பார்த்துட்டு இருந்தேன். ஆனா அதுக்கு அப்புறம்தான் இன்ஜினிரிங் சேர்ந்து படிச்சேன்” 

உங்களுடைய நண்பர்களுடைய ஆதரவு, உதவி எதாவது இருந்ததா...?

“உண்மையை சொன்னால் நண்பர்கள் இல்லைனா நான் இல்லைனு கூட சொல்லலாம்.. நான் காலேஜ் படிக்கும் போது மாதம் 900 ரூபாய் இருந்தா கூட போதும். ஆனா அதுவே சில சமயம் இல்லாம போய் இருக்கு. அப்போது சாப்பாட்டுக்கு பணம் கொடுத்தது முதல் ஏதாவது திடீர்னு தேவையை பூர்த்தி செய்வது வரை நண்பர்கள் பங்குதான் இருந்தது. நான் காலேஜ் முடிகிற அந்த நாலு வருஷமும் என்கிட்ட இருந்தது ரெண்டு பேண்ட்தான். அதையே தான் திரும்பத் திரும்ப பயன்படுத்தி இருக்கேன். ஏன் இப்போது வரைக்கும் கூட ரெண்டு சட்டைதான் வச்சிருக்கேன். அந்த ரெண்டு புளூ கலர் சட்டை. அதுகூட இண்டவியூவ் போவதற்காக எடுத்தது. பல வருஷத்திற்கு அப்புறம் இப்போதான் சட்டை வாங்கி இருக்கிறேன்.

                                                

நான் ஐஐடி போனதுக்குகூட என்னுடைய நண்பன் ரூபன்தான் காரணம். ரூபன் ஒருமுறை என்னுடைய கணக்கு பாடத்தின் மீது உள்ள ஆர்வத்தை பார்த்துட்டு அவர்தான் ‘நீ ஐஐடி போ.. உனக்கு பணத் தேவை இருந்தா கூட நான் முடிஞ்சவரை உதவுறேன்’னு சொல்லி 5000 ரூபாய் பணமும் கொடுத்து உதவினார். நான் வேலூரில் இருந்து சென்னை வந்து போக இரயில் செலவு 53 ரூபாய். அப்போது எனக்கு அதுவே பெரிய தொகை. இதுவரை நண்பர்கள் கொடுத்து உதவி தொகை மட்டும் லட்சக்கணக்குல இருக்கும். அந்தப் பணத்தை இதுவரை பாதிக்கு மேல திரும்பக் கொடுத்துட்டேன். இன்னும் கொஞ்சம் தர வேண்டிய பாக்கி இருக்கு. சிலர் பணத்தை திரும்ப வாங்க மறுத்தும் இருக்காங்க.”  

வீட்டிலுள்ள பெண்களின் உதவி எப்படி இருந்தது?

“என்னோட அம்மாதான் முதல் ஆதரவு கரம். நான் குறைவா மார்க் எடுத்திருந்தா கூட அவங்க ‘விடுப்பா அடுத்த முறை பார்த்துக்கலாம்’னு சொல்லுவாங்க. மனம் தளர்ந்து நிற்கும்போது தைரியமா கேட்கும் அவங்க குரல். வீட்டு செலவுக்கு இல்லையினாலும் எப்படியாவது பணத்தை மிச்சப்படுத்தி என் படிப்புக்கு கொடுப்பாங்க. என் முதுகெலும்பு அவங்கதான். நான் என்ன பண்ணாலும் வீட்ல எனக்கு உறுதுணையா இருக்கும் ஒரே ஜீவன் அவங்க.”

பல மனத் தடையை உடைத்து வெற்றி பெற்ற உங்களுடைய  அட்வைஸ் என்ன..?

“பல தடைகள் இருக்கு. குடும்ப பிரச்சனை காரணமா பலர் தன்னுடைய இலக்கை அடையாம போய் விடுகிறாங்க. அவங்க எல்லோரும்  முடிந்தவரை தன்னுடைய தேவைகளை அவர்கள் குறைக்க பார்க்கணும். நிறைய புத்தகங்களை தேடிப் போய் படிக்கணும். உண்மை சொன்னால் நான் ஐஐடி படிக்கும் போது என்னுடைய பட்ட பெயர் ‘லுங்கிமேன்’. காரணம் நான் ஐஐடி உள்ளயே லுங்கியில்தான் சுத்துவேன். இதனால் பல வெளிநாட்டு நண்பர்கள் என்னை அப்படி கூப்பிடுவாங்க. நான் ஆடம்பர செலவுகளை குறைச்சிகிட்டு புத்தகங்களை தேடிப் போய் வாங்குவேன். நான் நூலகம் போய் படிச்சதை விட புத்தகமாய் வாங்கி படிச்சதுதான் அதிகம். அதையேதான் நான் எல்லாருக்கும் சொல்ல விரும்புறேன். நீங்க என்ன ஆகணும்னு நினைக்குறீங்களோ அதுக்குத் தகுந்தைபோல புத்தகம் வாங்கி படிங்க.” 

கிராமப்புற  மாணவர்களுக்கு ஆங்கிலம் ஒரு பெரிய தடைய இருக்கிறது.. இதை எப்படி சரி பண்ணலாம்..?

“இது 100 % உண்மை. நான் இன்ஜினியரிங் போய் சேரும் போது is, was தவர வேற எதுமே தெரியாது. ஆங்கிலம் படிக்கிறவங்கள பார்த்தா தெய்வம் மாதிரி தெரியும். நான் 12வது வரை தமிழ் மீடியம்லதான் படிச்சேன். ப்ளஸ் நாலு வருஷம் இடைவெளி வேற. கல்லூரி போய் மூன்றாவது நாள் ஆற்காடு என்ற ஊர் பெயரை தப்பாதான் எழுதினேன். அதை என் பக்கத்துல உட்கார்ந்திருந்தவர் படிச்சுட்டு எல்லோர்கிட்டயும் சொல்லி கிண்டலடிச்சார். அது மிகப் பெரிய அவமானமாக இருந்தது எனக்கு. ஆனா ஒண்ணு மட்டும் முடிவு பண்ணேன். என்ன அவமானப்பட்டாலும் சரி, கல்லூரிக்கு வந்து மாடு மாதிரி உட்காந்துட்டு போனாலும் சரி,  இதற்கெல்லாம் பயந்து கல்லூரியை விட்டு போய்விட கூடாதுனு முடிவு பண்ணேன். தினமும் ஒரு பத்து இங்கிலீஷ் வார்த்தை எழுதி பழகினேன். இதை ஒருநாள் மட்டும் பண்ணல, தொடர்ச்சியா செய்யணும். ஒருநாள் செஞ்சிட்டு என்னால முடியலனு விடக்கூடாது. அது முக்கியம். தொடர்ந்து முயற்சித்தால் இங்கிலீஷ் ஒரு மேட்டரே இல்ல.”

நீங்க யாரை முன்னோடியா நினைத்து சிவில் சர்வீஸ் படித்தீர்கள்?

                   

“12வது படிக்கும் போது கலெக்டர் ஆன நல்லா இருக்கும்னு நினைச்சி இருக்கேன். அது எல்லோருக்கும் வரக்கூடிய கனவுதான்..! இதே கனவு திரும்ப சில வருஷம் கழித்து துளிர் விட்டது. என்னுடைய முன்னோடி ராதாகிருஷ்ணன்தான். கும்பகோணம் பள்ளி விபத்துல நேரடியாக களத்துல நின்றவர். மக்களோட மக்களாக இருந்து வேலை பார்த்தவர். என்னை மிகவும் கவர்ந்தவர் அவர்தான். எனக்கு அப்போ பேப்பர் படிக்கும் பழக்கம்கூட இல்லை. அவரை பார்த்துதான் கலெக்டர் ஆகுனும்னு தோன்றியது. அந்தக் கனவுதான் இவ்வளவு தூரம் என்னை இழுத்து வந்திருக்கு. கூட இருந்தவங்களும் ‘நீ நல்லா படிகிற, கலெக்டர் வேலைக்குப் போ’னு சொன்னாங்க.”

சிவில் சர்வீஸுக்கு எந்த டிகிரி படிச்சா உதவியா இருக்கும்..?

“அப்படி எதுவும் கிடையாது. சில பேர் எவர்கிரீன் சப்ஜெட் அப்படினு சில பேர் சோஷியாலஜி, ஹிஸ்டரி படின்னு சொல்லுவாங்க. அந்த ட்ரெண்ட் மாறிக்கிட்டே இருக்கும். இதை படிச்சா பாஸ் ஆகிடலாம், அதை படிச்சா பாஸ் ஆகிடலாம் என்று எதுவும் கிடையாது. அந்த நினைப்பே தப்பு. எந்த டிகிரி படித்தாலும் பரவாயில்லை. தேர்ந்தெடுக்கும் பாடத்தில் தரவாக இருக்க வேண்டும். அதுவே முக்கியம்.  மொத்தம் 26 சப்ஜெட். அதில் இருந்து ஒன்றை மெயின் சப்ஜெட்டா எடுத்து எழுதலாம். நான் எடுத்தது சிவில் இன்ஜினியரிங். கல்லூரி படிக்கும் போதே ஐஏஎஸ் எடுத்து எழுதுற அளவுக்குதான் தயாராக இருந்தேன். நான் தூங்கும்போதுகூட அண்ணா யுனிவர்சிடி பாடம் என் வலது பக்கம் இருக்கும். சிவில் சர்வீஸ் பாடப்புத்தகம் இடது பக்கம் இருக்கும். எந்த நேரமும் புத்தகம்தான். எந்த டிகிரியா இருந்தாலும் சரி, அதை லவ் பண்ணி படிக்க ஆரம்பிச்சாலே போதும்” 

                                                   

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டீர்கள். பணியின்போது எந்தத் துறைக்கு முக்கியத்துவம்?

“அது எந்த டிப்பார்ட்மெண்ட் ஆக இருந்தாலும் வழக்கமாக ஒருவேலை தருவாங்க.  ஆனா நான் தனிபட்ட முறையில்  பெண்கள் உதவியால் மேல வந்தவன். முன்னேற்றம் அடைந்தவன். ஒரு பேங்க்குக்கு போனாகூட அங்க என்ன செய்யணும்னு தெரியாத குடும்ப பின்னணியில இருந்து வந்தவன். அந்தளவுக்கு பின் தங்கிய தலைமுறை எங்க தலைமுறை. அப்படி இருந்தாலும் இந்தளவுக்கு உயர்ந்திருக்கேன். இந்த நாட்டில் எத்தனையோ பேர் இப்படிதான் இருக்காங்க.  அதனால் பெண்கள் முன்னேற்றம்தான் என் இலக்கு. அதற்குதான் முக்கியதுவம் கொடுக்க போகிறேன். படிக்க முடியாமல் தவிக்கும் தலைமுறைக்கு என்னால முடிந்த வரை உதவுவேன். நிழலாகக் கூடவே நிற்பேன். அந்தப் பணி ஒரு அதிகாரியாகவும் தொடரும். தனி மனிதனாகவும் தொடரும்.” என்கிறார் சிவகுரு பிரபாகரன் ஐஏஎஸ். இந்த மூன்று எழுத்தை தன் பெயருக்குப் பின்னால் போட்டுக் கொள்ளதான் இத்தனை போராட்டம். நம்மை பொருத்தவரை அது மூன்றெழுத்து. சிவகுருக்கு அதுதான் உயிர்மூச்சு. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close