[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா
  • BREAKING-NEWS தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2,081 கோடி வாடகை பாக்கியை வசூல் செய்யாமல் ரூ.250 கோடியாக குறைக்க பேரம் நடப்பதாக தகவல் - ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS டெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் - டெல்லி அரசுக்கு மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம் பரிந்து
  • BREAKING-NEWS உத்தர பிரதேசம்: காற்று மாசு காரணமாக கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் நவ.14, 15ஆம் தேதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

காவிரிக்காக தமிழ்நாடே ஏன் குலுங்கவில்லை? - ஒற்றுமையின்மை அவமானமில்லையா..!

protest-going-on-tamilnadu-for-cauvery-issue-not-on-unique-way

காவிரி பிரச்னையில் போராட்டங்கள் ஒருமித்த குரலில் ஒலிக்காதது மிகவும் கவலை அளிக்கக் கூடிய விஷயமாக இருக்கிறது.

தமிழகம் தற்போது போராட்ட களமாக மாறியிருக்கிறது. தலைநகர் சென்னை தொடங்கி ஏராளமான சிறிய கிராமங்கள் வரை காவிரி பிரச்னையில் நீதி கேட்டு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், போராட்டங்கள் உதிரி உதிரியாக, தனித்தனியாக நடைபெறுவது நம்முடைய ஒற்றுமையின்மையை பறைசாட்டுகிறது. காவிரி பிரச்னைக்காக இடையில் ஒரு அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அந்த சமயத்தில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே ஒற்றுமை இருப்பது போல் தோற்றம் ஏற்பட்டது. பலரும் அதனை பாராட்டினர். தற்போது ஆளும் கட்சியினரும், எதிர் கட்சியினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை மாறி மாறி கூறி வருவது மிகவும் பண்பற்ற ஒரு விஷயமாக தெரிகிறது. மிகவும் முக்கியமான ஒரு வாழ்வாதார பிரச்னையில் இப்படி அரசியல் செய்து கொண்டிருப்பது மக்களுக்கு நல்லது இல்லை என்பது அவர்களுக்கும் தெரியாமல் இல்லை. 

பொறுப்பில் இருக்கும் ஆளும் கட்சி ஏப்ரல் 3ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளது. திமுக ஏப்ரல் 5ம் தேதி முழு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. தேமுதிக சார்பில் தனியாக போராட்டம் அறிவிக்கப்படுகிறது. அரசியல் கட்சிகள்தான் இப்படி செய்கின்றன என்றால், வணிக சங்கங்களும் தனித்தனியாக போராட்டங்களை அறிவிக்கின்றன. விக்கிரமராஜா 3ம் தேதியும், வெள்ளையன் 11ம் தேதியும் கடையடைப்பை அறிவித்துள்ளனர். அதேபோல், விவசாய சங்கங்களும் தனித்தனியாக போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அரசியல் கட்சிகள் உட்பட யாருக்குள்ளும் தமிழகத்தில் ஒற்றுமை உணர்வு இல்லை என்பதையே இது காட்டுகிறது. 

கொஞ்சம் நம்முடைய அண்டை மாநிலங்களை உற்றுப்பார்த்தால் எப்படி பொதுப்பிரச்னைகளுக்காக ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பது நமக்கு புரியும். கர்நாடகாவில் நாள்தோறும் எதிரும் புதிருமாக சண்டையிட்டுக் கொள்ளும் காங்கிரஸ், பாஜக இந்த விவகாரத்தில் அவ்வளவும் ஒற்றுமையாக இருக்கிறது. அனைத்துக்கட்சி கூட்டத்தை மிகவும் எளிதாக நடத்தி முடிக்கிறது. கூட்டாக மத்திய அரசை வலியுறுத்துகின்றன.

ஆந்திராவில் சிறப்பு அந்தஸ்து விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அங்கு ஆளும் தெலுங்கு தேசம் கட்சியும் ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியும் போட்டி போட்டு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி நடவடிக்கைக்கு போட்டியாக, தெலுங்கு தேசம் கட்சி பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. தெலுங்கு தேசம் கட்சி பாஜக கூட்டணியில் இருந்தே வெளியேறிவிட்டார்கள். ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறது. அதனை தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சியும் தீர்மானம் கொண்டு வருகிறது. கேரளாவிலும் எதிரும் புதிருமாக உள்ள மார்க்சிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் பொதுப்பிரச்னைகள் என்றால் ஒற்றுமையாக இருந்து போராடுகிறது. 

          

நம்மை சுற்றியுள்ள மாநிலங்களில் கட்சிகள் அப்படி செயல்படுகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னையில் மக்களை கொதிநிலையிலே அவர்கள் வைத்திருக்கிறார்கள். எதிர்ப்பை மிகவும் பலமாக வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் தமிழகம் அப்படி இல்லை. இங்கு பிரதான அரசியல் கட்சிகள் காவிரி பிரச்னையில் முனைப்புடன் செயல்படுவதாக தெரியவில்லை. திமுக, அதிமுக கட்சிகளுக்கு கோடி கணக்கில் தொண்டர்கள் இருக்கிறார்கள். இதனை சொல்லி அவர்கள் பல முறை மார்தட்டிக் கொள்கிறார்கள். களத்தில் அவர்களை இருகட்சிகளும் பயன்படுத்தி போராட்டங்களை முன் எடுத்திருந்தால் தமிழகமே அதிர்ந்து இருக்கும். ஆனால் அவர்களின் செயல்பாடுகள் வெட்கி தலைகுனியும் நிலையில் தான் உள்ளது.

கால் நூற்றாண்டிற்கும் மேலாக நீடித்த காவிரி நீர் பங்கீட்டு பிரச்னையில் உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்தது. இந்த தீர்ப்பு எல்லாவற்றிற்கும் இறுதியான ஒன்றாக பார்க்கப்பட்டது. மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால், 6 வாரத்திற்குள் அதிகாரங்களுடன் கூடிய மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. அதனால், 6 வாரங்களுக்குள் எல்லாவற்றிற்கும் தீர்வு காணப்பட்டுவிடும் என்று நம்பப்பட்டது. ஒவ்வொரு வாரமாக கடந்து சென்ற போதும், மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுத்ததுபோல் தெரியவில்லை. உச்சநீதிமன்றம் விதித்த மார்ச் 29ம் தேதி வரை காத்திருக்கலாம் என்று ஆளும் அதிமுக அரசு கூறி வந்தது. மார்ச் 29ம் தேதி வரை மத்திய அரசு எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை. 

        

மார்ச் 29ம் தேதி மாலை 5 மணிக்கு பிறகான காட்சிகள் மிகவும் வருத்தம் அளிக்கக் கூடியதாக உள்ளது. தமிழகம் காத்துக் கொண்டிருந்த தீர்ப்பு அமல்படுத்தப்படவில்லை. தீர்ப்பை அமுல்படுத்தாத மத்திய அரசிடம் இருந்து எவ்வித விளக்கமும். ஒரு வார்த்தை கூட ஒருவரும் பேசவில்லை. தமிழக மக்களின் உணர்வு குறித்து மத்திய அரசு என்ன நினைத்துக் கொண்டிருக்கிறது என்பதை இதில் இருந்து புரிந்து கொள்ளலாம். மத்திய அரசு அப்படி இருக்கிறது என்றால், தமிழக அரசு சார்பில் மிகப்பெரிய அதிருப்தி வெளிப்படவில்லை. இது மிகவும் அச்சுறுத்தக் கூடியதாக உள்ளது. தமிழக மக்களின் முக்கிய குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான ஆதாய நீராக உள்ள காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசு இப்படி அலட்சியமாக உள்ளது. குறைந்தபட்சம் தன்னுடைய கோபத்தைக் கூட மத்திய அரசுக்கு எதிராக வெளிப்படுத்துவதில்லை. அதிமுக சார்பில் வெளியிடப்படும் அறிக்கையிலும் கண்டிக்கும் தொனி என்பதே இல்லை. 

தீர்ப்பு அமல்படுத்தப்படவில்லை என்று தெரிந்ததும் தமிழகம் எப்படி மாறியிருக்க வேண்டும். ஒரு மிகப்பெரிய அறப்போராட்டத்தை அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து நடத்தியிருக்க வேண்டும். இல்லையென்றால், அதற்கான முன்னெடுப்புகளை தொடங்கியிருக்க வேண்டும். ஆளும் கட்சியாலும் எல்லோரையும் ஒருங்கிணைக்க முடியவில்லை. எதிர்க்கட்சியாலும் ஆளும் கட்சியை தவிர மற்ற எல்லோரையும் ஒன்று திரட்ட முடியவில்லை. திமுக கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் தேமுதிக உள்ளிட்ட சில பிரதான கட்சிகளே கலந்து கொள்ளவில்லை. வழக்கம் போல் அதனுடன் கூட்டணி மனைநிலையில் உள்ள கட்சிகளையே திமுக ஒருங்கிணைத்துள்ளது. 

அடுத்த 10 நாட்களுக்கு தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களால் என்ன அழுத்தத்தை மத்திய அரசுக்கு கொடுக்க முடியும். மெரினாவில் போராட முயன்றவர்களையும் தமிழக காவல்துறை கண் இமைக்கும் நேரத்தில் வெளியேற்றிவிட்டது. ஆனால், ஜல்லிக்கட்டு போல் லட்சக்கணக்கானோர் ஒன்று திரண்டு போராட வேண்டும் என்று அதிமுக சொல்கிறது. போராட வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை நீதிமன்றம்தான் சொன்னது என்று அமைச்சர் ஒருவர் கூறுகிறார். மற்றொரு அமைச்சர் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று மத்திய அரசுக்கு எதிராக போராட முடியாது என்று சொல்கிறார். 

            

இப்பொழுதும் மற்ற மாநிலங்களிடம் இருந்து நாம் பாடம் கற்று ஒன்றுபடவில்லை என்றால், உரிமைகளை இழப்பதை தவிர வேறெதுவும் நடைபெற போவதில்லை. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பி.க்கள் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளில் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வது என்று முடிவு செய்துள்ளார்கள். ஆனால், தமிழகத்தில் ராஜினாமா என்று சொன்னால் பயப்படுகிறார்கள். ஒரு எம்.பி மட்டும் ராஜினாமா செய்வதால் என்ன நடக்கும்? எந்த எதிர்ப்பானாலும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் என அனைவரும் ஒன்றுபட்டு ஒருமித்த குரலில் ஓங்கி எழுப்ப வேண்டும். 

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு - நம்மில் 
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே 
நன்றிதைத் தேர்ந்திடல் வேண்டும் இந்த 
ஞானம் வந்தால் பின்நமக்கெது வேண்டும் 

                 - பாரதியார்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close