[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS குழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS 2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS தமிழகத்தின் 33‌-ஆவது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி

ஐபிஎல் அறிமுகம் 6: ’ இது வேற லெவல் வேகம்’

ipl-palayer-introduction-kamlesh-nagarkoti

அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது கம்லேஷ் நாகர்கோட்டியை! 

சமீபத்தில் நடந்து முடிந்த ஜூனியர் உலகக் கோப்பைப் போட்டியில், இவரின் வேகம்தான் பேச்சாக இருந்தது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இவர் வீசிய பந்து, மணிக்கு 145 கி.மீ தாண்டி பாய, ஆச்சரியப்பட்டுப் போனார்கள். ’அடடா அற்புதம், யாருங்க இது?’ என்று வியப்பாகக் கேட்டார், வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் இயான் பிஷப்.

உத்தரகாண்டை சேர்ந்த கம்லேஷின் அப்பா, ராணுவத்தில் பணியாற்றியவர். ’பசங்களை நல்லா படிக்க வைக்கணும்’ என்று ராஜஸ்தானுக்கு குடி பெயர்ந்தார். கம்லேஷூக்கு சின்ன வயதிலேயே கிரிக்கெட் ஆர்வம். எட்டு வயதில் ஜெய்ப்பூர் சன்ஸ்கர் அகாடமியில் சேர்த்துவிட்டார். அங்கு சீனியர் பயிற்சியாளராக இருந்த ரத்தோர், கம்லேஷை அப்போதே கணித்துவிட்டார், ’இவன் வேற லெவல்’ என்று.

இன்ஸ்விங், ரிவர்ஸ் ஸ்விங் இரண்டுமே கம்லேஷின் ஆயுதம் என நம்பிய ரத்தோர், அவனுக்கு 13 வயது இருக்கும்போது ராஜஸ்தான் மாநில U 14-க்கான வீரர்கள் தேர்வுக்கு அனுப்பி வைத்தார். தேர்வாகவில்லை. ‘கவலைப்படாத, அடுத்த செலக்‌ஷன்ல உன்னை கண்டிப்பா எடுப்பாங்க’ என்று ஆறுதல் சொன்னார், ரத்தோர். பிறகு தொடர்ந்து பயிற்சி. ரத்தோர் சொன்னது நடந்தது. U 16- வயதுக்குட்பட்டோருக்கான அணியில் தேர்வானார். அதில் சிறப்பாக செயல்பட, U 19 -க்கான இந்திய அணியில் இடம் கிடைத்தது. இங்கிலாந்துக்கு எதிரான அந்தத் தொடரில் அதிக விக்கெட் எடுத்த பந்துவீச்சாளர் கம்லேஷ்தான். 

அடுத்து விஜய் ஹசாரே போட்டி. இதில் குஜராத்துக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அணியை காப்பாற்றியவர் கம்லேஷ். 

‘பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் வீரர்கள் தேர்வு. கம்லேஷ் வீசிய சில பவுன்சர்கள், யார்க்கர்களை கண்டதுமே வியந்தோம். அவரிடம் இருந்த அந்த வேகம், கண்டிப்பாகச் சாதிப்பார் என்று சொன்னது. அடுத்த நொடியே சேர்த்துவிட்டோம்’ என்கிறார் கிரிக்கெட் அகாடமியை சேர்ந்த ஒருவர். 

சமீபத்தில் நடந்த ஜூனியர் உலகக் கோப்பைப் போட்டியில் நியூசிலாந்து பிட்சில், மணிக்கு 149 கி.மீ வேகத்தில் பந்துவீசி இந்திய சீனியர் பவுலர்களையே மிரள வைத்தார் இவர். அப்போதுதான் ஐபிஎல் ஏலம். நியூசிலாந்தின் ஓட்டல் அறைகளில் உட்கார்ந்துகொண்டு இந்திய ஜூனியர் டீம் ஏலத்தை ஆர்வமாகக் கவனிக்க, கம்லேஷுக்கு பதட்டம். அவர் பெயர் அறிவிக்கப்பட்டதும் ரூம் மேட் பங்கஜ் யாதவ், ‘உம் பேர் வந்தாச்சு’ என்றார் சத்தமாக. அதைக் கேட்டதும் வாஷ் ரூமுக்குள் சென்று உட்கார்ந்து கொண்டார் கம்லேஷ்.

ஏன்?

‘பதட்டம். திடீர்னு ஃபோன் ரிங் ஓயாம அடிச்சுட்டே இருந்தது. நண்பர்கள்தான். நான் எடுக்கலை. அப்புறம் அம்மா ஃபோன்ல வந்தாங்க. கொல்கத்தா டீம்ல என்னை எடுத்திருக்கறதா சொன்னதும் மகிழ்ச்சியா இருந்தது. அம்மா, அப்பா, அண்ணனுக்கு ஹேப்பி. வீட்டுல உட்கார்ந்து ஐபிஎல் மேட்ச் பார்த்துக்கிட்டிருந்தவன் நான். இப்ப, நானே விளையாட போறேன்னு நினைச்சதும் ஜில்லுனு இருக்கு’ என்கிற கம்லேஷ், ‘பிக்பாஷ் போட்டியில ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் லின், விளாசுனதை பார்த்திட்டிருந்தேன். அவரும் கொல்கத்தா டீம்லதான் இருக்கார். அவருக்கு நெட்ல பந்துவீசப் போறதை நினைச்சாலே, சந்தோஷமா இருக்கு’ என்கிறார், புன்னகைத்துக் கொண்டே. 

ஜூனியர் உலகக் கோப்பையில் விளையாடிய கேப்டன் பிருத்வி ஷா, சுப்மன் கில் ஆகியோர் தலா ரூ.1.2 கோடி, 1.8 கோடிக்கு ஏலம் போக, கம்லேஷை 3.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருக்கிறது கொல்கத்தா. இந்திய கிரிக்கெட் அணியின் வருங்கால வேகமான கம்லேஷூக்கு வயது, ஜஸ்ட் பதினெட்டுதான். 

இந்தச் சின்ன வயதில், கோடிகள் கதவைத் தட்ட, திறமையை தவிர வேறென்ன இருக்க முடியும்?
 

முந்தைய தொடர்களை படிக்க : 

ஐபிஎல் அறிமுகம் 5: ’எனக்கு ரூ.6 கோடின்னதும் நம்ப முடியலை’!

ஐபிஎல் அறிமுகம் 4: தோனி ஊரில் இருந்து இன்னொரு விக்கெட் கீப்பர்!

ஐபிஎல் அறிமுகம் 3: ஆப்கான் இளம் சுழல் முஜீப் ஜட்ரான்

ஐபிஎல் அறிமுகம் 2: ஆஸி. அதிரடி டிஆர்ஸி ஷார்ட்!

ஐபிஎல் அறிமுகம்: வெஸ்ட் இண்டீஸ் வேகம் ஆர்ச்சர்!

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close