[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆங்கிலப் புத்தாண்டில் இந்து கோயில்களை திறக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி

சமத்துவமே கோயில்களைப் பாதுகாக்கும்

equality-protects-temples-writer-ravikumar

தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை மீட்பதற்காகக் குழு ஒன்றை அமைக்கவேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இன்னொரு புறம் ’கோயில்களையே அரசாங்கக் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கவேண்டும்’ என பாஜகவினர் பேசி வருகின்றனர். 

நிலங்களை மீட்க வேண்டும் என நீதிமன்றம் கூறியிருப்பது சரியானது. ஏனெனில் தமிழ்நாட்டில் பெரிய நில உடமையாளர்களாக கோயில்களே திகழ்கின்றன. தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சுமார் 39 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களுக்குச் சொந்தமாக 1.83 லட்சம் ஏக்கர் நஞ்சை நிலமும்; 2.18 லட்சம் ஏக்கர் புஞ்சை நிலமும்; 21 ஆயிரம் ஏக்கர் மானாவாரி நிலமும் உள்ளன. இவை தவிர மடங்களுக்குச் சொந்தமாக 21 ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலமும்; 35 ஆயிரம் ஏக்கர் புஞ்சை நிலமும் இருக்கின்றன. ஆக மொத்தத்தில் 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் கோயில்களுக்கும், மடங்களுக்கும் சொந்தமாக இருக்கின்றன. 

நிலங்கள் மட்டுமின்றி கோயில்களுக்குச் சொந்தமான 22,600 கட்டிடங்களும், 33,665 மனைகளும் தனியாருக்குக் குத்தகைக்கு விடப்பட்டிருக்கின்றன. விவசாய நிலங்களை 1,23,729 பேர் குத்தகைக்குப் பயிரிட்டு வருவதாக அரசாங்கம் கூறுகிறது. இவற்றிலிருந்து குத்தகையாக 2016-17 ஆம் ஆண்டில் மட்டும் 141.10 கோடி ரூபாய் வருமானம் வந்ததாக அரசு தெரிவித்துள்ளது. 

கோயில்களுக்கென லட்சக் கணக்கான ஏக்கர் நிலங்கள் இருந்தாலும் அவை பெரும்பாலும் உண்டியல் வசூலைத்தான் நம்பியிருக்கின்றன. ஏனெனில் அவற்றுக்கு நிர்ணயிக்கப்பட்ட குத்தகை சரியாக வசூலிக்கப்படுவதில்லை. அறநிலையத்துறையின் கீழ் ஆணையர், இணை ஆணையர், நிர்வாக அலுவலர் எனப் பல்வேறு பதவிகளில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தாலும்  அவர்களால் குத்தகையை முறையாக வசூலிக்கமுடிவதில்லை. அந்த நிலங்களை குத்தகைக்கு வைத்திருப்போர் செல்வாக்குமிக்க நபர்களாக இருப்பதே அதற்குக் காரணம். குத்தகை சரியாக வருவதில்லை என்பது மட்டுமின்றி ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலங்கள் பலரால் ஆக்கிரமிக்கப்பட்டு, அபகரிக்கப்பட்டிருக்கின்றன. இதை உணர்ந்துதான் நிலங்களை மீட்பதற்குக் குழு அமைக்கவேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது. 


 
குத்தகை சரியாக வரவில்லை என்பதையும், ஆக்கிரமிப்புகளையும் காரணம் காட்டி ஒட்டுமொத்தக் கோயில்களையும் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கவேண்டும் என பாஜகவினர் பேசி வருகின்றனர். அவர்களது வாதம் மிகவும் ஆபத்தானது.  

இந்து அறநிலையத்துறை உருவாக்கப்படுவதற்கு முன்பு அனைத்து கோயில்களுமே குறிப்பிட்ட சில சாதியினரின் கட்டுப்பாட்டின் கீழ்தான் இருந்தன. அப்போது அந்தக் கோயில்கள் யாரால் கட்டப்பட்டன, அக்கோயில்களில் இருக்கும் கல்வெட்டுகள் கூறும் செய்திகள் எவை என்ற விவரங்கள்கூட எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. கோயில்களைப்பற்றி விவரிக்கும் ஸ்தல புராணங்கள் அவற்றின் பெயரைப்போலவே புராணங்களாக இருந்தனவேயொழிய வரலாற்றைக் கூறுவனவாக இல்லை. 

தமிழ்நாட்டின் பெருமைமிகு சின்னங்களில் ஒன்றாக போற்றப்படும் ‘பெரிய கோயில்‘ எவரால் கட்டப்பட்டது என்ற வரலாறுகூட தமிழக மக்களுக்கு வெகுகாலம் வரைத் தெரியாமலே இருந்தது.  கிருமிகண்ட சோழன் என்னும் கரிகாலனால் அக்கோயில் கட்டப்பெற்றது என்றும் அவனுக்கிருந்த குட்டநோய் அங்குள்ள சிவகங்கையில் நீராடியதால் நீங்கியது என்றும் ’பிரகதீஸ்வரர் மகாத்மியம்’ என்னும் வடமொழிப் புராணமும், ’தஞ்சைபுரி மகாத்மியம்’ என்னும் மராட்டியமொழி நூலும் கூறுகின்றன. ஜி.யு.போப் காடுவெட்டிச் சோழன் என்பான் கட்டினான் என எழுதியுள்ளார். 

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தின்போது 1886 ஆம் ஆண்டில் சென்னை அரசாங்கம் ஹூல்ஷ் என்ற ஜெர்மன் அறிஞரைக் கல்வெட்டு ஆய்வாளராக நியமித்தது. அவர் தஞ்சைப் பெரியகோயில் கல்வெட்டுகளைப் படியெடுத்துப் படித்து அதனைக் கட்டியவன் மாமன்னன் ராஜராஜனே என முதன்முதலாகக் கூறினார். அந்தக் கோயிலில் கிடைத்த கல்வெட்டுகளைப் படித்தபிறகே அது எந்த ஆண்டில் குடமுழுக்கு செய்யப்பட்டதென்ற விவரமும் தெரியவந்தது. 

தமிழ்நாட்டிலுள்ள கோயில்கள் அரசுக் கட்டுப்பாட்டில் வராத காலத்தில் அவை மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருந்தன என்பதை அயல்நாட்டு வரலாற்றாசிரியர்களால் வரையப்பட்ட அக்கோயில்களின் ஓவியங்களும், அவர்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் காட்டுகின்றன. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட தஞ்சைப் பெரிய கோயிலின் புகைப்படத்தையும், இப்போது அக்கோயில் உள்ள தோற்றத்தையும் பார்த்தாலே எந்த அளவுக்கு அந்தக் கோயில் அரசாங்கத்தால் சீர்படுத்தப்பட்டுள்ளது என்பது தெரியும். 

பல்லவர் காலம் தொடங்கி நாயக்கர் ஆட்சிக் காலம் வரை கோயில்களில் உருவாக்கப்பட்ட கட்டிடங்கள், சிற்பங்கள், கல்வெட்டுகள், சுவரோவியங்கள் போன்ற அனைத்தும் கவனிப்பாரற்றே கிடந்தன. அறநிலையத் துறையின் முன்முயற்சியில்தான் இப்போது அவை சீரமைக்கப்பட்டு வருகின்றன. வரலாற்றுப் புகழ்பெற்ற திருப்புடை மருதூர் நாறும்பூநாதர் கோயில் கோபுரத்தில் உள்ள ஓவியங்கள் இப்போது சுமார் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் மெருகூட்டப்பட்டு வருவது அதற்கொரு சான்றாகும். 

கோயில்களைப் பராமரிப்பதில் அரசு இன்னும் கூடுதல் அக்கறை செலுத்தவேண்டும் என்பதில் எவருக்கும் கருத்து வேறுபாடு இருக்கமுடியாது. ஆனால், அரசின் பொறுப்பில் இருந்து கோயில்களை விலக்கி மீண்டும் குறிப்பிட்ட சாதியினரின் கையில் ஒப்படைப்பதென்பது, அக்கோயில்களில் உண்டியல் மூலமாக வசூலாகும் தொகையும், நகைகளும்   அபகரிக்கப்படுவதற்குத்தான் வழிவகுக்கும். அதற்கு சிதம்பரம் நடராஜர் கோயிலே சாட்சியமாக இருக்கிறது.

சிதம்பரம் நடராஜர் கோயில் சில காலம் வரை அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டது. அப்போது, அங்கே உண்டியல் மூலம் வசூலான தொகை மட்டுமே பல லட்சங்களாகும். ஆனால், அக்கோயில் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது அப்படியான வருமானம் எதுவும் கணக்கில் காட்டப்படவே இல்லை. அதுமட்டுமின்றி அங்கிருந்த விலைமதிப்பற்ற நகைகளும் கூட காணாமல் போனதாக தீட்சிதர்களில் ஒரு சிலரே புகார் சொல்லும் நிலையும் இருந்தது.

ஆதிதிராவிட சமூகத்தினர் கோயிலுக்குள் நுழையவே முடியாது என்றிருந்த நிலை மாறியதற்கும்; எந்தக் கோயில்களில் அவர்கள் நுழையக்கூடாது என்றார்களோ அந்தக் கோயில்களிலேயே அறங்காவலர்களாக அவர்கள் நியமிக்கப்படுவதற்கும் அந்தக் கோயில்கள் அரசுக் கட்டுப்பாட்டுக்குள் வந்ததே காரணம். ஒவ்வொரு கோயிலிலும் அறங்காவலர்களாக ஒரு பெண்ணும், ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும் கட்டாயமாக நியமிக்கப்படவேண்டும் என்ற விதி அரசாங்கத்தால் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தபடுவது அதனால்தான் சாத்தியமானது. 

கோயில்களில் வழிபடுவதில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சமத்துவத்தையும், அவற்றின்  நிர்வாகத்திலிருந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக விலக்கி வைக்கப்பட்டிருந்த பெண்களும் தலித் சமூகத்தினரும் அறங்காவலர் குழுவில் சேர்க்கப்பட்டதையும்  பா.ஜ.கவினரும் அவர்களை வழிநடத்தும்  ஆர். எஸ்.எஸ் அமைப்பினரும் விரும்புவதில்லை. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலிருந்து கோயில்களை விடுவிக்கவேண்டும் என்ற அவர்களின் கோரிக்கை கோயில்களை பாதுகாப்பதற்கானதல்ல, அரசியலமைப்புச் சட்டத்தால் வழங்கப்பட்டுள்ள சமத்துவத்தை அழித்து மீண்டும் சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளை வலுப்படுத்தவேண்டும் என்ற தீய நோக்கத்தின் அடிப்படையிலானது. கோயில்களை மையப்படுத்திய ஆன்மீக அதிகாரத்தை கையிலெடுத்து அதை அரசு அதிகாரத்துக்கும் மேலே வைக்கவேண்டும் என்ற ஆபத்தான நோக்கம் கொண்டது. 

கோயில்கள் என்பவை ஆன்மிக மையங்கள் மட்டுமல்ல. அவை தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டுக் கருவூலங்கள். அவற்றைப் பாதுகாக்க வேண்டுமெனில் அவை அனைவருக்குமானவை என்ற உணர்வு மக்களுக்கு ஏற்படவேண்டும். அதற்கு கோயில்களின் சொத்துகளை ஆகிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டால் மட்டும் போதாது, கோயில்களை வகுப்புவாதிகளிடமிருந்தும் மீட்கவேண்டும்.  
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : TempleTamilnaduTanjurTempleBJP
Advertisement:
Advertisement:
[X] Close