[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு
  • BREAKING-NEWS சர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு
  • BREAKING-NEWS வரும் 29-ம் தேதி இந்தியா வருகிறார் இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச

வழக்காடு மொழியாகத் தமிழ்: மறுக்கும் அதிகாரம் நீதித் துறைக்கு இருக்கிறதா?

tamil-language-does-the-justice-department-have-the-authority-to-refuse

தமிழக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டதால் தமிழை வழக்காடு மொழியாக ஆக்க முடியாது என மாநிலங்களவையில் மத்திய இணை அமைச்சர் பி.பி.சவுத்ரி பதிலளித்துள்ளார்.

உயர்நீதிமன்றத்தில் தமிழைப் பயன்படுத்த அனுமதி கேட்டு தமிழக அரசிடமிருந்து மத்திய அரசுக்கு 2006 ஆம் ஆண்டு தீர்மானம் ஒன்று அனுப்பப்பட்டதாகவும் அப்போதைய மத்திய அரசு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் அறிவுரையைக் கேட்டு தமிழக அரசின்தீர்மானத்தை அவருக்கு அனுப்பி வைத்தது. 11.10.2012 அன்று உச்சநீதிமன்ற நீதிபதிகளின் முழுமையான கூட்டத்தில் அந்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டதாகவும், தமிழை உயர்நீதிமன்றத்தில் பயன்படுத்துவது என்ற தமிழக அரசின் திட்டத்தை ஏற்பதில்லை என அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகவும் 16.10.2012 அன்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடித விவரம் இப்போதுதான் வெளியே தெரியவந்துள்ளது.

மத்தியில் இப்போது ஆட்சியிலிருக்கும் பாஜக அரசு தமிழை வழக்காடு மொழியாக அனுமதிக்க வேண்டுமென நினைத்தால் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று அதைச் செய்யமுடியும். அப்படிச் செய்வதற்கு மனமில்லாத காரணத்தால்தான் 2012 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் எழுதிய கடிதத்துக்குப் பின்னால்போய் ஒளிந்துகொள்கிறது. 

இந்திய குடியரசில் இடம்பெற்றுள்ள மாநிலம் ஒன்று தனது எல்லைக்குள் இருக்கும் உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகத் தனது மாநில மொழி இருக்கவேண்டும் என சட்டம் இயற்றினால் அதற்கு ஒப்புதலோ மறுப்போ தெரிவிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்குத்தான் இருக்கிறது. அந்த கோரிக்கையை நிராகரிப்பதற்கு உச்சநீதிமன்றத்துக்கு எந்தவொரு அதிகாரத்தையும் நமது அரசியலமைப்புச் சட்டம்வழங்கவில்லை. எனவே மத்திய அரசு இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் அறிவுரையைப் பெறவேண்டிய தேவையே இல்லை.பொறுப்பைத் தட்டிக்கழிப்பதற்காக மத்திய அரசு அப்படியே ஆலோசனை கேட்டாலும்கூட அரசியலமைப்புச் சட்டத்துக்கு மாறாக அந்தக் கோரிக்கையை உச்சநீதிமன்றம் எப்படி நிராகரித்தது என்பது புதிராக இருக்கிறது.

பாராளுமன்றத்தில் சட்டம் எதுவும் இயற்றாத பட்சத்தில் உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றங்களின் அனைத்து நடவடிக்கைகளும் ஆங்கிலத்திலேயே இருக்கவேண்டும் என இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 348 (1) கூறுகிறது. அதுமட்டுமின்றி, பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும், சட்டப் பேரவைகளிலும் அறிமுகப்படுத்தப்படுகிற மசோதாக்கள் நிறைவேற்றப்படும் சட்டங்கள்; குடியரசுத் தலைவர்,ஆளுநர் பிறப்பிக்கும் அவசர சட்டங்கள்; அரசியலமைப்புச் சட்டப்படி வெளியிடப்படும் ஆணைகள், விதிகள், கொள்கைகள், ஒழுங்காணைகள் யாவும் ஆங்கிலத்திலேயே இருக்கவேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. அதே சமயத்தில், ஒரு மாநிலத்தின் ஆளுநர் உரிய விதத்தில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று இந்தியையோ அல்லது வேறு எந்த மொழியையோ அந்த மாநிலத்தில் அமைந்திருக்கும் உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகப் பயன்படுத்த அதிகாரம் வழங்கலாம் என அதே பிரிவு 348 ன் உட்பிரிவு 2 தெளிவுபடுத்துகிறது.

அரசியலமைப்புச் சட்டம் கூறியுள்ளதன் தொடர்ச்சியாக இந்திய ஆட்சி மொழிச்சட்டமும் ஒரு விளக்கத்தை அளித்துள்ளது. உயர்நீதிமன்ற நடவடிக்கைகளை மாநில மொழியில் நடத்திக் கொள்ளலாம். ஆனால் அதற்கு முன் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று ஆட்சி மொழிச்சட்டத்தின் பிரிவு 7 கூறுகிறது. குடியரசுத் தலைவரிடம் ஆளுநர் அனுமதி பெறவேண்டும் என்பதன் பொருள் அதற்காக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டத்துக்கு அவர் ஒப்புதல் பெறவேண்டும் என்பதுதான். வழக்காடு மொழியாக உயர்நீதிமன்றங்களில் மாநில மொழியை வைத்துக்கொள்ளலாம் என அனுமதி அளிக்கப்பட்டிருந்தும் கூட ஏதேதோ காரணங்களால் தமிழக அரசு அந்த உரிமையைப் பயன்படுத்தாமல் காலந்தாழ்த்தி வந்தது. 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போதுதான் அதற்கான தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. 

அது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சொல்லப்பட்டாலும் அதிமுக உறுப்பினர்களும் அப்போது அதிமுக கூட்டணியில் இருந்த மதிமுக
உறுப்பினர்களும் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படும்போது அவையில் இல்லாமல் புறக்கணித்துவிட்டனர். ஒரு மாநிலத்தில் பேசப்படும் மொழியை அங்குள்ள உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக அறிவித்திருப்பது இந்தியாவுக்குப் புதிதல்ல. ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்களில் ஏற்கனவே உயர்நீதிமன்ற மொழியாக அந்தந்த மாநில மொழிகள் தான் இருக்கின்றன. அதே அளவுகோலைப் பின்பற்றி தமிழக

அரசு நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருக்கவேண்டும். ஆனால் அப்போதைய குடியரசுத்தலைவரான பிரணாப் முகர்ஜி அப்படி ஒப்புதல் அளிக்கவில்லை. தமிழ்நாட்டிலுள்ள கீழமை நீதிமன்றங்களில் 1976 ஆம் ஆண்டிலிருந்தே தமிழ் வழக்காடுமொழியாக இருந்துவருகிறது. சட்ட நூல்கள் போதுமான அளவில் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை என்பதுதவிர அதனால் நீதி பரிபாலன முறையில் குறை எதுவும் நேர்ந்துவிடவில்லை. 2006 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது 2001 டிசம்பரிலும், 2003 மார்ச் மாதத்திலும் எதிர்ப்பு தெரிவித்ததைப்போல சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எதிர்ப்பேதும் தெரிவிக்கவில்லை. ’தமிழை வழக்காடு மொழியாக ஆக்குவதற்கு முன் அதற்கான உள்கட்டமைப்புகளைச் செய்ய வேண்டும்’ என்று ஆலோசனை மட்டுமே கூறியிருந்தார்.

மாநில மொழிகளை வழக்காடு மொழியாக ஆக்குவதை அம்பேத்கரேகூட ஆதரிக்கவில்லை என பாஜகவினர் கூறிவருகின்றனர். ஒரு மாநிலத்தின் மொழி வழக்காடு மொழியாக ஆக்கப்படுவதால் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களை மனதில் கொண்டு தான் அம்பேத்கர் மொழிவாரி மாகாண கமிஷன் முன்பு 1948ல் சமர்ப்பித்த அறிக்கையில் அப்படி குறிப்பிட்டிருந்தார்.ஒவ்வொரு மாநிலமும் அந்தந்த மாநில மொழியைத் தான் உயர்நீதிமன்றங்களில் பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்து விட்டால்அதன்பிறகு உச்சநீதிமன்றத்தை மூடிவிட்டுப் போகவேண்டியது தான்  என்று அவர் கூறியது உண்மைதான். முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் மட்டுமின்றி ’ஃப்ளெக்ஸ் போர்டு வைக்கலாமா கூடாதா’ என்ற வழக்குகூட உச்சநீதிமன்றம்வரை போகிறது. அப்படியான சூழலில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்லா மாநில மொழிகளையும் கற்றுத் தேர்வது சாத்தியமில்லை என்பதாலேயே அம்பேத்கர் அப்படி கூறினார். இன்று மொழிபெயர்ப்புப்
பணியை கணிணிகள் எளிதாக்கிவிட்டன.

எனவே அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் நிலவிய சூழலையொட்டி தெரிவிக்கப்பட்ட அந்தக் கருத்தை இப்போதும் வலியுறுத்தவேண்டிய அவசியமில்லை. தமிழை வழக்காடு மொழி ஆக்கவேண்டும் என்ற தீர்மானம் மட்டுமல்ல தமிழை மத்திய அரசின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆக்கவேண்டும் என்ற தீர்மானமும்கூட புறக்கணிக்கப்பட்டே கிடக்கிறது. 1968 ஜனவரி 23 ஆம் நாள் தமிழக சட்டப் பேரவையில் அன்றைய கல்வி அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியனால் முன்மொழியப்பட்ட தமிழ் உள்ளிட்ட அனைத்து தேசிய மொழிகளும் மைய அரசின் ஆட்சி மொழிகளாக்கப்பட வேண்டும். அதற்கான சட்டத்திருத்தம் செய்யப்பட வேண்டும். அதுவரை ஆங்கிலம் மட்டுமே ஆட்சி

மொழியாக இருக்க வேண்டும் என்ற தீர்மானமும் இதுவரை செயல்வடிவம் பெறவில்லை. இவை எல்லாவற்றுக்கும் நாம் மத்திய அரசை மட்டுமே குறைகூறிவிட்டுத் தப்பிக்கமுடியாது. அரசியலமைப்புச் சட்டத்தில் உறுதியளிக்கப்பட்ட உரிமையைக்கூட நிலைநாட்ட முடியாதது நமது பலவீனம்தான்.மொழிப்போரில் உயிர்நீத்தவர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் வீரவணக்கநாள் பொதுக்கூட்டங்களை நடத்தினால் மட்டும் போதாது, நமது மொழி உரிமை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டால் மீண்டும் இங்கே மொழிப்போர் மூளும் என்ற செய்தியை அழுத்தமாக மத்திய அரசுக்கு நாம் தெரிவிக்கவேண்டும். அதற்கு இதுதான் உகந்த தருணம்.
 

(முனைவர் ரவிக்குமார் : எழுத்தாளர், அரசியல் விமர்சகர், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர், மணற்கேணி ஆய்விதழின் ஆசிரியர். தொடர்புக்கு writerravikumar@gmail.com)

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close