[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் விழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் (வயது 62) உயிரிழப்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.08 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.32 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் வைக்க எதிர்ப்பு தெரிவித்தவர் விஜயகாந்த் என்பதால் அவருடன் கூட்டணி வைத்தால் தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS தேமுதிகவோடு தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்; ஓரிரு நாட்களில் கூட்டணி அமையும் - மதுரை விமானநிலையத்தில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
  • BREAKING-NEWS மதுரையில் பாஜக, அதிமுக நிர்வாகிகளை சந்திக்கவில்லை - த.மா.கா தலைவர் வாசன் புதிய தலைமுறைக்கு பேட்டி
  • BREAKING-NEWS வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் - ராமநாதபுரம் பாஜக பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேச்சு
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட பிப்.24 முதல் விருப்பமனு விநியோகம்

இரட்டை இலை இருந்தும் ஜெயலலிதாவே தோற்றாரே ஏன்? 

two-leaves-symbol-special-story

கடைசியாக இரட்டை இலை விவகாரம் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. பலரும் எதிர்பார்த்தபடி தேர்தல் ஆணையம் இபிஎஸ்-ஒபிஎஸ் அணிக்கு அந்த அழகிய இலையை அன்பளிப்பாக அளித்திருக்கிறது. அதிமுகவில் உறுப்பினரே இல்லாத தீபா தனக்கும் உரிமை உண்டு என தேர்தல் ஆணையத்தின் படியேறிப்பார்த்தார். கட்சியின் அடிப்படை உறுப்பினரே இல்லாத இவர் கட்சியில் உரிமை கோரியது விநோதம் அல்ல; ட்ராஜடி. ஒரு ஜனநாயக அமைப்பில் உட்கார்ந்து கொண்டு ஒருவர் மன்னர் மனநிலையில் கட்சிக்கு வாரிசு உரிமை கோரியதை வேறு எப்படி சொல்ல முடியும் சொல்லுங்கள்?

தனக்கு சின்னம் கிடைக்கவில்லை என்றாலும் தினகரன் மிக தெளிவாக ஒரு விஷயத்தை முன் வைத்திருக்கிறார். சின்னம் முக்கியமில்லை. வேட்பாளர்தான் முக்கியம் என்கிறார். (இதன் நடுவே ‘லஞ்சம் கொடுத்து வாங்க நினைத்தார்’என முதலில் ஒருவர் மீது குற்றம் சொல்லிவிட்டு ‘லஞ்சமே தராத இருவர் அணிக்கு நாங்கள் அளித்திருக்கிறோம்’ என தூய்மையை நிரூபித்திருக்கிறது தேர்தல் ஆணையம். அவர் சொல்வதை போல சின்னத்தை சின்னதாக அளவிட முடியாது. மக்கள் அளப்பரிய மரியாதையை சின்னத்தின் மீது கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதை மட்டுமே வைத்து மதியை குழப்ப நினைத்தால் உடைத்து எறிந்துவிட்டு வேறு நபரை ஆதரிக்கவும் தயங்கமாட்டார்கள். அதான் உண்மை என்கிறது இதுவரை உள்ள அரசியல் நடைமுறை.

சின்னத்திற்கு இருக்கும் செல்வாக்கை உணர்ந்ததால்தான் ஒபிஎஸ்-இபிஎஸ் அணி உற்சாகத்தில் கொண்ட்டாம் போடுகிறார்கள் என்றும் நாம் எடை போட்டுவிட முடியாது. அவர்கள் தங்கள் தரப்புக்கு ஒரு வெற்றி கிடைத்து விட்டது. உண்மையான வாரிசு நாங்கள்தான் என்ற அடையாளம் கிடைத்துவிட்டது என்றே இந்த சின்ன விவகாரத்தை பார்க்கிறார்கள். ஆனால் அதை தாண்டி அவர்கள் போக வேண்டிய தூரம் எவ்வளவோ இருக்கிறது. இந்த ஆட்சியை அவர்கள் தொடர்ந்து கொண்டு போக முதல் தேவை ஆர்.கே,நகரின் வெற்றி. அதை அவர்கள் எப்படி ‘சமாளிக்க வேண்டும்’ என்று முன்பே ஜெயலலிதா கற்று கொடுத்துவிட்டுப் போய் இருக்கிறார். அதன்படி அவர்கள் இடையில் ஒரு வெற்றியை அடைந்தாலும் ஆச்சர்யமில்லை. அப்போது டிடிவி தினகரன் இது இடைத்தேர்தல். அடுத்து வருகின்ற பொதுதேர்தலில் நாங்கள் நிரூபிப்போம் என சொல்வார். 

இன்று பலரும் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு வெற்றிடம் வந்துவிட்டது என்கிறார்கள். அரசியலில் அப்படி ஒரு வெற்றிடம் இருக்கிறதா என்ன? காந்தியை சுட்ட அடுத்த நாளே அரசியல் அநாதையாகிவிட்டதா தேசம்? இல்லையே. அவரது இறுதி சடங்கு முடிந்த கையோடு தேசம் தனது வழக்கமான வாழ்க்கைக்கு திரும்பிவிட்டதே. முதலில் காந்திதான் காங்கிரஸ். காங்கிரஸ்தான் காந்தி என்றார்கள். ஆனால் அந்த காந்தி கடைசி வரை காங்கிரஸில் கவுன்சிலராக கூட இல்லை. இந்திய மக்களுக்கு ஒரு உண்மையான முகம் தேவைப்பட்டது. அந்த உண்மையின் அடையாளமாக காந்தியைக் காட்டினார்கள். அவர் மறைந்ததும் இந்தியா என்றால் காங்கிரஸ். காங்கிரஸ் என்றால் இந்தியா என்ற முழகத்தை மாற்றினார்கள். அதை மக்கள் முழுமையாக மக்கள் ஏற்றுக் கொண்டிருந்தால் ஜனதா தளம் உள்ளே வந்திருக்க முடியாது? வி.பி.சிங் பிறந்திருக்க முடியாது? தேவேகவுடா பிரதமர் பதவியில் அமர்ந்திருக்க இருக்க முடியாது. இதை எல்லாம் தாண்டி இன்று பாஜகதான் இவ்வளவு பெரும்பான்மையோடு ஆட்சிக்கு வந்திருக்குமா என்ன? டெல்லி எங்கள் கோட்டை என்று காலகாலமாக கருத்து சொல்லிக் கொண்டிருந்த போது முன்பின் தெரியாத ஒரு கெஜ்ரிவால் வந்து உள்ளே உட்காருகிறார். அதுவரை துடைப்பத்தை வீட்டு வேலைக்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருந்த டெல்லிவாசிகள் துடைப்பத்திற்கு சிம்மாசனத்தை ஏற்படுத்தி கொடுத்தார்கள். 

அந்த சின்னம் அதுவரை யார் கையில் இருந்தது? கெஜ்ரிவாலுக்குப் பின்னால் யார் கையில் இருக்கப்போகிறது என்பது எல்லாம் விஷயமே இல்லை. ஆனால் அரசியலில் புதியதாக ஒரு கெஜ்ரிவால் தேவைப்பட்டார். அதான் அனைத்தையும் முடிவு செய்தது. 

இந்தியா விடுதலை பெற்ற பிறகு மக்கள் எண்ணிக்கையை விட ஜாதி  எண்ணிக்கையை விட கட்சிகளின் எண்ணிக்கை அதிகமானது உண்மை. கட்சிகளை சீர் செய்ய தேர்தல் ஆணையம் என்ற ஒன்று தேவை. ஆனால் அந்த ஆணையம் வலிமையான வடிவமாக கடமையாற்ற வேண்டும்.  ஒரு அதிகாரியாக டி.என்.சேஷன் வரும் வரை தேர்தல் ஆணையத்திற்கு என்று சில வரம்புகள் இருக்கிறது என்றே பல கட்சிகளுக்குத் தெரியாது. போஸ்டர் அடிக்கக்கூடாது. அடுத்தவன் சுவரை அசிங்கப்படுத்தக் கூடாது. தேர்தல் அறிவிப்புக்குப் பின் சலுகைகள் தந்து மக்களை மதி மயக்க கூடாது என்று எவ்வளவு மாறுதல்கள்? ஆனால் அந்த ஒரு டி.என்.சேஷனுக்குப் பிறகு புதிய ரத்தம் பாய்ச்ச ஒரு ஆள் வரவில்லை. அதான் இங்கே மிகப் பெரிய குறை. முறையாக ஆணையம் நடந்து கொண்டாலும் அதில் எப்படியோ சந்தேகங்கள் உள்ளே புகுந்துவிடுகின்றன. சேஷனை சந்தேகப்படாத மக்கள் வேறு ஒருவரை சந்தேகப்படுகிறார்கள். அதற்கு காரணம் அவர்கள் அளித்துவிட்டுப் போகும் நம்பிக்கை. அது உடையும் போதும் சந்தேகம் சந்து வழியாக உள்ளே வந்துவிடுகிறது. 

தேர்தல் ஆணையத்திற்கு புதியதாக சேஷன் தேவைப்படுகிறார். டெல்லி அரசியலுக்கு புதியதாக ஒரு கெஜ்ரிவால் தேவைப்படுகிறார். அப்படிதான் பாஜகவுக்கு புதியவராக மோடி தேவைப்பட்டார். இன்று காலம்காலமாக இருந்த காங்கிரஸுக்கு இப்போது ஒரு புதிய அடையாளமாக ராகுலோ அல்லது வேறு யாரோ தேவைப்படுகிறார்கள். 

நூற்றுக்கு முந்நூமுறை ‘ஒன்னரை கோடி தொண்டர்கள் ஒன்னரைக் கோடி தொண்டர்கள்’ என்கிறார்களே அதிமுக அமைச்சர்கள். அந்த ஒன்னரை கோடியில் இருந்து ஒரு தலைவர் அதிமுகவுக்கு தேவைப்படுகிறார். அவர் வந்துதான் கட்சிக்கும் சின்னத்திற்கும் உயிர் கொடுக்க வேண்டும். அப்படி எம்.ஜி.ஆருக்குப் பின் வந்தவர்தான் ஜெயலலிதா. ஆனால் அவர் தவறு செய்தால் அந்த ஒன்னரை கோடி தொண்டர்களும் எதிர்த்து பேச மாட்டார்கள். மெளனம் காப்பார்கள். ஏன்? இந்த ஆறுகோடியில் அடங்கியதானே இந்த ஒன்னரைக் கோடி. அதனால்தான் இந்த ஒன்னரை கோடி தொண்டர்கள் இருந்தும் ஜெயலலிதா பர்கூர் தொகுதியில் தோற்று போனார்? ’இனி நம்மை அசைக்க முடியாது’ என்று எம்.ஜி.ஆரை வெளியேற்றிவிட்டு ஆசுவாசமாக உட்கார்ந்திருந்தாரே கருணாநிதி அவரால் அதன் பின் 10 ஆண்டுகள் நிம்மதியாக ஆட்சிக்கட்டிலை பிடிக்க முடிந்தது போனதும் அதனால்தான்? மாறிமாறி ஒரு மனிதன் சாகும் வரை அரியணையில் வைத்து அழகு பார்த்தார்களே தமிழ்நாட்டு வாக்களர்கள். அதற்கு என்ன காரணம் கருணாநிதி செய்த ஒரு அரசியல் தவறு. அவர் எம்.ஜி.ஆரை வெளியேற்றிய தவறுக்காக அவர் தவம் இருந்தார். ஜெயலலிதா செய்த ஊழல் என்ற ஒரு அரசியல் தவறுக்காக அவர் ஆட்சியை இழந்தார். சின்னம் இருந்தும் இவர்கள் சிதறிப்போக நேர்ந்தது. 

எம்.ஜி.ஆர் கட்சியைவிட்டு வெளியேறிய பிறகு பெரிய கட்சியின் பின்னால் போனாரா? அல்லது பழக்கமான சின்னத்தின் பின்னால் நின்றாரா? இல்லையே? உலகிற்கு அதுவரை யார் என்றே தெரியாத அனகாபுத்தூர் இராமலிங்கம் பதிவு செய்து வைத்திருந்த ‘அதிமுக’வில் போய் தன்னை இணைத்து கொண்டு ‘ஒரு சாதாரணத் தொண்டன் தொடங்கிய கட்சியில் என்னை இணைத்து கொண்டேன்’என்று அறிவித்தாரே. அதன் பின் அவர் அரசியல் உலகில் அதிக காலம் ஆட்சி செலுத்தவில்லையா? அவர் நடிகர் என்பது அவருக்கு துணை செய்திருக்கலாம். ஆனால் அதைவிட அவரது அரசியல் தைரியம் உலகம் எங்கும் அவரை கொண்டு போய் நிறுத்தியது. அரசியல் வாழ்வில் மிகப் பெரிய ராஜதந்திரி என்று புகழப்பட்ட மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர் இறக்கும் வரை எழுந்து நிற்கவேயில்லை. அப்போது எங்கே போனது இந்த சின்ன அரசியல். இரட்டை இலை முளைப்பதற்கு முன்பே தோன்றிய உதயசூரியன் உள் அடங்கிக் கிடந்ததே அது ஏன்? 
பசுவும் கன்றையும் கையில் வைத்திருந்தால் போதும் என்று கனவு கண்டுக் கொண்டிருந்த பழைய காங்கிரஸ் இந்திரா காங்கிரசின் கை சின்னத்தின் முன்னால் புதைந்து போனதே அது ஏன்? யானை வைத்து தனது முதல் அரசியல் அடையாளத்தை ஆரம்பித்த பாமக கடைசி வரை அதிகப்படியான இடங்களை பிடிக்கவில்லை. ஆனால் அவர்கள் கைக்கு மாம்பழம் வந்ததும் தான் கட்சி அங்கீகாரத்தையே கைக்குள் வைக்க முடிந்ததே அது ஏன்? 
குடை என்றார் வைகோ. அப்புறம் பம்பரம் என்றார். மாற்றிமாறி தேர்தல் ஆணையம் அவரை தேய்த்தது. அவரும் தேர்தல் ஆணையத்தின் முன் பல சின்னங்களை போராடி பெற்றார். ஆனால் சட்டசபைக்குள் ஒரு ஆளை கூட அனுப்ப முடியவில்லையே அது ஏன்? அவருக்குப் பின்னால் வந்த விஜயகாந்த் முரசு கொட்டி எதிர்க்கட்சி தலைவரானாரே அது ஏன்?

1977 சட்டசபை பொதுதேர்தலில் 131 தொகுதிகளில் வெற்றிப் பெற்ற அதிமுக எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு 1991ல் 164 இடங்களை கைப்பற்றியது. அதன் பிறகு வளர்ப்பு மகன் திருமணம். ஒட்டியாணம் கட்டிக் கொண்டு காட்சி தந்தது. டான்சி நிலத்தை தன் வீட்டுக்கு கொண்டு வந்தது என எங்கும் ஊழல் சுரந்து பொங்கியதை கண்டு ‘இனி ஆண்டவனால் கூட தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது’ என்று ஒருவர் முழங்கியதற்கு பின் 1996 தேர்தலில் 4 இடத்தை மட்டுமே அதிமுக பிடிக்க முடிந்ததே அது ஏன்?  அப்போதும் இரட்டை இல்லை இங்கேதானே இருந்தது.
 
இங்கே வெறுமனே சின்னத்தை வைத்து கொண்டு ஆட்சியை நடத்திவிட முடியாது. அதை இந்த அரசியல் கட்சிகளுக்கு மக்கள் பலமுறை பாடம் நடத்தியிருக்கிறார்கள். 

அதிமுகவின் அடையாளமாக முதன்முதலாக கருப்பு சிகப்புக் கொடிக்கு நடுவில் தாமரையை போட்டு அடையாளப் படுத்தினார்கள் தொண்டர்கள். அதுதான் அதிமுகவின் முதல் அடையாளம். மதுரை ஜான்சி ராணி பூங்காவில் மகோரா என்பவரால் 1977ல்  இது ஏற்படுத்தப்பட்டது. எம்.ஜி.ஆர் கட்சி தொடங்க போகிறார் என்றதும் அவரது ஆதரவாளர்கள் பலர் இந்தத் தாமரைக் கொடியை வீட்டுக்கு முன்பாக பறக்கவிட்டார்கள். பிறகுதான் அண்ணாவை தன் கொடியில் எம்.ஜி.ஆர் பயன்படுத்தினார். அதிமுகவுக்கு இரட்டை இலை வரும் என்று எம்.ஜி.ஆர். எதிர்பாக்கவே இல்லை. முதலில் இருந்த தாமரையை விட்டுவிட்டு இலைக்கு மாறுவோம் என்று. 
காலமும் எதிர்பார்க்கவில்லை இன்று அதே தாமரை மீண்டும் இலைக்கு பின்னால் நின்று சில சர்ச்சைகளுக்கு சாலை போட்டுக் கொடுக்கும் என்று. 
இதனால் சகலவிதமான ஜனக்களுக்கு சொல்வது என்ன? இலை மறைவாக காய் இருக்கலாம். ஆனால் இலைக்கு மேல்தான் தடாகத்தில் தாமரை இருக்க வேண்டும். 
வெறும் சின்ன அரசியலைவிட்டு அரசியல் வெளியே வந்து கொண்டிருக்கும் காலம் இது. அதை எந்த அரசியல்வாதி அதை புரிந்து கொள்கிறாரோ அவரது சின்னம் கோட்டைக்குள் புகும். அந்தக் காலம் வெகுதொலைவில்லை.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close