[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாநில சுயாட்சிக் கொள்கை நிலை நிறுத்தப்பட எந்த தியாகத்திற்கும் திமுக தயார் - ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆளுநர் குறித்து பேச சபாநாயகர் அனுமதி வழங்காததால் திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு
  • BREAKING-NEWS கடந்த காலங்களில் திமுக- அதிமுக ஆளும் கட்சியாக இருந்தபோதும் ஆளுநர் ஆய்வு நடத்தியதில்லை- ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆளுநரின் ஆய்வுக்கு எதிராக போராட அரசியல் கட்சிகளுக்கு உரிமை உண்டு- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சேலத்தில் ஆக.22 முதல் செப்.2 வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சியர்
  • BREAKING-NEWS அதிகாரிகளை அழைத்து ஆளுநர் விவாதிப்பது அவரது எல்லையை கடந்த செயலாகும்- வைகோ
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்

ஜெயலலிதா மறைவுக்குப் பின் தமிழகத்தில் பாய்ந்த வருமானவரித்துறை

income-tax-raids-in-tamilnadu-after-the-jayalalitha-death

கடந்த ஒரு வருடமாக தமிழகத்தில் வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனைகள் கணிசமாக அதிகரித்துள்ளன. ஒருமுறை தலைமை செயலகத்திற்கு உள்ளேயே சென்று சோதனை நடத்தியதை அதன் உச்சமாகக் கூறலாம். ஆனால் இத்தகைய அதிரடி சோதனைகள் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகுதான் அதிகரித்துள்ளது.

சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் கடந்த 6 நாட்களாக நடைபெற்ற சோதனை வருமானவரித்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத ஒன்று என்கிறார்கள்.

ஜெயா தொலைக்காட்சி, போயஸ் கார்டன், கோடநாடு எஸ்டேட், நமது எம்ஜிஆர் அலுவலகம் என்று சசிகலாவுக்கு சொந்தமான மிடாஸ், காகித ஆலைகள், ஜாஸ் சினிமாஸ், தினகரனின் புதுச்சேரி பண்ணை வீடு, தினகரன் ஆதரவாளர் புகழேந்தி, ம.நடராஜன், ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனின் வீடு இன்னும் சசிகலாவின் உறவினர்கள் வீடு என மொத்தம் 187 இடங்களில் இந்த சோதனை நடந்தது.



இதற்காக ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மட்டும் சேர்ந்த சுமார் 1000 அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். “ஸ்ரீனி வெட்ஸ் மஹி” என்ற பெயரில் திருமணத்திற்கு செல்வது போன்று வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு சென்றனர். வாடகைக்கார்கள், அரசுப் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களில் சென்றது தனிச்சிறப்பு.

சசிகலாவின் குடும்பத்தினர் மீது இந்த பிரம்மாண்ட சோதனை தேவையா? என்றும், இவ்வளவு பெரிய சோதனை நடத்தும் அளவுவிற்கு அவர்களிடம் சொத்து உள்ளதா? என்றும் பல கேள்விகள் எழுந்தன. 

சோதனையின் போது, திருவாரூரில் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ஓட்டல்களில் இருந்த கொண்டுவரப்பட்ட உணவை திவாகரன் ஆதரவாளர்கள் சோதனை செய்தது, சோதனையின் போது தினகரன் கோ பூஜை நடத்தி மாட்டிற்கு அகத்திக்கீரை கொடுத்தது, சசிகாலவின் ஜோசியருக்கு சம்மன் அனுப்பப்பட்டது, சோதனையைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று விவேக் கூறியது ஆகியவைச் சோதனையைக் கடந்த பரபரப்பு சம்பவங்கள். இதை எல்லாம் பார்த்தால் சோதனை ஊடகங்களில்தான் பெரியதாக காட்டப்பட்டது போலவும், இது தங்களுக்கு சாதாரண விஷயம் போலவும்தான் அவர்களின் ரியாக்ஷன் இருந்தது.

இந்த கிடுக்கிப்பிடி சோதனை ஒரு வழியாக 5வது நாளில் முழு நிறைவை எட்டியது. சசிகலா குடும்பத்தினர் கணக்கில் காட்டாத 1,430 கோடி ரூபாயை 18 நிறுவனங்களில் முதலீடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. 7 கோடி ரூபாய் ரொக்கம், 5 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 16 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. மிடாஸ் மதுபான ஆலையில் கணக்கில் காட்டப்படாத ரூ.19 லட்சம் தொகை, தங்கமாக மாற்றப்பட்டிருப்பதும் தெரியவந்தது. 

இந்த சோதனைகள் எல்லாம் ஜெயலலிதா இல்லாததனால்தான் நடந்தது என்று ஒரு கருத்து நிலவுகிறது. 

ஏனெனில் ஜெயலிதா வசித்த போயஸ் கார்டனில் உள்ள நமது எம்ஜிஆர் நாளிதழின் பழைய அலுவலகம், ஜெயலலிதாவின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் சொல்லி வந்த நமது எம்.ஜி.ஆர் நாளிதழ், ஜெயா டிவி, ஜெயலலிதா உற்சாக வரவேற்புடன் சென்று ஓய்வெடுக்கும் கோடநாடு பங்களா ஆகிய இடங்களும் சோதனைக்குத் தப்பவில்லை.

மற்றொருபுறம் இவ்வளவு சொத்துக்களையும் சசிகலா குடும்பத்தினர் ஜெயலலிதா என்ற ஒரு ஆளுமை இல்லாமல் சேர்த்திருக்க முடியுமா? என்றும் பலர் கேள்வி எழுப்புகின்றனர்.

ஆனால் சசிகலா குடும்பத்தினர்  சொத்துக்கள் அனைத்தையும் ஜெயலலிதாவிற்கே தெரியாமல் அவைரையே ஏமாற்றி சசிகலா குடும்பத்தினர் சேர்த்தது என ஈபிஎஸ்-ஓபிஎஸ் அணி துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறிவிட்டார்.

இந்த சோதனைகளின் போது அதிகம் விசாரிக்கப்பட்டவர் விவேக் ஜெயராமன்தான். ஜெயா டிவி சிஇஓ. ஜெயலலிதா இருக்கும் போது மிகவும் செல்வாக்குடன் திகழ்ந்தவர். சசிகலாவின் அண்ணன் ஜெயராமன், இளவரசி தம்பதியின் மகனான இவர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டிலேயே வளர்ந்தவர். பெங்களூருவில் இவர் பணிபுரிந்த போது, சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலிலதாவுக்கும் சசிகலாவுக்கும் சிறை தண்டனை கிடைத்தது. சிறையில் இருந்த அவர்களுக்கு மருந்து வாங்கி வந்துகொடுக்கும் பணியை விவேக் செய்துவந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக ஜெயலலிதாவின் குடும்ப ரேஷன் கார்டில் இடம்பிடிக்கும் அளவுக்கு விவேக் முக்கியமானவராகத் திகழ்ந்தார். அவ்வளவு முக்கியமானவர் தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் அவரை கையோடு விசாரணைக்கு அழைத்துச் செல்லும் நிலைக்கு வந்துவிட்டார். 

தினகரன் ஆதரவாளரான கர்நாடகாவைச் சேர்ந்த புகழேந்தியிடமும் விசாரணை நடந்தது. தினகரனை மிரட்ட மத்திய அரசு மூலம், மாநில அரசு மேற்கொள்ளும் சோதனை என்றும் கூறப்பட்டது. 

வருமானத்திற்கு அதிகமாக அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும், தொழில் அதிபர்களும், கலைஞர்கள் உட்பட எவரேனும் சொத்து சேர்த்தால், அவர்கள் மீது வருமான வரித்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லும் எதிர்க்கட்சிகள், மத்திய அரசிற்கு வேண்டாதவர்கள் மீது மட்டும்தான் தொடர்ந்து வருமான வரித்துறையினரின் சோதனை மேற்கொள்ளப்படுகிறது என்பதையும் சேர்த்தே சொல்கிறார்கள்.

இந்த சோதனைதான் என்றில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பின் இது போன்ற சோதனைகள் இதற்கு முன்னும் நடைபெற்றன.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த போது பல தொழிலதிபர்கள் முறைகேடாக பணமாற்றம் செய்வதாக புகார்கள் எழுந்தன. இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் தொழில் அதிபர் சேகர் ரெட்டியின் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் ரூ.96.89 கோடி பழைய ரூபாய் நோட்டுகளையும், ரூ.9.63 கோடி மதிப்புள்ள புதிய 2,000 ரூபாய் நோட்டுகளையும் பறிமுதல் செய்தனர். அத்துடன் 127 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு மட்டும் ரூ.36.29 கோடி.

இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன் வருமான வருமான வரித்துறையினர், தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் களமிறங்கினர். ராம மோகனராவ் வீடு, அவரது உறவினர் வீடு உள்ளிட்ட 10 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இதில் ரூ.30 லட்சம் ரொக்கம், 5 கிலோ தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. அவரைத் தொடர்ந்து அவரது மகன் விவேக் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த விவகாரத்தில்தான் முதன் முறையாக தலைமைச் செயலகத்தில் சோதனை நடத்தப்பட்ட சம்பவமும் அரங்கேறியது.

ஆர்.கே நகர் இடைத்தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடந்தது. இந்த சம்பவத்தில் கணக்கில் வராத பணம் என ரூ.89 கோடி கைப்பற்றப்பட்டது. சமீபத்தில், மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிக்கு எதிராக மெர்சல் படத்தில் சில வசனங்கள் இடம் பெற்றிருந்தன. அதற்கு தமிழக பாஜக தலைவர்கள்  எதிர்ப்பு தெரிவிக்க, தென்னிந்திய நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தார். அடுத்த நாளே அவர் வீட்டிற்கு வருமான வரித்துறையினர் சோதனைக்கு சென்றதாக பரபரப்பானது. ஆனால்  விஷால் வருமான வரித்துறையினர் வரவில்லை என்று சொல்லி விட்டார்.

ஆனால் இந்தச் சோதனைகளின் முடிவுதான் என்ன? என்ற கேள்வி எழாமல் இல்லை.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இது போன்ற சோதனைகளில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டாலும் அந்த பணம் என்ன ஆனது? முறைகேடு செய்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ன? என்று கேள்வி எழுப்பினார். அந்தக் கேள்விதான் கடைசியாகத் தொக்கி நிற்கிறது பெரும்பாலானோர் மனதிலும்.

Advertisement:
Related Tags : Income TaxTamilnaduJayalalitha death
Advertisement:
Advertisement:
[X] Close