[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்
  • BREAKING-NEWS கேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்
  • BREAKING-NEWS 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு
  • BREAKING-NEWS டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
  • BREAKING-NEWS வெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு

13 ஆம் ஆண்டில் தேமுதிக... மீண்டு(ம்) வருமா?

dmdk-13th-birthday

தேசிய முற்போக்கு திராவிட கழகம் தொடங்கப்பட்டு 12 ஆண்டுகள் நிறைவடைந்து, இன்று 13-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

திரைத்துறையில் தனக்கெனத் தனி முத்திரை பதித்து வந்த விஜயகாந்த், மதுரை மாநகரில் நடந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் எனும் தனது கட்சியின் பெயரை அறிவித்த நாள் 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி. அன்று தொடங்கிய அவரது நேரடி அரசியல் பயணம், பல ஏறுமுகங்களைச் சந்தித்தது.

2006 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட தேமுதிக சார்பாக வெற்றி பெற்றவர் விஜயகாந்த் மட்டுமே. பாமகவின் கோட்டை எனக் கருதப்பட்ட விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்று, முதல் முறையாக சட்டமன்றத்தில் காலடிவைத்தார் விஜயகாந்த். அந்த தேர்தலில் தேமுதிகவுக்குக் கிடைத்த வாக்குகள் சதவிகிதம் 8.4

பின்னர் நடைபெற்ற திருச்செந்தூர், வந்தவாசி, திருமங்கலம், பென்னாகரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட தேமுதிக, அனைத்திலும் தோல்வியைச் சந்தித்தாலும், கணிசமான வாக்குகளைப் பெற்றது. அதைத்தொடர்ந்து, 2009 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலிலும் தனித்தே களமிறங்கியது. அதில் 40 தொகுதிகளிலும் போட்டியிட்டு, அனைத்திலும் தோல்வியடைந்தாலும், அக்கட்சி 10 சதவிகித வாக்குகளைப் பெற்றது. இது பிற கட்சிகளின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் வாக்குவிகிதம் என்பதால், அனைவராலும் உற்று நோக்கப்பட்டது தேமுதிக.

ஆரம்பம் முதல் தனித்தே களம் கண்டு வந்த தேமுதிக, முதலில் கூட்டணி அமைத்தது 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில்தான். அதிமுகவுடன் கைகோர்த்து களமிறங்கிய அக்கட்சி, போட்டியிட்ட 41 தொகுதிகளில் 29 இடங்களில் வெற்றி பெற்றது. மொத்தம் பதிவான வாக்குகளில் 7.9 சதவிகித வாக்குகள் தேமுதிகவுக்குக் கிடைத்தன. கட்சியின் தலைவர் விஜயகாந்த், ரிஷிவந்தியம் தொகுதியில் பாமக வேட்பாளரைத் தோற்கடித்து, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்தார். அதன் மூலம் தமிழக அரசியலில் முக்கியமானதொரு கட்சியாக உருவெடுத்தது தேமுதிக.

பின்னர், அதிமுக தலைமையோடு ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, 100 நாள்களுக்குள்ளாகவே கூட்டணியிலிருந்து வெளியேறிய அக்கட்சி, 2011 ஆம் ஆண்டு அக்டோபரில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த நேரத்தில் தேமுதிகவிலிருந்து விலகிய 7 எம்எல்ஏக்கள், அதிமுக அரசுக்கு ஆதரவளித்தனர். இதனால் சட்டமன்றத்தில் அக்கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை சரிவைச் சந்தித்தது.

2013 ஆம் ஆண்டு நடந்த மாநிலங்களவையின் ஒரு இடத்துக்கான தேர்தலில், திமுகவை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிக தோல்வியடைந்தது. அதே ஆண்டு கட்சியின் முக்கிய நிர்வாகியான பண்ருட்டி ராமச்சந்திரன் உள்பட பலர் தேமுதிகவிலிருந்து வெளியேறினர். 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணியில் 14 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. அதோடு அதன் வாக்கு சதவிகிதமும் 6.1 குறைந்துபோனது.

இறுதியாக 2016 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியோடு இணைந்து களம் கண்ட தேமுதிகவும், அதன் கூட்டணி கட்சிகளும் ஒரு தொகுதிகளைக் கூட கைப்பற்ற முடியாமல் படுதோல்வியைச் சந்தித்தன. அதோடு தமிழத்தில் தேமுதிகவின் வாக்கு விகிதம் 2.4 சதவிகிதமாகவும் சரிந்தது. கடும் தோல்வியால் சட்டப்பேரவையில் தற்போது தேமுதிகவுக்கு பிரதிநிதித்துவம் இல்லை.

தொடக்கத்தில் அதிக வாக்கு வங்கியோடு ஏற்றத்தைச் சந்தித்து வந்த தேமுதிக, தற்போது சரிவில் நிற்கிறது. பீனிக்ஸ் பறவையாக மீண்டு(ம்) வருவோமென்ற நம்பிக்கையோடு, அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க காத்திருக்கிறது தேசிய முற்போக்கு திராவிட கழகம்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close