[X] Close
JUST IN
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் தொடர்பாக அக்.5ஆம் தேதி இறுதி விசாரணை : தேர்தல் ஆணையம்
 • BREAKING-NEWS கரூரில் செந்தில் பாலாஜியின் உறவினர்களுக்கு சொந்தமான 3 இடங்களில் வருமானவரி சோதனை நிறைவு
 • BREAKING-NEWS ஊழலுக்கு எதிரானவர்கள் எனக்கு உறவினர்கள்: கமல்ஹாசன்
 • BREAKING-NEWS இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி: ஆஸ்திரேலிய அணிக்கு 253 ரன்கள் இலக்கு
 • BREAKING-NEWS இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையால் பாதிப்பு
 • BREAKING-NEWS கீழடியில் 4ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து
 • BREAKING-NEWS ஊழலுக்கு எதிரானவர்கள் எனக்கு உறவினர்களாக தெரிகின்றனர்: கமல்ஹாசன்
 • BREAKING-NEWS ஆர்யாவை வென்றார்‘மெட்ராஸ்’கலையரசன்
 • BREAKING-NEWS தமிழக அரசின் செயல்பாடுகளில் பாஜகவின் தலையீடு உள்ளது: சுதாகர் ரெட்டி
 • BREAKING-NEWS டிடிவி தினகரன் பாவத்தின் மொத்த உருவம்: அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சி மூழ்கும் கப்பல் அல்ல ஒரு நீர்மூழ்கி கப்பல்: திருநாவுக்கரசர்
 • BREAKING-NEWS ஆழ்வார்பேட்டை இல்லத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் சந்திப்பு
 • BREAKING-NEWS ரயில் உணவுகளில் எடை, தேதி விவரம்
 • BREAKING-NEWS ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் 2 ஆவது சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வி
சிறப்புக் கட்டுரைகள் 15 Aug, 2017 12:27 PM

விடுதலைப் போரில் தமிழகத்தின் தியாகத் தழும்புகள்

sacrifices-of-the-tamils-in-the-war-of-independence

விடுதலை‌ப் போரில் தமிழகத்தின் பங்கும், தமிழர்களின் பங்கும் அளப்பரியது. ஆங்கிலேயர்கள் இந்த மண்ணில் காலூன்றிய தொடக்க காலத்திலேயே, தமிழகத்தில் இருந்துதான் அவர்களுக்கு எதிரான குரலும், போராட்டமும் உரத்து எழுந்துள்ளது.

வீரமும், காதலும் வேரோடிக் கிடந்த தமிழ் மண்ணில் விடுதலைப் போராட்ட உணர்வு துளிர்த்ததும், தழைத்ததும் வெகு இயல்பாகவே நடந்துவிட்ட ‌வரலாற்றுத் தேவைகள். நாயக்கர்கள் காலத்திற்குப் பின்னர் நவாப் மன்னர்கள் வைத்திருந்த வரி பாக்கியை வசூலிக்க வந்த கிழக்கிந்தியக் கம்பெனியாரை, பாளையக்காரர்களும், மறவர்களும் ‌எதிர்க்கத் ‌தொடங்கி‌னர். 1750களில் ஏற்பட்ட இந்தக் கிளர்ச்சியே, ஏறத்தாழ தமிழகத்தின் முதல் விடுதலைக் குரலாகப் பார்க்கப்படுகிறது. இந்தக் குரலை உரத்து எழுப்பி‌யவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மனும், பூ‌லித்‌‌தேவனும்‌ ஆவார்கள்.

1795 ஆம் ஆண்டு, கடுமையான போராட்டங்களுடன் யாருடைய ஆளுகைக்கும் உட்படாமல் தன்னிச்சையாக ஆட்சி நடத்தி வந்த ராமநாதபுரம் மன்னர் சேதுபதியை, ஆங்கிலேயர்கள் நயவஞ்சகமாக அரண்மனைக்குள் புகுந்து கைது செய்துள்ளனர். நெல்லூர் சிறையில் 14 ஆண்டுகள் வதைபட்டு சேதுபதி மன்னர் மரணமடைந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.

முத்து சேதுபதி மன்னருக்குப் பிறந்து, சிவகங்கை முத்துவடுகநாதரை மணந்த வேலுநாச்சியார் ஆங்கிலேயரின் சூழ்ச்சிக்கும், துரத்தலுக்கும் தப்‌பி, திண்டுக்கல், விருப்பாச்சி, அய்யம்பாளையம் கோட்டைகளில் மாறி, மாறி வசித்து வந்தார். இறுதியில் 1780 ஆம் ஆண்டு ஹைதர் அலி அளித்த பெரும்படையுடனும், மருதுபாண்டியர்களின் துணையுடனும் சிவகங்கையை மீட்கப்புறப்பட்டார். வேலுநாச்சியாருக்கு 50 வயதானபோது நடைபெற்ற அந்தப் போரில், கணவர் முத்துவடுக நாதரைக் கொன்ற ஜோசப் ஸ்மித், பான் ஜோர் என்ற இரு பரங்கியரையும் தோற்கடித்தார். வேலுநாச்சியாரின் படையில் இருந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குயிலி என்ற வீரமங்கை, உடலில் தீவைத்துக் கொண்டு ஆங்கிலேயரின் ஆயுதக்கிடங்கைத் தாக்கி அழித்து தானும் மாண்‌டார்.

ஆண் வாரிசு இல்லாத நாட்டை ஆளலாம் என்ற புதிய சட்டத்தை வகுத்து அதன் மூலம் சிவகங்கையைக் கைப்பற்ற முயன்றபோது, அதனை முறியடிக்கும் வகையில் முத்துவடுகர் - வேலுநாச்சியார் அரசின் தளபதிகளாக இருந்த மருது சகோதரர்கள் தாங்களே ஆட்சிப் பொறுப்பை ஏற்று இருபது ஆண்டுகள் வெற்றிகரமாக அந்தச் சீமையை ஆண்டும் வந்தனர். 1801 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களிடம் காட்டிக் கொடுக்கப்பட்டு தூக்கிலிடப்படும் வரை அவர்களது நல்லிணக்க ஆட்சி பீடுநடை போட்டிருக்கிறது.

தமிழகத்தில் ஆங்காங்கே ஒடுக்கப்பட்ட புரட்சியாளர்களில் எஞ்சிய பலரை, அடையாளம் தெரியாமல் வேலூர் கோட்டையில் பாதுகாப்பு வீரர்களாக பணியமர்த்தியது ப‌ரங்கி நிர்வாகம். காத்திருந்த புரட்சியாளர்கள் 1806 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் நாள், பெரும் கிளர்ச்சி ஒன்றுக்கு நாள் குறித்து அரங்கேற்றினர். 100-க்கும் மேற்பட்ட வெள்ளையர்களைக் கொன்று தீர்த்தனர். ஆனால், பெரும் ராணுவத்துடன் கோட்டைக்குள் புகுந்த ஆங்கிலேயப் படை, 300 தமிழ்க் கிளர்ச்சியாளர்களைக் கொன்றது. 1857 ஆம் ஆண்டு நாடுதழுவிய அளவில் நடைபெற்ற சிப்பாய்க் கலகத்திற்கு இதுவே முன்னோட்டமாக இருந்தது.

1900 ஆம் ஆண்டுகளில் தமிழக மண்ணின் சுதந்திரப் போராட்ட எழுச்சியில் புதுரத்தம் பாய்ந்தது. வ.உ.சி. என்று பின்னாளில் அழைக்கப்பட்ட வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை, ஆங்கிலேயர்களின் கப்பல் நிறுவனத்துக்கு போட்டியாக “சுதேசி நிறுவன நாவாய் சங்கம்” என்ற நிறுவனத்தை தொடங்கினார். மற்றொரு கப்பல், படகுகள் என நிறுவனத்தை வலிமைப்படுத்தினார். அத்துடன் அவர் நிறைவடைந்து விடவில்லை. தூத்துக்குடி கோரல் நூற்பாலைத் தொழிலாளர்களின் நலனுக்கான போராட்டங்களையும் முன்னெடுத்தார். வ.உ.சியின் நெருங்கிய நண்பர்களான பாரதியும், சுப்ரமணிய சிவாவும், அவரது போராட்டங்களுக்கு துணையாக இருந்தனர். 1908 ஆம் ஆண்டு தங்களது உத்தரவை மதிக்கவில்லை எனக் கூறி வ.உ.சியையும், சுப்பிரமணிய சிவாவையும் ஆங்கிலேய நிர்வாகம் கைது செய்தது.

வ.உ.சி க்கு முதலில் 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சுதேசித் தோழர்களின் இடைவிடாத போராட்டத்தால் அந்தத் தண்டனை 6 ஆண்டுகளாக‌க் குறைக்கப்பட்டது. ஆனால் வ.உ.சி விடுதலையான போது, அவரது வாழ்க்கையின் திசையே மாறிப்போயிருந்தது. கப்பல் நிறுவனம் காணாமல் போனது. சென்னை பெரம்பூரில் மண்ணெண்ணெய் கடை வைத்துப் பிழைக்குமளவுக்கு கடைக்கோடி நிலைக்கு அவரைத் தள்ளியது காலம். அவருடன் சிறைப்பட்ட சுப்பிரமணிய சிவாவோ கடுமையான நோய்க்கு ஆளாகி, நைந்து நலிந்த நிலையில் விடுதலையானார்.

திருப்பூரில் பஞ்சாலைத் தொழிலாளராக வேலைபார்த்து வந்த ஈரோட்டு இளைஞரான திருப்பூர் குமரன், 1932 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி விடுத்த அழைப்பை ஏற்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது ஆங்கிலேய காவல்துறை நடத்திய கொலைவெறித் தாக்குதலில் படுகாயமடைந்த 19 வயது இளைஞரான குமரன், மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரழந்தார்.

1930களில் சுதந்திரப் போராட்டக்களத்தில் இறங்கிய ராஜாஜி, ரவுலட் சட்டத்திற்கு எதிராகவும், ஒத்துழையாமை இயக்கத்திலும் ஈடுபட்டு சிறைவாசம் அனுபவித்தார்.

பகுத்தறிவு தந்தை என பின்னாளில் போற்றப்பட்ட பெரியார், த‌மது இளமைப் பருவத்தில் சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்டார். மகாத்மா காந்தியின் வேண்டுகோளை ஏற்று, மதுவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தமக்குச் சொந்தமான தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார். கதராடைகளைத் தோளில் சுமந்து விற்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜீவா, தமது இளமைப் பருவத்தில் காந்தியின் கொள்கைகளை ஏற்று, ஒத்துழையாமை இயக்கம், அந்நியத் துணிகளை நிராகரித்தல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டார். பகத்சிங்கின் நான் ஏன் நாத்திகனானேன் என்ற நூலை மொழி பெயர்த்ததற்காக கை, கால்களில் விலங்கிட்டு சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

விருதுபட்டி காமராசு என இளம்பருவத்தில் அறியப்பட்ட காமராஜர், தமது 16-வது வயது முதலே சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபாடு கொண்டவராக இருந்துள்ளார். வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்புச் சத்தியாகிரகத்தின் போது கைது செய்யப்பட்டு கொல்கத்தா அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் விருதுநகர் வெடிகுண்டு ‌வழக்கு, ஆகஸ்டு புரட்சி என பலமுறை கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்தார்.

இன்னும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், முத்துலெட்சுமி, வ.வெ.சு ஐயர், மாயாண்டி பாரதி, தியாகி விஸ்வநாத தாஸ் என முக‌ம் தெரிந்த, தெரியாத எத்தனையோ தியா‌க சீலர்கள், விடுதலைப் போர் எனும் தீர வரலாற்றின் தீராத பக்கங்களை எழுதியுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close