[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,039 கன அடியில் இருந்து 1,576 கன அடியாக குறைந்தது
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற புகாரில் டிடிவி தினகரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS கொளத்தூர் நகைகடை கொள்ளையர்களை ராஜஸ்தானில் பிடிக்க முயன்றபோது காவல் ஆய்வாளர் பெரியபாண்டி சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS ஈரான் நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் நில நடுக்கம்- ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு
  • BREAKING-NEWS தேனி: பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 13வது நாளாக தடை விதிப்பு
  • BREAKING-NEWS எதிர்காலத்தில் சாதிய ஆணவப் படுகொலைகளைத் தடுக்க இந்த தண்டனை உதவும்- பாலபாரதி
  • BREAKING-NEWS உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, பாண்டித்துரை, பிரசன்னகுமார் ஆகியோர் விடுதலை
  • BREAKING-NEWS உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு தூக்கு தண்டனை
  • BREAKING-NEWS உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் தீர்ப்பு- 6 பேருக்கு தூக்கு
  • BREAKING-NEWS முழு உடல்நலன், மன நிறைவுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என ரஜினிகாந்திற்கு வைகோ வாழ்த்து
  • BREAKING-NEWS ஒகி புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய கன்னியாகுமரிக்கு இன்று செல்கிறார் முதலமைச்சர்
  • BREAKING-NEWS நெடுந்தீவு மற்றும் கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 27 பேர் இலங்கை கடற்படையால் கைது
  • BREAKING-NEWS கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு
  • BREAKING-NEWS கடல்சீற்றம் தணிந்ததால் நாகையில் 53 கிராம மீனவர்கள் 15 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்
சிறப்புக் கட்டுரைகள் 18 Jun, 2017 11:23 PM

என்னாச்சு இந்திய அணிக்கு?

championship-trophy-special-story

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தியது. 

ஐசிசியின் சர்வதேச கிரிக்கெட் தரவரிசையில் முதல் 8 அணிகள் பங்கேற்ற சாம்பியன்ஸ் கோப்பை தொடர் இங்கிலாந்தில் கடந்த ஜூன் ஒன்றில் தொடங்கியது. நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களமிறங்கிய இந்திய அணியே, மீண்டும் சாம்பியன்ஸ் கோப்பையை வெல்லும் என்று பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்கள் கணித்தனர். ஆனால், கருத்துக்கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கி சாம்பியன்ஸ் கோப்பையை முதல் முறையாக கையில் ஏந்தியிருக்கிறார்கள் சர்ஃப்ராஸ் அகமது தலைமையிலான இளம் பாகிஸ்தான் அணியினர்.

இந்திய அணியின் சரிவு:

முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை 124 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, அதே இளம் அணியிடம் இன்று 180 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அந்தப் போட்டியை இந்திய அணி எப்படி எடுத்துக் கொண்டதோ தெரியாது. ஆனால், அந்த தோல்வியிலிருந்து தான் பாகிஸ்தான் பாடம் கற்றுக் கொண்டது என்பது நிதர்சனம். பேட்டிங்குக்கு சாதகமான ஓவல் ஆடுகளத்தில் 158 ரன்களில் இந்திய அணி சுருண்டது விராத் கோலிக்கு மட்டுமல்ல; சாமானிய இந்திய ரசிகனுக்கும் நிச்சயமாக பேரதிர்ச்சியே.

சாம்பியன்ஸ் கோப்பை தொடரைப் பொறுத்தவரை வழக்கம்போல இந்திய அணியின் பேட்டிங் செயல்பாடு மற்றெந்த அணிகளைவிடவும் சிறப்பாகவே செயல்பட்டது. தொடரில் அதிக ரன்கள் குவித்த முதல் 5 வீரர்கள் பட்டியலில் தவான், ரோகித் ஷர்மா மற்றும் விராத் கோலி ஆகிய 3 வீரர்கள் உள்ளனர்.
ஆனால், பந்துவீச்சைப் பொறுத்தவரை இந்திய பந்துவீச்சாளர்கள் தரப்பில் இருந்து குறிப்பிடும்படியான பங்களிப்பு இல்லை என்றே கூறாலம். குறிப்பாக இலங்கை அணிக்கெதிரான போட்டி மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியைக் குறிப்பிடலாம். இந்த இரு போட்டிகளிலுமே எதிரணியினர் எளிதாக 300 ரன்களுக்கு மேல் குவித்தனர். அதேநேரம் தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான போட்டியில் ரன் அவுட்டுகளின் உதவியுடன் 191 ரன்களில் அந்த அணியை இந்தியா சுருட்டியது. சாம்பியன்ஸ் கோப்பை தொடரைப் பொறுத்தவரை அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 7 விக்கெட்டுகளுடன் புவனேஷ்குமார் 6வது இடத்தில் இருக்கிறார். ஐந்து போட்டிகளில் 13 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி, தொடர் நாயகன் விருதை வென்றார். இந்திய அணியின் ஸ்டார் பவுலர்களான அஸ்வின், பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் விக்கெட் வேட்டை நடத்தாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.
 பீல்டிங்கைப் பொறுத்தவரை ஜடேஜா, யுவராஜ் சிங், ஹர்திக் பாண்ட்யா என உலகின் சிறந்த பீல்டர்களைக் கொண்ட இந்திய அணி, சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படவில்லை என்றே கூறலாம். இறுதிப் போட்டியில் பேட்டிங்கும் சொதப்ப இரண்டாம் இடத்துடன் இந்தியா திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியதாகிவிட்டது. இறுதிப் போட்டியில் இந்தியா கொடுத்த 25 உதிரி ரன்களும், ஃபகர் ஜமனுக்கு பும்ரா அளித்த வாய்ப்பும் கோப்பையை பறித்துவிட்டது.
 

பாகிஸ்தானின் எழுச்சி:

’சாம்பியன்ஸ் கோப்பை தொடர் இன்னும் முடியவில்லை. தொடங்கவே செய்திருக்கிறது. விழித்துக்கொள்ள நமக்கு போதிய நேரம் இருக்கிறது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நம்மால் கோப்பை வெல்ல முடியும்’.  இந்திய அணியுடனான லீக் போட்டி தோல்விக்குப் பின்னர் சக வீரர்களிடம் சர்ஃப்ராஸ் அகமது கூறியவை இவை. போட்டிக்குப் பிறகான செய்தியாளர் சந்திப்பில் இதனை சர்ஃப்ராஸ் தெரிவித்தார். இந்திய அணியுடனான போட்டியில் தோல்வியடைந்த பாகிஸ்தான், அதன்பின்னர் தொட்டதெல்லாம் பொன்னானது. உலகின் நம்பர் ஒன் அணியான தென்னாப்பிரிக்கா, இலங்கை அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. தொடரில் தோல்வியை சந்திக்காத இங்கிலாந்து அணியை அரையிறுதியில்  சந்தித்த பாகிஸ்தான், அந்த போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் அணியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. எப்படி இந்த மாற்றம் சாத்தியமானது?.

பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு கேப்டன் சர்ஃப்ராஸ் அகமதுவின் பங்கு அளப்பரியது. அதுவும் ஹபீஸ் மற்றும் சோயப் மாலிக் ஆகிய சீனியர் வீரர்களுடன், சதாப், ஃபகர் ஜமன் ஆகிய இளம் வீரர்கள் என ஒவ்வொரு வீரரையும் அவர் கையாண்டவிதம், அவரது கேப்டன்ஷிப் முதிர்ச்சியைக் காட்டியது. கடந்த 9 ஆண்டுகளாக சொந்த மண்ணில் சர்வதேச கிரிக்கெட் தொடரை நடத்த முடியாத ஒரு அணிக்கு, இந்த வெற்றி எந்த அளவுக்கு முக்கியமானது என்பதை கேப்டன் சர்ஃப்ராஸ் அறியாமல் இல்லை. இலங்கை அணிக்கெதிரான லீக் போட்டியில் சர்ஃப்ராஸ் குவித்த 61 ரன்களே, பாகிஸ்தானை அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற வைத்தது. பீல்டிங் வியூகம் வகுப்பதிலும் வல்லவரான அவர், பந்துவீச்சாளர்களைத் தேர்வு செய்வதிலும் சிறப்பாகவே செயல்பட்டார். இறுதிப் போட்டியில் 18 வயது சதாப் கானின் வார்த்தையில் இருந்த உறுதியை ஏற்று யுவராஜ் சிங்கின் விக்கெட்டுக்காக இன்னிங்ஸில் ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய டிஆர்எஸ் முறையைப் பயன்படுத்தியது, சக வீரர்கள் மீது சர்ஃப்ராஸ் வைத்திருந்த நம்பிக்கையைக் காட்டியது. கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் பெரிய அளவிலான எந்த தொடரிலும் வெல்லாத பாகிஸ்தான் அணி, சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் உலகின் 8 ஆம் நிலை அணியாகப் பங்கேற்றது. முடிவில் சாம்பியனாக நாடு திரும்புகிறது. சர்ஃப்ராஸ் மட்டுமல்ல பாகிஸ்தான் இளம் வீரர்களின் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய பங்களிப்பும் அந்த அணிக்கு சாம்பியன்ஸ் கோப்பையைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது. இறுதிப் போட்டியில் ஃபகர் ஜமனின் அசத்தல் சதமும், முகமது ஆமீரின் கலக்கல் பந்துவீச்சும் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை தட்டிப்பறித்தது.

’கிரிக்கெட் போட்டியைப் பொறுத்தவரை கடந்த கால வரலாறு முக்கியமில்லை. போட்டி நடக்கும் தினத்தற்கு எந்த அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறதோ, அந்த அணியே இறுதியில் வெற்றியை ருசிக்கும்’.  இறுதிப் போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி கூறிய வார்த்தைகள் இவை. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close