[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து மே 28ஆம் தேதி தேமுதிக சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் - விஜயகாந்த்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் இணையதள சேவையை சீரமைப்பது குறித்து நாளைக்குள் ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை
  • BREAKING-NEWS நெல்லையில் முடக்கப்பட்டிருந்த இணையதள சேவை சீரானது
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உத்தரவு - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்
  • BREAKING-NEWS சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
  • BREAKING-NEWS நெல்லை , கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம் ரத்து - தமிழக அரசு
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி பெற்றார்

நடக்கப் பிடிக்காது பறக்கப் பிடிக்கும்...

a-person-who-affect-transverse-myelitis-diseases-started-travel-from-kanyakumari-to-kashmir

“அப்போது எனக்கு 12வயது இருக்கும், நன்றாக துறுதுறுவென விளையாடிக்கொண்டிருந்த பையன் நான். ஒருநாள் திடீரென கால்களில் உணர்ச்சியில்லாமல் போனது. பயந்துபோனேன்…. என்னைவிட என் பெற்றோர் மிகவும் பயந்துபோனார்கள்…. கால்களில் உணர்ச்சியில்லாமல் போகும் வேதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. சில நிமிடத்திற்கு முன்பு வரை நன்றாக அசைந்துக்கொண்டிருந்த என் கால்கள், அப்போது அசைக்க முடியாமல் போனது….. கால்களிலிருந்து பரவ ஆரம்பித்த இந்த அந்த உணர்ச்சியற்ற நிலை கொஞ்சம் கொஞ்சமாக மேல் நோக்கி பரவ ஆரம்பித்தது. முட்டி, இடுப்பு பகுதி என்று நெஞ்சின் கீழ் வரை சென்றது…. அதற்கும் மேல் அந்த நோயால் போக முடியவில்லை..……. தன்னம்பிக்கையில்லாத நோய்…..  ” என வெடித்துச் சிரிக்கிறார் லலீத்குமார். 
கே2கே பயணத்தை அவர் இன்று தொடங்கியுள்ளார். அதாவது கன்னியாகுமரி டூ காஷ்மீர் சாகச பயணத்தை அவர் தொடங்கியிருக்கிறார். சுமார் நான்காயிரம் கிலோ மீட்டர் தூர பயணம். வேறு மாநிலம், வேறு மொழி, வேறு கலாச்சாரம், வேறு தட்பவெட்பம் என அனைத்தையும் கடந்து செல்ல வேண்டும்… பயமா இல்லையா…… என்ற கேள்விக்கு. இப்படி பல வேறுபாடுகளை கடந்து செல்ல வேண்டியதாக இருந்தாலும் அன்பு என்ற ஒற்றுமை இருக்கும் வரை எதற்கு நாம் பயப்பட வேண்டும் என்கிறார் லலீத்குமார்.  

ஆசையாக பெற்று வளர்த்த மகனின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என அவரின் தந்தை ஆர்.நடராஜனும், தாய் என்.கிருஷ்ணவேணியும் பல நாட்கள் ஒருவருக்கொருவர் தெரியாமல் தனிமையில் அழுததை லலீத்குமார் கவனிக்காமல் இல்லை. மருத்துவ ரீதியாக பல லட்சங்கள் செலவு செய்தும், லலீத்குமாரின் உடலில் எந்த முன்னேற்றமில்லாததால் அந்த குடும்பமே இருளில் தான் முழ்கிப்போனது. பிறந்ததிலிருந்து ஏதோ ஒரு காரணத்தால் நகரமுடியாமல் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவர்களுக்கே மற்ற சிறுவர்களைப் போல ஓடி ஆட வேண்டும் என்ற ஆசை ஏற்படுவது இயல்பு என்றால், ஓடி ஆடிக்கொண்டிருந்து, திடீரென ஒருநாள் முடங்கிப்போவதை எந்த சிறுவனாலும் ஏற்றுக்கொள்ள முடியாது தான். காலம் செல்ல செல்ல தான் Transverse Myelitis என்ற இந்த நோயின் தீவிரம் குறித்து லலீத்குமார் புரிந்துக்கொள்ள ஆரம்பித்தார். இதனை குணப்படுத்த முடியாது என்று உணர்ந்த அவர், இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது என்று மற்றவர்களுக்கும் எடுத்துரைக்க ஆரம்பித்தார். குறிப்பாக சாலை விபத்துகளில் சிக்கியவர்கள் பலரும் இந்நிலைக்கு ஆளாவதை தெரிந்து கொண்ட அவர், சாலை போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்கும்படி பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார். தற்போது ஹெல்மெட் அணிவது, விதிகளை கடைப்பிடிப்பது உள்ளிட்டவைகளை தனது லவ் அண்ட் அக்ஸ்சப்டென்ஸ் அமைப்பு மூலமாக பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த அமைப்பில் தன்னைப் போல பாதிக்கப்பட்டவர்கள் பலரையும் இணைத்து அவர் மாற்றுத்திறனாளிகளிடையே பல மாற்றத்தையும் ஏற்படுத்தி வருகிறார். 

திருப்பூரை சொந்த ஊராக கொண்ட லலீத்குமார், தனக்கு வந்த பாதிப்பால் தனது பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்தினார். தனிமையால் தவித்த அவர், தனக்குள் எரிந்த தீயை சரியாக பயன்படுத்திக்கொண்டு அதனையே ஒரு எரிபொருளாக மாற்றி வாழ்க்கையே உத்வேகமாக செலுத்த ஆரம்பித்தார். இதன் விளைவாக படுக்கையில் பல வருடங்கள் விட்டத்தை பார்த்துக்கொண்டு கழித்த லலீத்குமார், தற்போது லலீத்குமார் Bachelor in Social Work (BSW),  B.Sc. in Psychology,  MBA,  M. Phil என்ற சாதனை மனிதனாக மாறியுள்ளார். தனக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பல ஆண்டுகள் கழித்து தெரியவந்தது போல மற்றவர்களும் இருக்க கூடாது என்றும் டிசபெலிட்டி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தோடு கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை அவர் இன்று சாகச பயணத்தை தொடங்கியிருக்கிறார்.       
பல ஆண்களின் கனவான இந்த இருசக்கர வாகனத்தில் தான் லலீத்குமார் தனது பயணத்தை தொடங்கியிருக்கிறார். அவருக்காக ராயல் என்ஃபீல்டு நிறுவனமே புல்லட்டை மாற்றி அமைத்து தந்திருக்கிறது. ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் வேணுகோபால் மற்றும் அவரது மகன் விஷால் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் பயணத்தை தொடங்கியுள்ள லலீத்குமார், கன்னியாகுமரி, சேலம், சித்ரதுர்கா, புனே, அஹமதாபாத், அஜ்மீர், டெல்லி, அமர்தசரஸ், உதம்பூர், கார்கில், லே வழியாக ஜூன் 30ம் தேதி லடாக்கை சென்று அடைவார். லலீத்குமாருடன் அவருக்கு உதவியாக நாராயணன் என்பவரும் இந்த பயணத்தில் இணைந்துள்ளார். ஒரே வார்த்தையில் இந்த பயணத்தை பத்தி சொல்லுங்கனு லலீத்குமாரை கேட்ட போது “ஊனம் என்பது ஒரு நிலைபாடு, குறைபாடு அல்ல…… இதை நிரூபிக்க தான் இந்த பயணம்….” என்றார். 


லலீத்குமார் ஆரம்பத்தில் சொன்னது சரிதான்…….பறப்பதற்கு கால்கள் எதற்கு……… 
(லலீத்குமாருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு ஒரு சகோதரனும் உள்ளனர்)

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close