[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து
  • BREAKING-NEWS ஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

தமிழகத்தில் பணபலத்தை கட்டுப்படுத்துவது பெரிய சவால்: புதிய தலைமுறைக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி பேட்டி

exclusive-interview-with-dr-nasim-zaidi-chief-election-commissioner-of-india

தமிழகம், புதுச்சேரியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதைத் தடுப்பதே தேர்தல் ஆணையத்தின் முன்னுள்ள மிகப் பெரிய சவால் என தலைமைத் தேர்தல் ஆணையர் நசிம் ஜைதி தெரிவித்துள்ளார். டெல்லியில் புதிய தலைமுறை செய்தியாளர் க‌ணபதிக்கு அவர் அளித்துள்ள பிரத்யேக நேர்காணலை பார்க்கலாம்.

கேள்வி: தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் தமிழகம் தொடர்பான பிரச்னைகள் என்னென்ன?

பதில்: கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு ஆகியவற்றிற்கு ஒரே நேரத்தில் தேர்தல் அறிவித்துள்ளோம். இந்த மூன்று சட்டப்பேரவைகளின் காலம் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் முடிவுக்கு வருகிறது. பொதுவாக இதுபோன்ற சூழ்நிலைகளில் தேர்தல்களை ஒரே சமயத்தில் நடத்துகிறோம். எனவே இந்த மாநிலங்களும், யூனியன் பிரதேசமும் ஒரே கட்டமாகத் தேர்தலை சந்திக்கின்றன. 3 மாநிலங்களின் எல்லைகள் பொதுவாக உள்ளன என்பது மற்றொரு அம்சம். புதுச்சேரி தமிழகத்தின் ஊடே பரவிக் கிடக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். மூன்றாவதாக, இந்த மாநிலங்கள் பொதுவாக வன்முறை இல்லாத மாநிலங்களாக உள்ளன. எனவே பாதுகாப்புப் படைகளுக்கான தேவை போன்றவை குறைவாக உள்ளது. எனவே இந்த மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.

கேள்வி: தேர்தலில் பண பலம் தவறாக பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. பல கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக கூறப்படுகிறது. அதுபோன்ற முறைகேடுகளை நீங்கள் எவ்வாறு தடுக்கப் போகிறீர்கள்?

பதில்: தேர்தல் ஆணையம் முன்னுள்ள சவால்களை நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். குறிப்பாக, தமிழகத்தில் மது, பணம், பரிசுப் பொருட்கள் என பல வழிகளில், பணம் முறைகேடாக பயன்படுத்தப்படுவதாக ஏராளமான தகவல்கள் வந்துள்ளன. தமிழகம், புதுச்சேரியில் பெருமளவும், கேரளாவில் ஓரளவும் பண பலத்தைக் கட்டுப்படுத்துவதே எங்கள் முன்னுள்ள மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக இருக்கிறது. அதிக அளவில் வாக்குகள் பதிவாகும் மாநிலங்களாக அந்த 3 மாநிலங்களும் அறியப்படுகின்றன. தேர்தலில் வாக்காளர்களை பங்கேற்கச் செய்வது எங்களுக்கு பெரிய சவாலாக இல்லாவிட்டாலும், வாக்காளர் பங்களிப்பை அதிகரித்து வாக்குப்பதிவு சதவிகிதத்தை இன்னும் அதிகபட்ச அளவுக்கு உயர்த்துவதே எங்கள் இலக்காக இருக்கும். தேர்தலில் பண பலத்தைக் கட்டுப்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். அதற்காக, எங்களது செயல் திட்டத்தில் பிரத்யேக வியூகங்கள் இருக்கின்றன.

கேள்வி: தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் மாநில நிர்வாகம் தேர்தல் ஆணையத்தின் கீழ் வரும். அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் இடமாற்றம் செய்யும் பணி எப்போது மேற்கொள்ளப்படும்?

பதில்: நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பாகவே ஒரு பகுதி இடமாற்றங்கள் செய்யப்பட்டுவிட்டன. 4 ஆண்டுகளில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட பொறுப்பில், தேர்தலுடன் தொடர்புடைய அலுவலர்கள் பணியில் இருந்தால் அவர்கள் இடமாற்றம் செய்யப்படவேண்டும் என்று இந்த மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். இந்த அளவு பணியாற்றி முடித்துள்ள அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டதாக எங்கள் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் ஆய்வு கூட்டங்களில் தெரிவித்துள்ளனர். ஆய்வாளர் பதவிக்கு மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் மாவட்டத்தை விட்டு இடமாற்றம் செய்யப்படவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளோம். இதுவும் செய்யப்பட்டுவிட்டது. இதே போல் குறிப்பிட்ட காலம் பணியாற்றிய காவல் உதவி ஆய்வாளர்களும் ஒரு சட்டப்பேரவை தொகுதியிலிருந்து வேறு தொகுதிக்கு மாற்றவேண்டும் என உத்தரவிட்டுள்ளோம். இது நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள். தற்போது நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், தேர்தல் பணியாற்றும் அதிகாரிகள் குறித்து மேலும் ஆய்வு நடத்துவோம். தேர்தலில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும் முழுமையாக சார்பற்றவர்களாக இருக்கவேண்டும் என்பதை உறுதி செய்வதற்காகத்தான் இதுபோன்ற ஆய்வுகளை மேற்கொள்கிறோம். அந்த அதிகாரிகள் யாருக்கும் ஆதரவாக செயல்படக்கூடாது. எனவே தேர்தல் ஆணையத்திற்கு தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் பல்வேறு தரப்பிலிருந்து சில தகவல்கள் பெறப்பட்டுள்ளன. இந்த தகவல்களை ஆய்வு செய்து வருகிறோம். எங்கு அவசியம் என்று தோன்றுகிறதோ அங்கே சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தேர்தல் அல்லாத பணிகளுக்கு மாற்றுவோம்.

கேள்வி: பணப்பலத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து தெரிவித்துள்ளீர்கள். சில அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்யும் போது அவர்கள் கோடிக்கணக்கான பணம் செலவு செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வருமான வரிப் பிரிவும், தேர்தல் பார்வையாளர்களும் தேர்தல் செலவை எப்படி கண்காணிப்பாளர்கள்?

பதில்: உண்மையில் இது தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்பிற்குள் வராது. ஏனென்றால் ஒரு அரசியல் கட்சியின் வேட்பாளர் அந்த கட்சியின் தலைமையிடம் என்ன தெரிவித்தார் என்பதை தெரிந்துகொள்ள தேர்தல் ஆணையத்திற்கு வழி இல்லை. ஆனால் குறிப்பிட்ட புகார் வரும்போது, அதை வருமானவரித்துறைக்கு அனுப்பி சட்டப்படியான நடவடிக்கைக்கு பரிந்துரைப்போம்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close