[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாட்டின் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம்
  • BREAKING-NEWS கொடைக்கானலில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சோதனை முறையில் பொது இயக்கப்பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் - போக்குவரத்துத்துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டார்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

உலகம் எங்களுக்கும் சொந்தம்

world-belongs-to-us-also

உலகம் மிகப்பெரியது. அழகான வானம்.. வெயிலின் பட்டப்பகல் ... இரவின் குளிர்ந்த காற்று. பட்டாம்பூச்சிகள், பறவைகள் என இயற்கையின் ஒவ்வொரு துளியையும் அனுபவிக்கிறது மனித இனம். மனித இனம் என்று சொல்லலாமா? இல்லை ஆண் இனம் என்று மட்டும் வரையறுக்கலாமா?

வீட்டுக்கு வெளியே உள்ள உலகம் பெண்களுக்கும் சொந்தமானதுதானா?

அண்மையில் நடக்கும் சம்பவங்களை வைத்து மட்டும் இந்த கேள்வி எழவில்லை. காலம் காலமாக பெண்களுக்கான உலகம் ஆண்களால் வழிநடத்தப்பட்டு, ஆண்களால் பாதுகாக்கப்பட்டு, ஆண்களால் அளிக்கப்பட்டவற்றோடுதான் கழிந்துகொண்டிருக்கிறது. ஆண் இனத்தின் மற்றொரு நுகர்பொருள் மட்டுமா பெண்கள்?

அரியலூர் அருகே காதலனை நம்பிச்சென்ற நந்தினி, போரூர் அருகே வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த ஹாசினி, எண்ணூர் அருகே சுனாமிகுடியிருப்பில் விளையாடிக்கொண்டிருந்த ரித்திகா இவர்கள் எல்லாம் கொல்லப்பட்ட பிறகே இவர்களுக்கு நடந்த கொடுமைகள் வெளியே தெரிந்திருக்கின்றன.

இவை ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான கொடூரமான கொலைகளாக நடந்து முடிந்திருக்கின்றன. பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டு, கொல்லப்பட்ட இவர்கள் ஒருபுறம் என்றால், பிரபலமான நடிகைக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு மறுபுறம். அதிலும் கொடூரம் அந்த நடிகையை துன்புறுத்தியவர்கள், தாங்கள் எடுத்த வீடியோவை எப்போது வெளியிடுவார்கள் என்ற கேள்வி பரவுவதுதான்.

வக்கிரமும், கொடூரமும், வன்மும், மறைந்து நிற்கும் இந்த மனங்களை எல்லாம் எதில் சேர்ப்பது? மனித உருவில் அலையும் இவர்களின் கொடூர செயல்களுக்கு காரணம் யார்? சமூகமா? ஆண்களுக்கான எல்லையில்லா சுதந்திரமா? இத்தனை நூற்றாண்டுகள் கடந்தும் பெண்களுக்கு வசப்படாத சுதந்திரமா?

இதற்கும் முன்பு ஒருசில ஆண்டுகளை நினைவுகூர்ந்தால் பாதிக்கப்பட்ட, கொல்லப்பட்ட பெண்களின் பட்டியலை சொல்ல இந்த பக்கங்கள் நிச்சயம் போதாது.

2015 ஆம் ஆண்டில் மட்டும்,இந்தியாவில் 34 ஆயிரம் பாலியல் வன்கொடுமைகள் நடந்திருக்கின்றன என்கிறது தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கை. இதில் தலைநகர் டெல்லியில் மட்டும் 2 ஆயிரம் பாலியல் வன்கொடுமைகள். எத்தனை நிர்பயாக்கள் மரித்தாலும் இந்த கொடூரங்களுக்கு மட்டும் ஏன் முடிவில்லாமல் போய்கொண்டே இருக்கிறது?

இந்த உடை போடாதே, அழகுபடுத்திக்கொள்ளாதே, வீட்டை விட்டு வெளியே வராதே, ஆண்களோடு விளையாடாதே, ஆண்களுடன் பேசாதே, காதலிக்காதே, காதல் மணம் புரியாதே இன்னும் எத்தனை கட்டுப்பாடுகளை இந்த சமூகம் பெண்களுக்கு விதித்துக்கொண்டே இருக்கும்?

சோர்ந்திருக்கும்போது ஆறுதல் தரவேண்டும், பசித்தபோது உணவிடவேண்டும், பாலியல் தேவைக்கும் பெண்வேண்டும், விரும்பும் வகையில் பேசவேண்டும் எனில் உங்களுக்கு ஏற்றபடி ஆடும் உயிரில்லா பொம்மைகளா பெண்கள்? பெண்களும் உயிரும், மனதும் சொந்த விருப்பு வெறுப்பும் உள்ள மனித பிறவிகள்தானே? இன்னும் எத்தனை காலம் எங்களின் அடிப்படை உரிமைகளுக்காக கூட போராடிக்கொண்டே இருக்க வேண்டும்?

பெண்களை தோழியாய், அன்புக்குரியவராய், மரியாதைக்குரியவராய் நடத்தும் ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு என் வணக்கங்கள்.. ஆனால், ஆண்களே எங்களை தெய்வமாக்கி கோவில்களில் அமர வைக்க வேண்டாம், சக மனிதராய் மதியுங்கள்..

இந்த உலகத்தை பெண் குழந்தைகளுக்கும், ஆண் குழந்தைகளுக்கும் மகிழ்ச்சிகரமான குழந்தைப்பருவத்தை தரக்கூடியதாக மாற்றுங்கள்.. வேறு எந்த சாதனைகளும் எங்களுக்கு முக்கியமில்லை. வாழ்தலையே தினம்தோறும் சாதனையாக்கும் நிலைக்கு தள்ளிவிடாதீர்கள்..

இந்த உலகம் எங்களுக்கும் சொந்தம்தான் என்பதை மறவாதீர்கள்

வேதனையுடன் ஒரு தோழியின் வேண்டுகோள்.

-பாமா

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close