[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

விமர்சனங்களை புறந்தள்ளி முன்னேறிய ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வு...

jayalalithaa-political-life-history

அரசியல் வாழ்வில் தனக்கென ஒரு தனிப் பாதையை அமைத்துக்கொண்டு சாதனைகள் பல புரிந்தவர் ஜெயலலிதா. எத்தனையோ விமர்சனங்கள் வந்த போதும் அதனை கண்டுகொள்ளாமல், முழு உத்வேகத்துடன் செயல்பட்ட அவரது அரசியல் வாழ்வை தெரிந்து கொள்வோம்...

ஒரு நடிகையாக தன் வாழ்க்கையை தொடங்கிய ஜெயலலிதா, 1982-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4-ஆம் தேதி, அதிமுகவில் இணைந்தார். அப்போது, அறிமுகப்படுத்தப்பட்ட சத்துணவுத் திட்டம் குறித்து பல விமர்சனங்கள் முன்வைக்கப்படன. அந்த திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க எம்ஜிஆர் தேர்ந்தெடுத்தது ஜெயலலிதாவைத்தான். சத்துணவு திட்டத்திற்கான உயர்மட்டக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார் ஜெயலலிதா.

தமிழகம் முழுவதும் ஜெயலலிதா கலந்துகொண்ட கூட்டங்களில் மக்கள் வெள்ளமென திரண்டனர். சத்துணவுத் திட்டத்தில் ஜெயலலிதா காட்டிய ஈடுபாட்டாலும், அவருக்கு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பாலும் மகிழ்ச்சியடைந்த எம்ஜிஆ‌ர், 1983-ம் ஆண்டு ஜனவரி 28-ஆம் தேதி கடலூரில் நடைபெற்ற மாநாட்டில் அவரை கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக அறிவித்தார். அது கட்சியில் இருந்த சில தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதுடன், எதிர்க்கட்சிகள் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கவும் வாய்ப்பாக அமைந்தது. அதையெல்லாம் கண்டுகொள்ளாத ஜெயலலிதா, கூடுதல் உத்வேகத்துடன் செயலாற்றினார். அப்போதுதான் மக்களைப் பார்த்து கேள்விகள் எழுப்பி அவர்களிடமிருந்து பதிலை பெறுவது என்ற அணுகுமுறையை முதல் முறையாக பயன்படுத்தினார் ஜெயலலிதா.அப்போது நடைபெற்ற திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற பெரும்பங்காற்றினார் ஜெயலலிதா.

கட்சிக்குள் அசுர வளர்ச்சியடைந்த ஜெயலலிதாவின் அரசியல் பயணத்தில் அடுத்த மைல்கல், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டது. 1984-ஆம் ஆண்டு ஏப்ரல் 20-ஆம் தேதி அவர் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். பேரறிஞர் அண்ணாவிற்கு ஒதுக்கப்பட்டிருந்த 185-ஆம் எண் இருக்கை அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆங்கிலத்தில் அவருக்கிருந்த புலமையால் கூட்டணி குறித்து இந்திராகாந்தியுடன் பேசுவதற்கு ஜெயலலிதாவை பயன்படுத்திக்கொண்டார் எம்ஜிஆர்.

ஜெயலலிதாவுக்கு இந்திரா காந்தி ஒதுக்கியதோ 10 நிமிடங்கள்தான். ஆனால் அந்த சந்திப்பு அரை மணி நேரம் வரை நீடித்தது, கூட்டணியும் உறுதியானது. ஆனால் கட்சிக்கு சமீபத்தில் வந்த ஒருவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது கட்சியில் இருந்த சில தலைவர்களுக்கு பிடிக்கவில்லை. அதிருப்தியாளர்களை திருப்திபடுத்தும் வகையில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டிருந்த கொள்கை பரப்புச் செயலாளர் பதவி, மற்றும் அதிமுக நாடாளுமன்றக் குழு துணைத் தலைவர் பதவியை பறித்தார் எம்ஜிஆர்.

இதைத் தொடர்ந்து எம்ஜிஆர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டார். இந்த சந்தர்ப்பத்தை முழுமையாக பயன்படுத்திக்கொண்ட அதிமுக முன்னணித் தலைவர்கள் பலர் ஜெயலலிதாவுக்கு எதிராகத் திரும்பி, அவரை தனிமைப்படுத்தினர். 1984 அக்டோபரில் இந்திரா காந்தி படுகொலை நடைபெற, டிசம்பர் மாதத்தில் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது.

எம்ஜிஆர் அமெரிக்காவில் மருத்துவமனையில் இருக்க, அதிமுகவோ நடிகர் பாக்கியராஜை கொண்டு தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டது. அப்போது ராஜிவ் காந்தியின் தலையீட்டால், ஜெயலலிதா பிரசாரம் மேற்கொண்டார். எளிமையாக கட்சிக்கொடி, கறைகொண்ட வெண்ணிற புடவையுடன் அவர் கலந்துகொண்ட அத்தனை கூட்டங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட பரப்புரை கூட்டங்களில் கலந்துகொண்ட ஜெயலலிதா எம்ஜிஆர் நலமுடன் திரும்ப வருவார் என உறுதியுடன் சொன்னபோது மக்கள் ஆர்ப்பரித்தனர். அந்தத் தேர்தலில் இந்திரா காந்தி படுகொலை மற்றும் எம்ஜிஆர் உடல்நலக் குறைவு என்ற இரண்டு காரணங்களால் ஏற்பட்ட அனுதாபத்தால், திமுகவின் வலுவான கூட்டணியை அதிமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றி கொண்டது. எம்ஜிஆர் மருத்துவமனையில் இருந்த நிலையில் ஜெயலலிதாவின் பரப்புரை அதிமுகவின் வெற்றிக்கு அளப்பரிய பங்காற்றியது என்றால் அது மிகையில்லை.

எம்ஜிஆர் சென்னை திரும்பிய பின்னரும் கட்சியில் செல்வாக்கு இல்லாமலே இருந்தார் ஜெயலலிதா. 1985-ஆம் ஆண்டு எம்ஜிஆர் ஒருமுறை ஜப்பானில் சிகிச்சை பெற்று திரும்பும்போது அவரை டெல்லியில் சந்தித்தார் ஜெயலலிதா. அதன் பின்னர் செப்டம்பர் 5-ஆம் தேதி கொள்கை பரப்புச் செயலாளர் பதவி அவருக்கு மீண்டும் வழங்கப்பட்டது. என்றாலும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் அவர் பரப்புரை மேற்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. அந்தத் தேர்தலில் எம்ஜிஆரும் பரப்புரை மேற்கொள்ள முடியாத நிலையில் அதிமுக பெரும் தோல்வியைச் சந்தித்தது. இதுவே ஜெயலலிதா பரப்புரை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை எம்ஜிஆருக்கு உணர்த்தியது என்று சொல்லலாம்.

மக்கள் மத்தியில் தனக்கு செல்வாக்கு சரிந்து வருவதாக கருதிய எம்ஜிஆர் தனது ரசிகர் மன்றங்களை ஒன்றிணைத்து ஒரு மாநாடு நடத்த திட்டமிட்டார். அதற்கான ஏற்பாடுகளை செய்யும் பொறுப்பை ஜெயலலிதாவிடமே ஒப்படைத்தார் எம்ஜிஆர். அதன்படி மதுரையில் 1986-ஆம் ஆண்டு ஜூலை 12-ஆம் தேதி நடைபெற்ற ரசிகர் மன்ற மாநாட்டில் எம்ஜிஆருக்கு ஆறடி உயரமுள்ள செங்கோலை பரிசாக வழங்கினார் ஜெயலலிதா. இதுவே ஜெயலலிதாவை தமது அரசியல் வாரிசாக எம்ஜிஆர் சுட்டிக்காட்டிய சம்பவம் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

1987-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி எம்ஜிஆர் உயிரிழக்க அவரது உடலைக் காண சென்ற ஜெயலலிதா புறக்கணிக்கப்பட்டார். ஆனால் அவர் எம்ஜிஆர் உடலின் அருகே உறுதியுடன் தொடர்ந்து இரண்டு நாட்கள் நின்றுகொண்டே இருந்தார். முதல் நாள் 13 மணி நேரமும் இரண்டாம் நாள் 8 மணி நேரமும் அவர் நின்றுகொண்டே இருந்தார். அப்போது அவரை விரட்டும் நோக்கத்துடன் சில பெண்கள் அவரை கிள்ளியதாகவும், காலை மிதித்ததாகவும் அதை பொருட்படுத்தாமல் அவர் நின்ற இடத்திலேயே நின்றதாகவும் அப்போது செய்திகள் வெளியாகின. ஆனால் எம்ஜிஆரின் உடல் கொண்டு செல்லப்பட்ட வண்டியில் ஏற அவர் முயன்றபோது வண்டியிலிருந்து தள்ளிவிடப்பட்டார். அந்த சம்பவத்தைத் தொடர்ந்து அவருக்கு பல அதிமுக நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்தனர். அவருக்கு கீழ் அணி திரண்டனர். மக்கள் ஆதரவுடன் தேர்தலை சந்திக்க தயாரானார் ஜெயலலிதா.

இதற்கிடையில் 97 அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவுடன் 1988-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7-ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்றார் எம்ஜிஆரின் மனைவி ஜானகி. ஜனவரி 28-ல் ஜானகியின் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நடைபெற்ற கூட்டம் வன்முறையில் முடிந்தது. இதையடுத்து ஆட்சி கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் 1989-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலை ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டு எதிரெதிர் அணிகள் எதிர்கொண்டன. அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. தேர்தல் முடிவுகளில் ஜானகி அணி படுதோல்வி அடைந்தது. எம்ஜிஆரின் ஆண்டிப்பட்டி தொகுதியிலேயே ஜானகி தோல்வியைத் தழுவினார். ஜெயலலிதாவின் அணி 27 இடங்களில் வெற்றி பெற்று தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றார் ஜெயலலிதா.

இதன்பின்னர் ஜெயலலிதாவை சந்தித்த ஜானகி தமது அணியை ஜெயலலிதா அணியுடன் இணைத்ததுடன் அரசியலிலிருந்து விலகுவதாகவும் அறிவித்தார். இதன்பின்னர் ஜெயலலிதா கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் இரட்டை இலை சின்னமும் அதிமுகவிற்கு திரும்ப அளிக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் வளர்ச்சியை ஒரு அபாயமாக கருதிய கருணாநிதி அரசு அவர்மீது முதல் வழக்கை தொடர்ந்தது. கட்சித் தொண்டர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட விண்ணப்ப கட்டணம் திருப்பியளிக்கப்படவில்லை என ஜெயலலிதா மீது வழக்குத் தொடரப்பட்டது. காவல்துறையினரின் தொடர் தொல்லையால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக நாளிதழ்களில் செய்தி வெளியானது. ஆனால் அவர் எதிர்க் கட்சித் தலைவராக நீடிப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

பின்னர் 1989-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25-ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டம் பெரும் கலவரத்தில் முடிந்தது. முதலமைச்சராக இருந்த கருணாநிதியின் மூக்கு கண்ணாடி உடைக்கப்பட்டதாகவும் அவையிலிருந்து வெளியேற முயன்ற ஜெயலலிதாவின் புடவையை பிடித்து திமுக உறுப்பினர் ஒருவர் இழுத்ததாகவும் அப்போது செய்திகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தின. அவையில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் ஏற்படும்வரை அவைக்கு வரப்போவதில்லை என ஜெயலலிதா அறிவித்தார். அவைக்கு முதலமைச்சராகத்தான் திரும்ப வருவேன் என அவர் சபதமேற்கொண்டதாக கூறுவோரும் உண்டு.

பின்னர் 1990-ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு அளித்ததாக கருணாநிதி அரசு கலைக்கப்பட்டது. 1991-ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை சந்தித்தது திமுக. அப்போது நடந்த தேர்தலில் அதிமுக மிகப் பெரிய வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றார் ஜெயலலிதா. அப்போது முதல் இறக்கும் வரை அதிமுகவை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் ஜெயலலிதா.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close