[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

தோல்விகளால் தளராத காஸ்ட்ரோ...! கண்ணீரில் மூழ்கிய கியூபா

cuba-s-fidel-castro-dies

கியூபா முன்னாள் அதிபரும் கம்யூனிச புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ இன்று காலமானார். அவருக்கு வயது 90. பிடல் காஸ்ட்ரோவின் வாழ்க்கை வரலாற்றை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்...

கிளர்ச்சியாளராக இருந்தபோது மட்டுமல்லாமல் ஆட்சியாளராக மாறியபோதும் புரட்சிகரமான கொள்கைகளைக் கடைபிடித்தவர் பிடல் காஸ்ட்ரோ. அரசியல் காரணங்களுக்காக சில சமரசங்களைச் செய்து கொண்டாலும் தனது கொள்கைகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்கவில்லை.

பிடல் காஸ்ட்ரோ ஒரு வழக்கறிஞர். மிகச் சிறந்த பேச்சாளர். தனது வழக்குகளுக்கு தாமே நீதிமன்றத்தில் வாதாடுவார். அவரது வாதம் வெறும் சட்டப் பிரிவுகளைக் குறிப்பிடுவதாக மட்டுமே இருக்காது. பொதுக்கூட்டத்தில் ஆற்றும் உரைபோல உணர்ச்சிப்பூர்வமாக இருக்கும். இதில் கூடியிருக்கும் மக்களும், வழக்கறிஞர்களும் ஏன், நீதிபதிகளேகூட மயங்கிப்போவார்கள்.

சேகுவேராவுடன் இணைந்து ஆயுதப் போராட்டங்களிலும் புதிய நுணுக்கங்களை வகுத்தவர். சேகுவேரா ஒரு மருத்துவர். ஆயுதப் போராட்டங்களின்போது படையை வழிநடத்திச் செல்வதுடன், காயமடைந்தவர்களுக்கு அவரே சிகிச்சையும் அளிப்பார். இருவரும் இணைந்தபோதுதான் கியூபாவில் புரட்சி தீவிரமடைந்தது.

ஆயுதப் போராட்டங்களில் தோல்வியடைந்தாலும், எதிரிகளிடம் பிடிபட்டாலும் கவலையேபடாமல், மீண்டும் போராட்டத்துக்கான திட்டங்களைத் தீட்டுவது காஸ்ட்ரோவின் வழக்கம். 1952-ஆம் ஆண்டு ராணுவப் புரட்சியின் மூலம் பாடிஸ்டா ஆட்சியைக் கைப்பற்றியபோது, அமெரிக்காவுக்கும் பெரும் செல்வந்தர்களுக்கும் ஆதரவாக கியூபா மாறியது.

இதனையடுத்து, ‘தி மூவ்மென்ட்’ என்ற இயக்கத்தைத் தொடங்கிய காஸ்ட்ரோ பாடிஸ்டாவுக்கு எதிரான மிகப்பெரிய படையைத் திரட்டினார். புரட்சியாளராகவும் பொதுவுடமைவாதியாகவும் இருந்தாலும்கூட, அரசுக்கு எதிராகப் போராடி வந்த தீவிர கம்யூனிஸ்டுகளுடன் நெருங்குவதை காஸ்ட்ரோ தவிர்த்து வந்தார். எனினும் கம்யூனிஸ இயக்கத்தில் அங்கம் வகித்த தனது தம்பி ரவுல் காஸ்ட்ரோ போன்றோருடன் கொள்கைகள் பற்றி அவ்வப்போது விவாதிப்பார்.

காஸ்ட்ரோவின் தொடக்க கால முயற்சிகள் பல முறை தோல்வியைத் தழுவியிருக்கின்றன. 1953-ஆம் ஆண்டு ஜூலை 26-ஆம் தேதி கியூபாவின் சான்டியாகோ நகரில் ராணுவ ஆயுதக் கிடங்கு மீது தாக்குதல் நடத்துவதற்கு பிடல் காஸ்ட்ரோ திட்டமிட்டிருந்தார்.

ஏழைகள், ஆதரவற்ற இளைஞர்கள், தெருவோரம் வசிப்பவர்கள் என சாதாரண மக்களால் காஸ்ட்ரோவின் படை உருவாக்கப்பட்டிருந்தது. வெவ்வேறு விதமான சுமார் 200 துப்பாக்கிகள் அவர்களிடம் இருந்தன. அதிகாரிகளைக் குழப்புவதற்காக அனைவரும் ராணுவ உடைகளை அணிந்திருந்தார்கள். ஆனால் அவர்கள் சென்ற கார்களின் அணிவகுப்பில் குழப்பம் ஏற்பட்டதால், திட்டம் தோல்வியில் முடிந்தது. காட்ஸ்ட்ரோவின் ஆள்கள் பலர் கொல்லப்பட்டார்கள்.

காஸ்ட்ரோ உள்பட 80-க்கும் மேற்பட்டோர் தப்பிச் சென்றார்கள். எனினும் சில நாள்களில் அவர்களைப் பிடித்த பாடிஸ்டா அரசு, சிறையில் அடைத்தது. சிறையில் இரண்டு ஆண்டுகளைக் கழித்த பிடலும், ரவுலும் 1955-ஆம் ஆண்டு கருணை அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் இனி ஒருபோதும் அரசுக்கு எதிரான கிளர்ச்சயில் ஈடுபடமாட்டார்கள் என பாடிஸ்டா தப்புக்கணக்குப் போட்டார்.

சிறையிலேயே வலுவடைந்திருந்த காஸ்ட்ரோவின் இயக்கம், அவரது விடுதலைக்குப் பிறகு அரசுக்கு எதிரான பல தாக்குதல்களை நடத்தியது. காஸ்ட்ரோ சகோதரர்கள் மெக்சிகோவுக்குத் தப்பிச் சென்றார்கள். அங்குதான் ரவுல் காஸ்ட்ரோவின் நண்பரானார் அர்ஜென்டினா மருத்துவரான சேகுவேரா. கொரில்லாப் போர் முறைகளை பிடல் காஸ்ட்ரோவின் படைகளுக்கு கற்றுத்தந்தவர் அவர்தான். புதிய உத்திகளுடன் கியூபாவுக்குத் திரும்பிய காஸ்ட்ரோ, அரசுக்கு எதிரான பல முனைத் தாக்குதல்களை நடத்தினார். ஒரு புறம் காஸ்ட்ரோ, மறு புறம் சேகுவேரா, இன்னொருபுறம் ரவுல் காஸ்ட்ரோ என துணிச்சலான தளபதிகள் படைகளை வழிநடத்தியதால், பாடிஸ்டாவின் ராணுவம் பின்வாங்க வேண்டியதாயிற்று.

வெடிகுண்டுத் தாக்குதல், குண்டுவெடிப்புகள், முற்றுகை என பல வழிகளிலும் காஸ்ட்ரோவின் படைகள் நெருக்கடி கொடுத்தன. மக்களின் ஆதரவும் இருந்ததால், ஹவானாவில் உள்ள அதிபர் மாளிகையே அவர்களால் நெருங்க முடிந்தது. 1959-ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி கியூபாவின் அரசு காஸ்ட்ரோவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

ரவுல் காஸ்ட்ரோவும் சேகுவேராவும் தீவிரமான மார்க்சீய கம்யூனிஸ்டுகள் என்பதை உலகம் அறிந்திருந்தது. ஆனால், வெகுஜன ஆதரவைப் பெறுவதற்காகவும் அரசியல் வெற்றிக்காகவும் நீண்ட காலம்வரை தாம் ஒரு தீவிர கம்யூனிஸ்ட் என்பதை பிடல் காஸ்ட்ரோ மறைத்து வைத்திருந்தார். ஆனால் அமெரிக்காவின் தொடர் நெருக்கடிகளால் அவர் தனது தீவிரமான கொள்கைகளை கியூபாவில் அமல்படுத்த வேண்டியதாயிற்று.

சிலர் புரட்சியாளர்களாக வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஆனால் அதிகாரத்துக்கு வந்த பிறகு அவர்களால் சாதிக்க முடியாமல் போயிருக்கிறது. ஆனால், புரட்சியாளராகவும் ஆட்சியாளராகவும் முழுமையான வெற்றியைப் பெற்றவர் என்பதால், 20-ஆம் நூற்றாண்டின் செல்வாக்கு மிகுந்த தலைவர்களுள் ஒருவாக காஸ்ட்ரோ வைக்கப்பட்டிருக்கிறார். இத்தகைய பெருமையுடைய காஸ்ட்ரோ இரவு 10.30 மணிக்கு உயிர் நீத்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close