[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தி.மலையில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS வட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்

இழுத்தடிப்பதால் செல்வாக்கை இழக்கிறதா தேமுதிக ? ஒரு பார்வை

dmdk-s-election-coaltion-history-till-now

மக்களவை தேர்தல் சில மாதங்களில் நடக்கவுள்ள சூழ்நிலையில், தமிழக அரசியல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் அதிமுக தலைமயிலான கூட்டணியில் இப்போது பாமகவுக்கு 7, பாஜகவுக்கு 5 என தொகுதி பங்கீடு முடிந்து ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. இப்போது அதிமுக, தேமுதிகவை தன் பக்கம் இழுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. ஆனால், தேமுதிக வழக்கம்போல இந்தத் தேர்தலுக்கான கூட்டணியில் சேர்வதற்கு போக்கு காட்டி வருகிறது. மேலும், அதிமுக கூட்டணியில் சேர்வதற்கு அந்தக் கட்சி 10 தொகுதி கேட்பதாகவும், அதனை அதிமுக மறுப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், அதிமுக 10 தொகுதிகள் தருகிறோம் ஆனால் தேமுதிக வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை வைப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இத்தகைய சூழலில் கொஞ்சம் தேமுதிகவின் கூட்டணி வரலாற்றை பார்க்கலாம்.

திரைத்துறையில் கோலோச்சிக் கொண்டிருந்த காலக்கட்ட்ததில்  2005 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக ‘தேசிய முற்போக்கு திராவிடக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கினார் விஜயகாந்த். பின்பு 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 232 தொகுதிகளில் தேமுதிக தனித்து போட்டியிட்டது. இதில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் தவிர மற்றவர்கள் அனைவரும் தோல்வியை தழுவினர். விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியிலிருந்து வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினராக நுழைந்தார். ஆனால், அனைவரும் வியக்கும் வகையில் தேமுதிக மொத்தம் 8.45 சதவீத வாக்குகளைப் பெற்றது. 3 தொகுதிகளில் 20% அதிகமான வாக்குகளையும், 8 தொகுதிகளில் 15% லிருந்து 20% வரையான வாக்குகளையும், 33 தொகுதிகளில் 10% லிருந்து 15% வரையான வாக்குகளையும், 48 தொகுதிகளில் 7% லிருந்து 10% வரையான வாக்குகளையும் 2006 தேர்தலில் இக்கட்சி வேட்பாளர்கள் பெற்றனர்.

இதனால் தேமுதிகவை தமிழக மக்கள் திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்றான அரசியல் கட்சியாக பார்த்தனர். மேலும், முக்கியக் கட்சிகளான திமுகவும், அதிமுகவும் அக்கட்சியின் வளர்ச்சியை கண்டு திடுக்கிட்டனர். ஆரம்பத்தில் கூட்டணி குறித்து பேசிய விஜயகாந்த் "தெய்வத்தோடும், மக்களோடும்தான் கூட்டணி" என்று தெரிவித்தார். இதனையடுத்து 2009 இல் நடைபெற்ற மக்களவை தேர்தலிலும் தேமுதிக 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. ஆனால் 40 தொகுதியிலும் தோல்வி கண்டது. ஆனால் 10% வாக்குகள் தேமுதிகவுக்கு கிடைத்து. இது தேமுதிக வளர்ச்சி பாதையில் சென்றதற்கான ஆதாரமாக பார்க்கப்பட்டது. இப்படி மாற்று அரசியலை முன்னெடுக்கும் நபராக பார்க்கப்பட்ட விஜயகாந்த் 2011 இல் ரூட் மாறினார்.

ஆம் 2011 சட்டப்பேரவை தேர்தலில் "தெய்வத்தோடும் மக்களோடும்" கூட்டணியை மறந்து முதல்முறையாக அதிமுகவுடன் கூட்டணி வைத்தார். அந்தத் தேர்தலில் அதிமுக தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில் 29 இல் வெற்றிப் பெற்றது. அந்தத் தேர்தலில் 23 தொகுதிகளில் மட்டுமே திமுக வெற்றிப் பெற்றதால் எதிர்கட்சிக்கான தகுதியையும் இழந்தது. இதனையடுத்து தமிழக சட்டப்பேரவையின் எதிர்கட்சித் தலைவரானார் விஜயகாந்த். இதனால், இரண்டாவது பெரும்பாண்மையுடன் தேமுதிக எதிர்கட்சி அந்தஸ்து பெற்றது. அதே நேரம் தேமுதிகவிற்கு 2006 இல் பெற்றதை விட அந்த தேர்தலில் 0.5 விழுக்காடு வாக்குகள் குறைவாகப் பெற்றிருந்தது.


 
பின்னர், அதிமுகவுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக தனியாகவும், திமுக ஒரு அணியாகவும் மூன்றாவது அணியாக தேமுதிக தலைமையில், பாஜக, பாமக, மதிமுக ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டது. இந்த தேர்தலில் பாமக மட்டுமே ஒரு தொகுதியில் வெற்றிபெற்றது. தேமுதிக போட்டியிட்ட 14 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியை தழுவியது. அதே சமயம் வாக்கு சதவீதமும் 5.1 ஆக குறைந்தது. இதனையடுத்து 2016 சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க பல கட்சிகள் முயன்றன. 2016 இல் திமுக கூட்டணியில் தேமுதிக சேரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எல்லோருக்கும் போக்கு காட்டினார் விஜயகாந்த்.

கடைசியில் மதிமுக, விசிகே, கம்யூனிஸ்ட், தமாகவுடன் மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்தது தேமுதிக. மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார் விஜயகாந்த். ஆனால், அந்தக் கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் நின்று தோல்வியை சந்தித்தார். இதனால், தேமுதிவின் வாக்கும் செல்வாக்கும் குறைந்தது. இப்போது முன்புபோல விஜயகாந்தால் செயல்பட முடியவில்லை. அதற்கு அவரின் உடல்நல பாதிப்பும் ஒரு காரணமாக. இம்முறையாவாது தேமுதிக சரியான நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யவில்லை என்றால் மக்கள் மத்தியில் செல்வாக்கு குறையும் என்றும் தெரியும். ஆனாலும், எப்போதும் போல் இப்போதும் இழுத்தடிக்கிறது தேமுதிக என அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close