ஆளுநர் ஆய்வு மேற்கொள்வதைக் கண்டித்து போராட்டம் நடத்துவதற்கு முன்பாகவே திமுகவினர் கைது செய்யப்பட்டதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்திற்கு சென்றுள்ள ஆளுநர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது சிவகாசி சாலையில் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோரும், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினரும் கறுப்புக்கொடி காண்பித்து, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் இது குறித்து முகநூலில் பதிவிட்டுள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மாநில சுயாட்சி கொள்கைக்கும், மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையிலான அரசியல் சட்டத்திற்கும் முற்றிலும் விரோதமாக ஆளுநர் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். ஆளுநர் இதற்கு முன் ஆய்வுக்காக சென்ற இடங்களில் எல்லாம் திமுகவினர் போராட்டம் நடத்தியபோது அமைதி காத்த தமிழக காவல்துறை, விருதுநகர் மாவட்டத்திற்கு செல்லும்போது மட்டும் திமுகவினரை கைது செய்தது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் போலீஸ் ராஜ்யம்தான் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக்காட்டவா என வினவியுள்ளார்.