சபரிமலைக்கு வந்த 12 வயது சிறுமியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டதில் இருந்து ஏராளமான பக்தர்கள் சென்றுகொண்டிருக்கின்றனர். 10 வயதிலிருந்து 50 வயதிற்குட்பட்ட பெண்கள் நீதிமன்ற அனுமதிபெற்றே சபரிமலைக்கு வரவேண்டும் என்று கேரள போலீசார் கூறியுள்ளனர். நீதிமன்ற அனுமதியில்லாமல் வருபவர்களை தடுத்தி நிறுத்தி போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர்.
சபரிமலையில் பெண்கள் தரிசக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்த போதிலும், நீதிமன்ற உத்தரவுடன் வரும் பெண்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்ற நிலை உள்ளது. இதனால் சபரிமலைப் பகுதியில் கடும் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், புதுச்சேரியைச் சேர்ந்த 12 வயது சிறுமி தனது தந்தை மற்றும் உறவினர்களுடன் இன்று சபரிமலைக்கு வருகை தந்தார். இருமுடி கட்டி வந்த அந்த சிறுமியை போலீசார் தடுத்து நிறுத்தினர். அந்த சிறுமிக்கு 10 வயது தான் ஆகிறது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
அப்போது பம்பாவில் சிறுமியின் அடையாள அட்டையை பரிசோதித்த காவல்துறையினர், சிறுமிக்கு 12 வயது நிரம்பியதை அறிந்தனர். இதையடுத்து சிறுமியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். குடும்பத்தினர் எவ்வளவோ கெஞ்சி கேட்ட போதும் அதனை போலீசார் ஏற்க மறுத்துவிட்டனர். சிறுமி கீழேவுள்ள முகாமில் தங்கியிருக்கலாம் என்றும் இதர குடும்பத்தினர் தங்களது பயணத்தை தொடரலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்பும் ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த 10க்கும் மேற்பட்ட நடுத்தர வயது பெண்களை கேரள போலீசார் திருப்பி அனுப்பியிருந்தனர். அதேபோல், ஆந்திராவில் இருந்து வந்த இரண்டு நடுத்தர வயது பெண்களையும் தடுத்து நிறுத்தினர்.