கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் ஷரனபசவராஜ் பிசரஹல்லி. 15க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள இவர் சட்டப் படிப்பையும், இரண்டு மாஸ்டர் டிகிரியும் முடித்துள்ளார். தற்போது, பி.ஹெச்டி படிப்பதற்காக நுழைவுத் தேர்வு எழுதியுள்ளார் ஷரனபசவராஜ்.
1929ம் ஆண்டு மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் ஷரனபசவராஜ். சுதந்திர போராட்ட இயக்கங்களில் கர்நாடகா-ஐதராபாத் பகுதிகளில் தீவிரமாக செயல்பட்டுள்ளார். குடும்பம் வறுமையில் இருந்த போது, தந்தை எதிர்த்த போதும், தாய் ராச்சம்மாவின் ஊக்கத்தால் படித்தார். தனது இண்டர்மிடியரி படிப்பை முடித்த கையோடு லைதாதேவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடித்த உடன் தனது சொந்த ஊரான கொப்பலில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தார். 1951-52 ஆண்டுகளில் கவலூர் பகுதியில் தொடங்கிய அவரது ஆசிரியர் பணி, 1992இல் தான் நிறைவடைந்தது. 40 ஆண்டுகளில் பல்வேறு கிராமங்களில் உள்ள பள்ளிகளில் அவர் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.
ஆசிரியராக பணியாற்றிய போதும் மீதமுள்ள நேரத்தில் தனது படிப்பை விடாமல் தொடர்ந்தார். அவரது படிப்பு தாகம் அரை நூற்றாண்டையும் கடந்து தொடர்ந்து வருகிறது. சட்டப் படிப்பில் டிகிரி முடித்த ஷரனபசவராஜ், கர்நாடக பல்கலைக் கழகம், கன்னட பல்கலைக் கழகம் என இரண்டிலும் கன்னட மொழி பாடத்தில் மாஸ்டர் டிஜிரி படித்து முடித்தார்.
முதலில் கர்நாடக பல்கலைக் கழகத்தில் கன்னட மொழி பாடத்தில் மாஸ்டர் டிகிரி பெற்ற அவர் பி.ஹெச்டி படிக்க எண்ணியுள்ளார். ஆனால், பி.ஹெச்டி படிப்பதற்கான 55 சதவீத மதிப்பெண் அந்த மாஸ்டர் டிகிரியில் அவருக்கு இல்லை. அதனால், அதே கன்னட மொழிப் பாடத்தில் கன்னட பல்கலைக் கழகத்தில் சேர்ந்து 66 சதவீதத்துடன் மாஸ்டர் டிகிரி முடித்தார். தற்போது, ஹம்பியில் உள்ல கன்னட பல்கலைக் கழகத்தில் பி.ஹெச்டி படிக்க தற்போது நுழைவுத் தேர்வு எழுதியுள்ளார்.
ஷரனபசவராஜுக்கு மொத்தம் 6 பிள்ளைகள் இருக்கிறார்கள். மூத்த மகன் சிவானந்த் பஞ்சாயத்து மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இரண்டாவது மகன் கல்யாண் குமார் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். மூன்றாவது மகன் விருபக்ஷ் தொழில் செய்து வருகிறார். அவரது மூன்று மகள்களும் திருமணமாகி வெளிநாடுகளில் குடியேறிவிட்டார். அதேபோல், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து மூன்று பிள்ளைகளை எடுத்து அவர் வளர்த்துள்ளார்.
அவர்கள் மூன்று பேரும் படித்து நல்ல வேளைகளில் இருக்கிறார்கள். ஒருவர் பொதுத் துறையில் கண்காணிப்பாளராக இருக்கிறார். மற்றொருவர் கர்நாடக போலீசில் கூடுதல் உதவி ஆய்வாளராக உள்ளார். மூன்றாவது நபர் தொலைத் தொடர்பு துறையில் இருக்கிறார்.
தனது தந்தை குறித்து மூத்த மகன் சிவானந்த் கூறுகையில், “ எனது தந்தை மிகவும் தன்னொழுக்கம் உடையவர். தனது பணிகளை அதிகாலை 3 மணிக்கே தொடங்கிவிடுவார். தினமும் காலை பிராத்னைகளையும், சடங்குகளையும் செய்வார். பின்னர், நீண்ட நேரம் செய்திதாள்கள் படிப்பார். எங்களோடு உரையாடுவார். இரவு தூங்கும் வரை படித்துக் கொண்டே இருப்பார். எனது தந்தைக்கு ஆசிரியர் பென்ஷனும், சுதந்திர போராட்ட பென்ஷனும் வருகிறது. இந்த பென்ஷன் தொகையினை சமூக சேவைக்காகவே பயன்படுத்தி வருகிறார்” என்றார்.
தன்னுடைய படிப்பு ஆர்வம் குறித்து ஷரனபசவராஜ் பேசுகையில், “அறிவினை வளர்த்துக் கொள்ள வாழ்நாள் முழுவதும் மாணவனாகவே இருக்க விரும்புகிறேன். வயது என்ற அடிப்படையில் கற்றுக் கொள்ளும் போக்கு எப்பொழுதும் தடைபடக்கூடாது. எனக்கு தனிப்பட்ட வகையில் வேலைகள் இருந்ததால் பி.ஹெச்.டி படிப்பை தொடங்க முடியாமல் போனது. இதில் என்னுடைய மனைவி எனக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறார். நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று வாய்ப்பு கிடைத்தால், கன்னட இலக்கியத்தில் ‘வசனா சாகித்யா’ என்ற தலைப்பில் ஆய்வு செய்யவுள்ளேன்” என்றார்.
courtesy - the news minute
புல்வாமா தாக்குதலை கண்டித்து நியூஸிலாந்து நாடாளுமன்றத்தில் தீர்மானம்
“அதிதி மேனனை யாரோ மூளைச் சலவை செய்துள்ளனர்” - நடிகர் அபி சரவணன்
கழிப்பறை காகிதத்தை தேடினால் வரும் பாகிஸ்தான் கொடி - புது சர்ச்சை
உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுமா? - ஐசிசி ஆலோசனை
பிப்ரவரி 26 அன்று விசாரணைக்கு வருகிறது அயோத்தி வழக்கு