ஆண் குழந்தைகள் பாதுகாப்பாகத் தான் இருக்கிறார்கள் என உறுதியாக நினைத்துவிட வேண்டாம் என சிறுவயதில் பாலியல் தொல்லைக்குள்ளான இளைஞர் ஒருவர் மனம் திறந்து பேசியுள்ளார்.
தற்போது 28 வயதாகும் இளைஞர் ஒருவர் தனக்கு சிறுவயதில் நடந்த பாலியல் கொடுமைகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் பேசிய அவர், “ பெண்கள் தங்களுக்கு நிகழும் பாலியல் தொல்லைகள் பற்றி பேசுவதை எப்படி கடினமான ஒன்றாக நினைக்கிறார்களோ அதைபோன்று ஆண் குழந்தைகளும் தங்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் பற்றி பேசுவதை கடினமானதாக நினைக்கிறார்கள்.
எனக்கு இப்போது 28 வயது ஆகுகிறது. ஒரு கம்பெனியில் வேலை செய்கிறேன். ஆனால் எனக்கு சிறுவயதில் நடந்த பாலியல் தொல்லை பற்றி பேசவேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். சிலர் ‘ஆண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை இருக்காது. அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்’ என்று நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை. சிறுவயதில் இரண்டு முறை நான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டேன். நான் 7-வது படிக்கும்போது மும்பையில் நான் வசிக்கும் குடியிருப்பு அருகிலேயே என்னுடன் சக நண்பர் ஒருவர் படித்து வந்தான். ஆனால் அவன் வயதில் என்னைவிட மூத்தவன். நல்ல உடல்வாகு கொண்டிருப்பான். ஒருமுறை யாருமில்லாத கட்டிடடத்தின் மேல்தளத்திற்கு அழைத்துச் சென்று எனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தான். நான் எவ்வளவு முயற்சி செய்தும் அவனிடம் இருந்து விடுபட முடியவில்லை. எனக்கு அதிக பயம் வந்துவிட்டது. வீட்டிலும் யாரிடமும் இதுபற்றி பேச முடியவில்லை. இதனால் எனக்கு குற்ற உணர்ச்சி உண்டானது. இதிலிருந்து வெளியே வர எவ்வளவோ முயற்சி செய்தும் என்னால் முடியவில்லை.
அதேபோல நான் 9-வது படிக்கும்போது என்னுடன் படித்த மற்றொரு நண்பன் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தான். இதனையடுத்து அவன் பக்கத்தில் அமர்வதை நான் நிறுத்திக் கொண்டேன். இதுபற்றி அப்போது என்னால் வாய் திறந்து பேச முடியவில்லை. ஒருவேளை இதுபற்றி நான் சொன்னால் எனக்கும் பிரச்னை வரும் என நினைத்தேன். இதனால் எனக்கு மற்றவர்களுடன் பேசவே ரொம்ப பயமாக இருந்தது. எனக்கு வாய் குளற ஆரம்பித்தது. பின்னர் ஆண்களை பார்த்தாலே எனக்கு அதிகப்பயம் உண்டானது. எனவே ஆண்களை விட எனக்கு பெண் தோழிகளே அதிகம் இருந்தார்கள். எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த அந்த இரண்டு நபரை பார்க்கும் போதெல்லாம் எனக்கு கடுமையான கோபம் வருகிறது. நான் அனைவருக்கும் சொல்ல விரும்புவது பெண் குழந்தைகளுக்கு போல ஆண் குழந்தைகளுக்கும் பாலியல் துன்புறுத்தல் நடைபெறுகிறது. இதுவும் குற்றம்தான். எனவே இதனை கண்டுகொள்ளாமல் விடாமல் அதனை பற்றியும் பேச வேண்டும்” என தெரிவித்தார். 28 வயதான அந்த இளைஞர் தனது பெயரை சொல்ல விரும்பவில்லை. இவர் மும்பையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புல்வாமா தாக்குதலை கண்டித்து நியூஸிலாந்து நாடாளுமன்றத்தில் தீர்மானம்
“அதிதி மேனனை யாரோ மூளைச் சலவை செய்துள்ளனர்” - நடிகர் அபி சரவணன்
கழிப்பறை காகிதத்தை தேடினால் வரும் பாகிஸ்தான் கொடி - புது சர்ச்சை
உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடுமா? - ஐசிசி ஆலோசனை
பிப்ரவரி 26 அன்று விசாரணைக்கு வருகிறது அயோத்தி வழக்கு