[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

ஆசிட் வீச்சில் முகம் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்

acid-attack-girl

முகம் சிதைந்தாலும், அவள் மனம் தூய்மையானது என்று ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட இளைஞர் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிர மாநிலம் தானே கல்வா பகுதியை சேர்ந்த இளம்பெண் லலிதா பென் பான்சி. இவருக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு சொந்த ஊரான உத்தரப் பிரதேசத்தில் திருமணம் நடக்க இருந்தது. திருமணத்திற்காக அந்த மாநிலத்தில் உள்ள அசாம்கார்க்கிற்கு சென்றார். அப்போது முன்விரோதம் காரணமாக இவரது சொந்த குடும்பத்தை சேர்ந்தவர்களே லலிதா மீது ஆசிட் வீசினர். இதில் அவரின் முகம் சிதைந்து போனது. திருமணமும் நின்று போனது. கல்யாணக் கனவுகளுடன் சென்ற லலிதாவுக்கு இது பேரிடியாக அமைந்தது. தனது முகத்துடன் சேர்ந்து வாழ்க்கையும் சிதைந்துவிட்டதாகவே கருதினார். வீட்டிலேயே முடங்கினார். இருப்பினும் மருத்துவர்களின் உளவியல் ஆலோசனைகளும், 17க்கும் அதிகமான அறுவை சிகிச்சைகளும் அவருக்கு சிறிது தைரியம் அளித்தது. இந்நிலையில் 2 மாதங்களுக்கு முன் லலிதா பென் தன் செல்போனில் இருந்து தவறுதலாக மும்பை மலாடு பகுதியை சேர்ந்த சிசிடிவி ஆபரேட்டரான ராகுல் குமார் (27) என்ற வாலிபருக்கு மிஸ்டு கால் கொடுத்துவிட்டார். இதையடுத்து 2 பேருக்கும் இடையே நட்பு ஏற்பட்டது. அப்போது தங்களைப் பற்றி ஒருவரை ஒருவர் பகிர்ந்து கொண்டனர்.

அப்போது, ராகுல் குமார் அளித்த தன்னம்பிக்கை பேச்சால் மனபலம் பெற்ற லலிதா, அவர் மீது காதலில் விழுந்தார். உருவம் கடந்து உருவான இந்த காதலுக்கு 2 வீட்டாரும் பச்சைக்கொடி காட்டினர். இதையடுத்து 2 பேரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். சமீபத்தில் மும்பை பரேல் பகுதியில் மாம்பழத்திருவிழா நடந்தது. அப்போது தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றின் கடையில் லலிதா மாம்பழ விற்பனையாளராக இருந்தார். அங்கு வந்த தொழிலதிபர் ருஷிகேஷ் கதம் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பேச்சு கொடுத்தார். அப்போது அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர் நண்பர்களின் உதவியுடன் லலிதாவின் திருமண செலவை ஏற்பதாகக் கூறினார். மேலும் பல்வேறு தரப்பினர் லலிதாவின் திருமணத்திற்கு உதவ முன்வந்தனர்.

இந்தி நடிகர் விவேக் ஓபராய் லலிதாவுக்கு திருமண பரிசாக தானேயில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்றை வழங்குவதாகக் கூறினார். இந்நிலையில் லலிதா, ராகுல் குமார் நேற்று தானேயில் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சி தாதர் சிவாஜி பார்க் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அரங்கில் நடந்தது. இந்த விழாவில் திரைப்பட நட்சத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். பல்வேறு தனியார் தொண்டு நிறுவனத்தினர் மற்றும் திரளான பொதுமக்களும் மணமக்களை வாழ்த்தி அவர்களை இன்ப மழையில் நனைய வைத்தனர். எண்ணிலடங்கா பரிசுகளை அள்ளிக்கொடுத்தும் புதுமணத்தம்பதியை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். ஆசிட் வீச்சால் இனி தன் வாழ்க்கை முடிந்தது என நினைத்துக் கொண்டிருந்த லலிதாவுக்கு அழகான வாழ்க்கை அமைந்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த மணமகன் ராகுல் குமார், “முகம் சிதைந்தாலும் அவள் மனம் தூய்மையானது. அதைவிட எனக்கு வேறு என்ன வேண்டும்” என்று கூறினார். லலிதா கூறுகையில், “நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு திருமணம் ஆகும் என்று நான் நினைக்கவே இல்லை. என்னைப் பற்றி எல்லாம் தெரிந்திருந்தும் என்னைத் திருமணம் செய்து கொண்டார், ராகுல். மிகவும் நெகிழ்ச்சியாக உணர்கிறேன்” என்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close