[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

தேசம் 2016: செல்லாத நோட்டு... கோவில் விபத்து....கலவரம்... தற்கொலை... நிறைவேறிய சட்டம்....

the-main-events-of-2016-year

செல்லாத நோட்டுப் பிரச்சனை... கேரள கோவில் விபத்து.. காஷ்மீர் கலவரம்... ஹைதராபாத் பல்கலை மாணவர் தற்கொலை, ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றம் என 2016ம் ஆண்டில் ஏராளமான சம்பவங்கள் பரபரப்பாகப் பேசப்பட்டன...

பணமதிப்பிழப்பு விவகாரம்

கடந்த 2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்றதில் இருந்து எடுக்கப்பட்ட மிகப்பெரிய நடவடிக்கையாக கருதப்படுவது பண மதிப்பு நீக்க நடவடிக்கைதான். புழக்கத்தில் இருந்த 86 சதவிகிதத்திற்கும் அதிகமான ஐந்நூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த நவம்பர் 8ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதற்கு மாற்றாக புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.‌ வங்கிகளிலும், தபால் நிலையங்களிலும் பழைய ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து புதிய 2 ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டதால், அங்கெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஏடிஎம்களின் வாசல்களிலும் மக்கள் தவமாய் தவம் கிடந்தனர். இந்நிலையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 3 மாதத்திலோ, ஆறு மாதத்திலோ ஏன் அடுத்த ஒரு வருடத்திலோ கூட மீளு‌மா என்பது சந்தேகம் என பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் முழுவதும் இப்பிரச்னையால் வீணானது. செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை அமல்படுத்திய விதம் மோசமானது எனக்கூறும் அரசியல் நோக்கர்கள், இதன் விளைவு, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல்களில் எதிரொலிக்கும் என்றும் கூறுகின்றனர். செல்லாத ரூபாய் நோட்டுப் பிரச்சனைதான் 2016ல் நிகழ்ந்த தேசத்தின் மிகப்பெரும் அதிரடி அறிவிப்பு.

பதான்கோட் தாக்குதல்

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப் படைத் தளத்தில் ஜனவரி 2ஆம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்கியதில் ஆறு பாதுகாப்புப்படை வீரர்களும், ஒரு அதிகாரியும் உயிரிழந்தனர். கடுங்குளிரையும், பனி மூட்டத்தால் உருவான தெளிவற்ற சூழலையும் பயன்படுத்திக் கொண்ட பயங்கரவாதிகள், நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இறுதியில் தாக்குதலில் ஈடுபட்ட 5 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். இதன் பின்னணியில், ஜெய்ஷ் ஈ முகமது பயங்கரவாத இயக்கம் இருந்ததை புலனாய்வு அமைப்பினர் கண்டறிந்தனர். பயங்கரவாத தாக்குதலுக்கு அடிக்கடி இலக்காகும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை விட்டு வெளியே, பஞ்சாப்பில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் மத்திய அரசுக்கு பெரும் எச்சரிக்கை விடுக்கும் செய்தியாகவே அமைந்தது. உச்சக்கட்ட பாதுகாப்பு வளையத்தில் இருக்கும், ஒரு விமானப்படைத் தளத்தில் நடத்தப்பட்ட தாக்குதல், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கேரள கோயில் விபத்து

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள பரவூர் பகுதி அருகே உள்ள புட்டிங்கல் கோயிலில் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி வாணவேடிக்கை போட்டி நிகழ்ச்சியின்போது நடந்த விபத்தில் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 350க்கும் மேற்பட்டோர் கா‌யமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக கோயில் நிர்வாகிகள் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். இதன் விளைவாக, கேரளாவில் உள்ள கோயில்கள் அனைத்திலும் சூரியன் மறைந்த பின்‌னர் வாணவேடிக்கை நடத்தக்கூடாது என்று அந்த மாநில உயர்நீதிமன்றம் தடை‌ உத்தரவு பிறப்பித்தது. 2016ன் அதிர்ச்சிகரமான சம்பவம் இது.

ரோஹித் வெமுலா தற்கொலை

மற்றொரு அதிர்ச்சச் சம்பவம் ஹைதராபாத்தில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தில் பிஹெச்டி பயின்று வந்த ரோஹித் சக்ரவர்த்தி வெமுலா எனும் மாணவனின் தற்கொலை... இதில் மத்திய அமைச்சர்கள் மீதெல்லாம் குற்றச்சாட்டு எழுந்தது. ஜனவரி 17ஆம் தேதி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் வெமுலா. தனது மகன் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் அதுகுறித்து நீதி விசாரணை தேவை எனவும் வெமுலாவின் தந்தை வற்புறுத்தினார். வெமுலாவை தற்கொலைக்குத் தூண்டியதாக பண்டாரு தத்தாத்ரேயா ஸ்மிருதி இரானி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மாணவர்கள் போராட்டத்திற்கு ராகுல் காந்தி, கெஜ்ரிவால், மாயாவதி, சீதாராம் யெச்சூரி போன்றோர் ஆதரவு தெரிவித்தனர். வெமுலாவின் தற்கொலைக்கு நீதி தேவை என ஐநாவின் 31வது மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்திலும் வலியுறுத்தப்பட்டது- லண்டன், மிச்சிகன், சான் பிரான்சிஸ்கோ, பாஸ்டன், ஜோகன்ஸ்பர்க் உள்ளிட்ட நகரங்களில் போராட்டங்களும் நடைபெற்றன.

கன்னையா குமார் மீது தேசத் துரோக வழக்கு

இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவன‌ங்களில் ஒன்றான டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மீது நாட்டின் கவனம் திருப்பிய புகைப்படக் கண்காட்சி ஒன்று 2016ன் பரபரப்பான சம்பவங்களில் ஒன்று.நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து மாணவ அமைப்பினர் கருத்தரங்கு மற்றும் புகைப்படக் கண்காட்சி நடத்தினர். அதில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் இடதுசாரி மாணவ அமைப்பினர் முழக்கமிட்டதாகக் கூறி, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் எனப்படும் பாரதிய ஜனதாவின் மாணவர் அமைப்பினர் மோதலில் ஈடுபட்டனர். இதனால் நேரு பல்கலைக்கழக வளாகமே போர்க்களமானது. அதன் தொடர்ச்சியாக, மாணவர் அமைப்பின் தலைவர் கன்னையா குமார் உள்ளிட்ட 7 பேர் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டு பிப்ரவரி 12ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுதலை செய்யக்கோரி சக மாணவர்கள் நடத்திய போராட்டங்களில் ராகுல் காந்தி, ஆனந்த் சர்மா, சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். கல்வி நிறுவனங்களாக இருந்தாலும் நாட்டுக்கு எதிராக முழக்கமிடுவதை சகித்துக் கொள்ள முடியாது என்று மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஸ்மிரிதி இரானி உள்ளிட்டோர் கூறினர். பிறகு மார்ச் 2 ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் கன்னையா குமாருக்கு ஆறு மாத கால இடைக்கால ஜாமீன் வழங்கியது. பின்னர் நடத்தப்பட்ட பல்வேறு கட்ட விசாரணைகளில், பல்கலைக்கழக வளாகத்தில் கன்னையா குமார், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவோ, இந்தியாவுக்கு எதிராகவோ முழக்கமிடவில்லை என்பது உறுதியானது.

காஷ்மீர் கலவரம்

ஜூலை‌ 8ம் தேதி, பாதுகாப்புப் படையினரால் பயங்கரவாதி புர்ஹான் வானி கொல்லப்பட்டதை அடுத்து, ஜம்மு ‌காஷ்மீரில், சட்டம் ஒழுங்கு பெருமளவில் சீர்குலைந்தது. இதன் விளைவாக கிட்டத்தட்ட 4 மாதங்கள் மிகப்பெரும் வன்முறை நிலவியது. இதனால், அம்மாநிலத்தின் அமைதி பறிபோனது. மத்திய அரசு நடத்திய துல்லியத் தாக்குதல் மற்றும் பணமதிப்பு நீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் வந்தது. சமூக வலைதள நடவடிக்கைகளில் தீவிரமாக இருந்த ப‌யங்கரவாதி புர்ஹான் வானி, பேஸ்புக்கில் மும்முரமாக இயங்கி வந்தார். இதனால், மக்களிடையே பிரபலமாக இருந்த வானியின் இறுதிச்சடங்கின் போது, பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறியது.

ஜெய்ஷ் ஈ முகமது இயக்கம் செப்டம்பர் 18 ஆம் தேதி உரி ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தியது. இதில், சுமார் 20 பாதுகாப்புப்படையினர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து, இந்திய ராணுவம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்கும் துல்லியத் தாக்குதல் எனும் தாக்குதலை செப்டம்பர் 29 ஆம் நடத்தியது. காஷ்மீரில் துருப்புகள் அதிகரிக்கப்பட்டன. அதன்பிறகு காஷ்மீரில் நிலைமை சீரடைந்து, ஊரடங்கு உத்தரவும் விலக்கப்பட்டு, சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

உத்தராகண்டில் திருவள்ளுவர் சிலை

உலகப் பொதுமறை திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரின் சிலையை உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள புண்ணியத்தலமான ஹரித்துவாரில் நிறுவ பாரதிய ஜனதாவின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த தருண் விஜய் முயற்சி எடுத்தார். அதன் விளைவாக, நாமக்கல் மாவட்டத்தில் 20 லட்ச ரூபாய் மதிப்பில் 12 அடி உயர வள்ளுவர் சிலை வடிவமைக்கப்பட்டது. இந்த சிலை கன்னியாகுமரியிலிருந்து பல்வேறு ஊர்கள் வழியாக எடுத்துச் செல்லப்பட்டு ஹரித்துவார் சென்றடைந்தது. கங்கைக் கரையில் கடந்த ஜூன் 29ஆம் தேதி வள்ளுவர் சிலையை நிறுவ தீர்மானிக்கப்பட்டது. ஆனால், வள்ளுவர் தலித் இனத்தவர் எனக் கூறி அவரது சிலையை வைக்க சில புரோகிதர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதனால் சிலை பிளாஸ்டிக்கால் மூடப்பட்டு நீண்டகாலமாக கேட்பாரற்று கிடத்தி வைக்கப்பட்டிருந்தது. சிலையை நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தராகண்ட் முதலமைச்சர் ஹரிஷ் ராவத்திற்கு அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். சிலை விவகாரம் தொடர்பாக தமிழக அரசியல் தலைவர்கள், உத்தராகண்ட் அரசுக்கும் தருண் விஜய்க்கும் கண்டனம் தெரிவித்தனர். இத்தகைய சூழலில், கடந்த 19ஆம் தேதி ஹரித்துவாரில் உள்ள சஹர் கி பவ்ரி என்ற இடத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

உ.பி.யில் குடும்ப அரசியல் மோதல்

உத்தரப்பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவுக்கும் அவரது சித்தப்பாவும் ஆளும் சமாஜ்வாதி கட்சித் தலைவர்களில் ஒருவருமான சிவ்பால் இடையே ஏற்பட்டுள்ள மோதல் இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அகிலேஷ் யாதவ் - சிவ்பால் மோதல் பொது நிகழ்ச்சிகளிலும், தொண்டர்கள் முன்னிலையிலும் வெடித்தது. சமாஜ் வாதி கட்சிக்குள் நடக்கும் இந்த மோதலை பயன்படுத்தி அடுத்த ஆண்டு அங்கு நடைபெறயுள்ள சட்டப்பேரவை தேர்தலில் பெரும் வெற்றி பெற வேண்டும் என பாஜக., காங்கிரஸ், மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் தீவிரப்பிரச்சாரத்தை துவக்கியுள்ளன.

நிறைவேறியது ஜிஎஸ்டி

நாட்டின் மிகப் பெரிய வரிச் சீர்த்திருத்தமாகப் பார்க்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், நிறைவேற்றப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்த இந்த மசோதா, கடந்த ஆண்டு மே மாதம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. எனினும், மாநிலங்களவையில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாததாலும், இதன் சில அம்சங்களுக்கு எதிர்க் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததாலும் நிறைவேற முடியாத சூழல் இருந்தது. இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று சில முக்கிய திருத்தங்களை செய்ய மத்திய அரசு ஒப்புக்கொண்டது. இதையடுத்து, அதிமுக தவிர காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் இந்த மசோதா மாநிலங் களவையில் நிறைவேறியது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close