[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெங்கு கொசு ஒழிப்புப் பணியில் மெத்தனம் காட்டியதாக 50 தற்காலிக பணியாளர்கள் டிஸ்மிஸ்: வேலூர் ஆட்சியர் நடவடிக்கை
  • BREAKING-NEWS ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கையின் முடிவை வரும் 22-ஆம் தேதி வரை வெளியிட தடை நீட்டிப்பு
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்

“என் படம் எப்ப வெளியாகும் சொல்லுங்க சார்” - கெளதம் மேனன் V/S கார்த்திக் நரேன் ட்வீட் சர்ச்சை 

director-gautham-menon-and-karthick-naren-fight-on-going-twitter

இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனுக்கு இளம் இயக்குநர் கார்த்திக் நரேனுக்கும் திரும்பவும் ட்விட்டரில் வார்த்தை போர் ஆரம்பமாகி உள்ளது.
 
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. இதில் தனுஷ் நாயகனாக நடித்துள்ளார். மேகா ஆகாஷ், சசிகுமார், வேல ராமமூர்த்தி உட்பட பலர் நடித்துள்ளனர். தர்புகா சிவா இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டான நிலையில், படம் இரண்டு வருடமாக ரிலீஸ் ஆகாமல் இருந்து வருகிறது. 

நிதிநெருக்கடி காரணமாக இப்படம் வெளியாவதில் சிக்கல் நீடித்து வந்தது. இந்தப் படத்தின் புதிய ட்ரெய்லரை வெளியிட்ட படக்குழு, படம் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தது. அதனால் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இந்தப் படத்தை எதிர்நோக்கி பதிவுகளையும் மீம்ஸ்களையும் பதிவிட்டனர். ஆனால், படத்தின் மீதான பிரச்னை தீர்க்கப்படாததால், படம் அன்று ரிலீஸ் ஆகவில்லை. பின் நவம்பர் 15 ஆம் தேதி படம் கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என்று தெரிவித்தனர். அதுதொடர்பாக போஸ்டரும் வெளியானது.  அதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் நேற்று நவம்பர் 29 ஆம் தேதி படம் வெளியாகும் என்று புதிதாக வெளியாகியுள்ள போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்தோஷமான செய்தியை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் கெளதம் மேனன் ஒரு ட்விட் போட்டிருந்தார். அதில், “இந்தக் கால பருவம் சீயான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ படம் வெளியாகாமல் முடிவுக்கு வராது. ஏனெனில் இது என் இதயத்திற்கும் நெருக்கமானது. சீயான் விக்ரமுடன் வேலை செய்தது மிகப்பெரிய நேர்மறையான அனுபவம். இந்தப் படத்தின் போஸ்ட் புரடெக்‌ஷன் வேலைகள் இன்னும் 60 நாட்களில் முடிந்துவிடும். விரைவில் படம் வெளியாகும்” என்று குறிப்பிட்டிருந்தார். 

இவரது படம் வெளிவருவதில் இவருக்கு எவ்வளவு மகிழ்ச்சி இருக்கிறதோ அதே அளவுக்கு இன்னொரு இயக்குநருக்கும் தன் படம் வெளியாவதில் மகிழ்ச்சி இருக்கவே செய்யும். கெளதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில் உருவான ‘நரகாசூரன்’ படம் வெளியாகாமல் பல மாதங்களாக முடங்கிப் போய் உள்ளது. அதன் இளம் இயக்குநர் கார்த்திக் நரேனுக்கும் இவருக்கு சில மாதங்களாக இது தொடர்பாக பிரச்னையும் நீடித்து வருகிறது. 

இதற்கு முன் நரேன் இயக்கிய 'துருவங்கள் 16' படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது. அதனை வைத்தே படம் இயக்க கெளதம் மேனன் இவரை அழைத்திருந்தார். அதன்படி படத்தையும் இயக்கி முடித்தார் நரேன். ஆனால் படம் வெளியாகாமல் முடங்கிப் போய் உள்ளது. கடந்த மார்ச் மாதம் நரேன் இது தொடர்பாக ஒரு ட்வீட் போட்டிருந்தார். “பலர் என்னிடம் அறிவுரைக் கூறினாலும் நான் உங்களை நம்பினேன். எங்களை குப்பைப்போல நடத்துனீங்க” என்று அவர் சொன்ன விஷயம் பெரும் சர்ச்சையாக மாறியது. 

இதற்கு கெளதமும், “கார்த்திக் நரேன் பதிவிட்ட ட்வீட் என்னை மிகவும் காயப்படுத்தியது. நானும் கார்த்தியின் ட்வீட்க்கு ரிப்ளே செய்திருக்கக்கூடாது. அதற்காக கார்த்தியிடம் மன்னிப்பு கேட்கிறேன். கார்த்தி என்னிடம் பேசாமல் அவர் இப்படி செய்திருக்கக்கூடாது” என்று குறிப்பிட்டிருந்தார். 

இந்த வார்த்தை போர் முடிந்து பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இப்போது கெளதம் தன்னுடைய ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ வெளியாகும் செய்தியை பகிரப் போய் மீண்டும் அது சர்ச்சையாகி உள்ளது. “எனக்கு சில விளக்கம் தேவை. எப்போது என் படம் வெளிச்சத்திற்கு வரும் என தெரிந்தால் உதவியாக இருக்கும் சார். இந்தப் படம் என் இதயத்திற்கு மிகமிக நெருக்கமானதுதான்” என்று அவர் கேள்வி கேட்டிருந்தார். 

கார்த்திக் நரேன் போட்ட ட்வீட் இப்போது பேசுப் பொருளாக மாறி உள்ளது. சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் பலரும் நரேனுக்கு ஆதரவாக பேசத் தொடங்கி உள்ளனர். ‘உங்களுக்கு வந்தா ரத்தம்..எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?’ என மீம்ஸ் போட்டு வருகின்றனர். ஆனால் இதுவரை கெளதம் மேனன் இதற்குப் பதில் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close