[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்
  • BREAKING-NEWS தென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது

ஊரைக் காப்பாற்றிய மைக்கேல் ஜாக்சனின் சிலை...

monument-to-michael-jackson-movie

அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகள், கலைஞர்கள், ஓவியர்களின் சிலைகள் எனத் துவங்கி சாதிக் கட்சித் தலைவர்கள் சிலை வரை உலக அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய சிலைகளின் கதைகள் பல. சாலைகளில், தெரு முனைகளில் வைக்கப்பட்டிடுக்கும் பல தலைவர்களின் சிலைகள் போலீஸ் பாதுகாப்புடன் கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருப்பது வேடிக்கையான  ஒன்று. காரணம் நமது சமூகத்தில் சிலைகள் என்பது வெறும் சிலைகளாக பார்க்கப்படுவது இல்லை.

ஒவ்வொரு சிலைக்குப் பின்னும் தனித்தனி மனித குழுக்களின் அதிகார பலம் உள்ளது. அவர்கள் அந்த சிலைகளை முன்னிலைப்படுத்தி தங்கள் கட்சி அல்லது சாதிய அடையாளங்களை தக்கவைத்துக் கொள்ள முயல்கின்றனர். இப்படி சிலைகளை பாதுகாக்க மனிதன் நேரத்தை விரயம் செய்து கொண்டிருக்கிற சூழலில் செர்பிய சினிமா ஒன்று ஒரு சிலை ஊரைக் காப்பாற்றிய கதையை நகைச்சுவை பாணியில் சொல்லி இருக்கிறது.

Monument to Michael Jackson (2014)

செர்பியாவில் கிட்டத்தட்ட தனது வாழ்வாதரங்களை இழந்த ஒரு சிற்றூரில் 2009’ல் நடக்கிறது இந்த கதை. பொருளாதார வரத்து பொய்த்து விட்ட சூழலில் அவ்வூர் விமான நிலையத்தை மூடிவிட்டு தனியாருக்கு விற்றுவிடலாம் என முடிவு செய்கிறது அரசு. அவ்வூரில் இருக்கும் மக்கள் வாழ்வாதரங்களைத் தேடி புலம்பெயரத் துவங்கியிருந்தனர்.

ஊர்த் தெரு முனையில் கவனிப்பாரற்று இருந்த முன்னாள் கம்யூனிச போராளி ஒருவரின் சிலை அப்புறப்படுத்தபடுகிறது. சிலையிருந்த சதுக்கத்தின் அருகில் சலூன் கடை வைத்திருக்கிறான் நாயகன் மார்கோ. கொஞ்சம் கொஞ்சமாக தனது ஊர் வடிவிழந்து கொண்டிருப்பதை கவனிக்கிறான் அவன். அவனது மனைவி அவனை பிரிந்து தனியாக வசிக்கிறாள்.

இந்நிலையில் தனது ஊரின் வாழ்வாதரங்களை காப்பாற்றவும் தன் மனைவியை மீண்டும் தன்னுடன் சேர்ந்து வாழச் செய்வதற்கும் ஒரு நாயக பிம்பம் தேவைப்படுகிறது அவனுக்கு.

2009ல் மைக்கேல் ஜாக்சன் உலகம் முழுக்க தனது ரசிகர்களைக் காண சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருந்தார். காலியாக இருக்கும் அந்த சதுக்கத்தில் மைக்கேல் ஜாக்சனின் சிலையை அமைப்பதன் மூலம் சுற்றுலாப் பயணிகளைக் கவரலாம். இதனால் விமான நிலையமும் தனது ஊரும் காப்பாற்றப்படும் என நினைக்கிறான் ’மார்க்கோ’. சிலையும் செய்யப்படுகிறது.

உள்ளூர் செர்பிய வலது சாரி ஆதரவு இளைஞர்கள் மைக்கேல் ஜாக்சனின் சிலை அங்கு அமைக்கப்படுவதை எதிர்க்கிறார்கள். ஆனால் மார்க்கோ தன் நண்பர்கள் உதவியுடன் இதை செயல்படுத்த முயல்கிறான். “மைக்கேல் ஜாக்சன் நேராக நம்மூருக்கு வந்து சிலையை திறந்து வைப்பார் இ-மெயில் மூலம் தான் அதற்கான அனுமதி பெற்றுவிட்டேன்” என பொய் ஆதாரங்களைக் காட்டி அரசிடம் அனுமதியும் பெற்று விடுகிறான். உண்மையில் மார்க்கோ அனுப்பிய மின் அஞ்சலுக்கு பாதகமான பதிலே கிடைத்திருந்தது.

சிலை திறப்பு நாள் நெருங்குகிறது. மைக்கேல் ஜாக்சன் ஹெலிகாப்டரில் பறந்து வந்து ஒரு கயிற்றில் இறங்கி சிலையை திறக்கப் போகிறார். சிறிய மேடை அமைத்து மேயர் உட்பட பலரும் சிலையை சுற்றி மைக்கேல் ஜாக்சனின் வருகைக்காக வானத்தை பார்த்து காத்திருக்கின்றனர், உள்ளூர் மக்களின் பாட்டும் கூத்துமாக அந்த இடம் கலை கட்டுகிறது.

அதே நேரத்தில் அங்கு வந்து கூடும் வலது சாரி இளைஞர்கள் கற்களால் ஹெலிகாப்டரை தாக்க காத்திருக்கின்றனர். பாதுகாப்புக்காக கூடியிருந்த போலீஸ் அவர்களை கட்டுப்படுத்த போராடிக் கொண்டிருக்கிறது. உண்மை என்னவென்றால் உள்ளூர் பைலட் உதவியுடன் ’மார்க்கோ’ தான் ‘மைக்கேல் ஜாக்சன்’ போல வேடமிட்டு, ஹெலிகாப்டரில் பறந்து வருகிறான்.

ஹெலிகாப்டர் வானில் பறந்து சிலையிருக்கும் பகுதியை நோக்கி மெல்ல இறங்கிக் கொண்டிருக்கும் போது, “சற்றுமுன் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உடல்நலக் குறைவால் மைக்கேல் ஜாக்சன் இறந்துவிட்டார்” என்ற அதிர்ச்சி செய்தி மேயரின் செல்போனில் கிடைக்கிறது. குழப்பமடைந்த மேயர் தனது காரில் போய் ’நடப்பது நடக்கட்டும்’ என்பது போல உட்கார்ந்து கொள்கிறார்.

ஹெலிகாப்டரில் இருந்து தொங்கும் கயிற்றில் ‘மைக்கேல் ஜாக்சன்’ வேடமனிந்த மார்க்கோ இறங்குகிறான். மைக்கேல் ஜாக்சன் இறந்த செய்தி அறியாமல் கீழே ஒரு குழு உற்சாகமாக ஆடுகிறது, ஹெலிகாப்டர் மீதும் கயிற்றில் இறங்கிக் கொண்டிருக்கும் போலி மைக்கேல் ஜாக்சனான ‘மார்க்கோ’ மீதும் ஒரு குழு கற்களை எறிகிறது. அதில் காயமடைந்த ’மார்க்கோ’ அந்தரத்திலிருந்து கீழே தரையில் விழுகிறான்.

ஆறுமாதங்களுக்கு பிறகு காட்சி சிலையிருந்த சதுக்கத்தை சுற்றி வருகிறது அதில் ஊர் நன்மைக்காக இறந்த தியாகி ‘மார்க்கோ’வின் சிலை வைக்கப் பட்டிருக்கிறது. ஊர் மக்கள் அவனது சிலைக்கு ரோஜாப்பூ வைத்து மரியாதை செய்கிறார்கள். அந்த சிலையை காண சுற்றுலா பயணிகள் கூடுவதால் ஊர் காப்பாற்றப்பட்டது, விமான நிலையம் தொடர்ந்து இயங்கும் என அறிவிக்கப்படுகிறது. இப்படியாக வேடிக்கையும் சோகமுமாக கதை முடிகிறது.

செர்பிய இயக்குனர் ‘டார்கோ’ இயக்கியுள்ள இத்திரைப்படம் 2015ல் நாஷ்வெல்லி திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை ’போரீஸ் மிலிவ்ஜுவிக்கிற்கு பெற்றுத் தந்தது, 2015ல் சாண்டா பார்பாரா சர்வதேச திரைப்படவிழாவில் இயக்குனர் ‘டார்கோ’ இப்படத்திற்காக கவுரவிக்கப் பட்டார்.

சார்லிசாப்லின் போல, என்.எஸ்.கிருஷ்ணன் போல, சந்திரபாபு போல, பாப் மார்லே போல தனது சமுதாய கோபங்களை, அரசியல் வெறுப்பை நகைச்சுவை பாணியிலும் இசை வடிவிலும் வெளிப்படுத்தி வரவேற்பையும் எதிர்ப்புகளையும் சம்பாதித்தவர்கள் பலர். அதனால் தான் இன்றும் கேலிச் சித்திரங்கள் அவ்வப்போது சர்ச்சைகளுக்கு உள்ளாகின்றன. கலை ஆயுதம் என்றால் நகைச்சுவை அதன் கைப்பிடி.


வீடியோ :

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close