[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் நான் போட்டியிடுவது பற்றி தலைமைதான் முடிவு எடுக்கும் - உதயநிதி ஸ்டாலின்
  • BREAKING-NEWS சேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரோஹிணி மத்திய உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமனம்
  • BREAKING-NEWS தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா ஆளுநரை நாளை சந்திக்க சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்

மகனா மகளா ? சீன தாயின் பாசப் போராட்டம் ! - ஓர் நெகிழ்ச்சியான உலக சினிமா

aftershock-2010-world-cinema

பெருமழையோ பேரிடரோ இயற்கையின் முன் அனைவரும் சமம். ஜூலை-27, 1976, சீனாவின் டாங்சன் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் தான் இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய இயற்கை சீற்றமாக அறியப்படுகிறது. இருபத்தி மூன்றே நொடிகளில் இயற்கை சுமார் 2,50,000 மனித உயிர்களை வேட்டையாடி ஓய்ந்தது. ஆனால் பலி எண்ணிக்கை 6,55,000 என்கிறது ஓர் அறிக்கை. அதன் நினைவாக சீன அரசு உயிரிழந்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட 300 மீட்டர் நீளம் கொண்ட நினைவுச் சுவர் ஒன்றை எழுப்பியது. 12,000 சதுர அடி பரப்பளவுள்ள நினைவிடம் உருவாக்கி அதில் 1976 பேரழிவின் போது எடுக்கப்பட்ட 400 புகைப்படங்கள் மற்றும் 600 கட்டுரைகளை காட்சிக்கு வைத்துள்ளது. Ling Zhang நாவலை தழுவி எடுக்கப் பட்ட இத்திரைப்படம் ’டாங்சன்’ நிலநடுக்கத்தை மீண்டும் நம் கண்முன்னால்  நிகழ்த்திக் காட்டுகிறது.

ஆஃப்டர் ஷாக் (2010) Aftershock (2010)

உழைக்கும் மக்களின் தேசமான சீனாவில் 1976ல் துவங்குகிறது காட்சி. Li Yuanni தனது கணவன், 5 வயது மகன் Fang Da மற்றும் மகள் Fang Deng  உடன் வாழ்ந்து வருகிறாள். கணவன் மனைவி இருவரும் இரவில் வேலைக்கு செல்ல வேண்டியிருப்பதால் வீட்டில் குழந்தைகள் தனியாக உறங்குகிறார்கள்.

அதிகாலை சரியாக மணி 3:42க்கு பேரொலியுடன் அதிர்கிறது டாங்சன். பூமி தன் வயிற்றைக் கிழித்து மனிதர்களை நிறைக்கிறது. பிணங்கள் மீது கட்டிடங்கள், கட்டிடங்கள் மீது பிணங்கள் என மாறி மாறி சமாதி எழும்புகிறது.

தம்பதிகள் தங்கள் வீடு நோக்கி ஓடுகிறார்கள். குழந்தைகள் இருவரும் நடப்பது புரியாமல் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு அழுகிறார்கள். திசைகள் தோறும் மனித சத்தம். காற்றெல்லாம் சாவின் நெடி. 23 நொடிகள் நீடித்த அந் நிலநடுக்கத்தில் பல்லாயிரம் பேர் உயிரிழக்கிறார்கள். Li yuanni தனது கணவனையும் இழக்கிறாள். குழந்தைகள் இருவரும் இடிபாடுகளுக்குள் மாடிக் கொண்டு தவிக்கிறார்கள். பூகம்பத்திற்கு பிறகு பேரமைதி நிலவுகிறது. இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட சிறுமி ஒரு கல்லை தரையில் தட்டி ஒலி எழுப்பி கவனம் பெறுகிறாள். மகன் மகள் இருவரில் ஒருவரைத் தான் காப்பாற்ற முடியும் என்ற சூழலில் யாரை காப்பாற்றுவது என முடிவெடுக்கும் நிலையிலிருக்கும் தாய் ”என் மகனை காப்பாற்றுங்கள்” என்கிறாள். அந்த சொல் இடி பாடுகளுக்குள் சிக்கிக் கிடந்த சிறுமியின் காதில் விழுகிறது. அச்சிறுமியின் கண்களில் வெறுப்பின் கண்ணீர் வழிகிறது. இப்போது அவள் கல்லால் ஒலி எழுப்புவதை நிறுத்தியிருந்தாள். ஒரு கையை இழந்த நிலையில் மகன் காப்பாற்றப் படுகிறான்.

ஊர் முழுக்க பிணங்கள் கிடத்தப் பட்டிருக்கிறது. அதில் தனது தந்தையின் அருகில் சிறுமி Fang Deng  கிடக்கிறாள். மீட்புக் குழு தீவிரமாக வேலை செய்து முடிந்த மட்டும் பலரை மீட்கிறது. இயற்கை குற்றவுணர்சியில் அழுவது போல அப்போது மழை பெய்கிறது. உண்மையில் சிறுமி Fang Deng இறக்கவில்லை மயங்கித்தான் கிடந்தாள்.

இராணுவ மீட்புக்குழுவில் டாங்சன் பகுதிக்கு வந்திருந்த குழந்தை இல்லா இராணுவ தம்பதிகளிடம் Fang Deng  வளர்கிறாள். தாய் Li Yuanni, கையிழந்த தனது மகன் Fang Da-வை வளர்த்து ஆளாக்குகிறாள்.

இப்படியாக இவர்களின் வாழ்க்கை நதியின் கிளைகளாக விரிகிறது. Fang Deng  இராணுவ தம்பதிகளின் ஒரே செல்ல மகளாக வளர்கிறாள். காலத்தால் வளர்க்கப்பட்ட அவள் மருத்துவப் படிப்பை தேர்வு செய்து படிக்கிறாள்.  தன்னுடன் படிக்கும் இளைஞனுடன் காதல் கொள்கிறாள்.  அதன் விளைவாக வயிற்றில் குழந்தை உருவாகிறது.

தனது வளர்ப்புத் தாயின் மரணத்திற்கு பிறகே அது நடந்தது. தனது வளர்ப்பு மகளை காண மருத்துவக்கல்லூரி விடுதிக்கு வரும் தந்தைக்கு அதிர்ச்சி, அவள் அங்கிருந்து யாருக்கும் சொல்லாமல் எங்கோ சென்று விட்ட செய்தி அவருக்கு கிடைக்கிறது. மனைவியையும் இழந்து வளர்ப்பு மகளையும் இழந்த நிலையில் அவரது வாழ்க்கை தனித்து விடப்படுகிறது. அது ஒரு பழுத்த பழம் கிளையிலிருந்து விடைபெற மறுப்பதை போல இருந்தது. சில ஆண்டுகளுக்கு பிறகு வயிற்றில் சுமந்த கருவை மகளாக பெற்றுக் கொண்டு Fang Deng  தனது வளர்ப்புத் தந்தையை அடைகிறாள்.

கையிழந்த நிலையில் தனது தாயால் வளர்க்கப் பட்ட Fang Daவும் வளர்ந்து பெரியவனாகிறான். மனைவி குழந்தை என அவனது வாழ்வும் நீள்கிறது. காலம் கருணையற்றது என்றாலும் அதனிடம் எல்லா இழப்புகளுக்கும் பதில் உண்டு.

Fang Deng-வை வளர்த்த தந்தை அவளை ஒரு முறை ”டாங்சன் சென்று வா, அங்கு உன் உறவினர்கள் யாராவது உயிரோடு இருக்கலாம்…” என்கிறார் ஆனால் Fang Deng-விற்கு தான் இடிபாடுகளில் சிக்கியிருந்த போது தன் சகோதரனை காப்பற்றச் சொல்லி தன்னை கைவிட்ட தாயை தேடிச் செல்ல மனமில்லை.அவள் உடைந்து அழுகிறாள். “நான் அங்கு போக மாட்டேன், நீங்கள் தான் என் அப்பா, இவள் தான் உங்கள் பேத்தி” என தன்னை வளர்த்த தந்தையின் தோளில் சாய்ந்து அழுகிறாள். ஒளியின் வேகமாக முப்பது வருடங்கள் ஓடி மறைந்தது.

காட்சி 2008ல் விரிகிறது. Fang Deng  தனது கணவன் மற்றும் மகளோடு  கனடாவில் வசிக்கிறாள். 30 வருடங்களுக்கு பிறகு சீனாவில் ஏற்பட்ட மற்றொரு நிலநடுக்கம் டிவியில் காட்டப்படுகிறது. Fang Deng தன் சிறுவயது அனுபவத்தை நினைத்துக் கொள்கிறாள். தானும் உதவ வேண்டும் என சீனா விரையும் அவள் மருத்துவ மீட்புக் குழுவோடு சேர்ந்து உதவுகிறாள். அங்கு தனது சகோதரனும் உதவி செய்ய வந்திருப்பதை அறிந்து நெகிழ்கிறாள். அவனோடு தனது தாயை காணச் செல்கிறாள். தாயும் மகளும் 30 வருடம் கழித்து சந்திக்கும் காட்சியில் ஒருவருக்கொருவர் மன்னிப்பு கோரி அழுகிறார்கள். தனது தந்தையின் சமாதியருகே Fang Deng-விற்கு அமைக்கப் பட்டிருக்கும் சமாதியில் ’ஆப்டர் ஷாக்’ நிறைவு பெறுகிறது.

ஒரே நேர் கோட்டில் பயணிக்கும் வாழ்வில் வந்து போகிற தற்காலிக மனித முகங்களையும், உறவுகளின் நிலையற்ற தன்மையினையும் இயற்கையின் பெரும் பலத்தையும் நிஜ சம்பவத்தின் பின்னணியில் காட்சி படுத்தியிருப்பதில்  இயக்குனர் Feng Xiaogang தனிக் கவனம் பெறுகிறார்.

சீனா,பெய்ஜிங்,துபாய் உட்பட 26 சர்வதேச திரைப்பட விழாக்களில் போட்டியிட்ட இத்திரைப்படம் 20க்கும் அதிகமான விருதுகளை குவித்தது. ஒளிப்பதிவுக் குழுவும் கிராபிக்ஸ் & அனிமேஷன் குழுவும் இத்திரைப்படத்திற்கு வழங்கியிருக்கும் அசுர உழைப்பை நிலநடுக்க காட்சிகளில் ரிக்டரில் உணர முடிந்தது.

”முப்பது வருடம் முன் சரிந்த கட்டிடங்கள் நிமிர்ந்து விட்டன, ஆனால் நொறுங்கிய என் தாயின் இதயம் அப்படியே கிடக்கிறது” போன்ற வசனங்கள் நம்மை இன்னும் உறவுகளுக்குள் நெருக்கம் கொண்டாடச் செய்கிறது.

இந்த நிலநடுக்க பேரிழப்பின் நினைவாக சீன அரசு உயிரிழந்த பலாயிரம் பேரின் பெயர்கள் பொறிக்கப்பட்ட 300 மீட்டர் நீளம் கொண்ட நினைவுச் சுவர் ஒன்றை எழுப்பியது. 12,000 சதுர அடி பரப்பளவுள்ள நினைவிடம் உருவாக்கி அதில் 1976 பேரழிவின் போது எடுக்கப்பட்ட 400 புகைப்படங்கள் மற்றும் 600 கட்டுரைகளை காட்சிக்கு வைத்துள்ளது சீன அரசு.

எரிமலைகளோடு போராடும் ஜப்பான் போன்ற பிற தேசங்களோடு ஒப்பிடுகையில் இந்தியாவிற்கு பெருங்கொடையாக இயற்கை, பாதுகாப்பான  வாழ்விடத்தையே கொடுத்திருக்கிறது. ஆனால், நாம் நமது அறிவியல் மேதாவித்தனத்தைக் காட்டி இயற்கையை சீண்டிக் கொண்டிருக்கிறோம்.

 

போட்டோ கேலரி

1 of 7

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close