[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது நாளை தீர்ப்பு வழங்குகிறது டெல்லி உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகை, இந்தியா கேட் பகுதிகளில் காற்று மாசு அதிகரிப்பு; வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS லாக்-அப் என்கவுன்டர் விவகாரம்: எஸ்.ஐ. காளிதாஸுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!
  • BREAKING-NEWS சென்னை மேயர் பதவிக்கு போட்டியிட உதயநிதி ஸ்டாலின் சார்பில் விருப்பமனு
  • BREAKING-NEWS ரஃபேல் தீர்ப்பு எதிர்க்கட்சியினருக்கு சரியான பதிலடி - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS மனைவி நளினி மற்றும் உறவினர்களைப் பார்க்க முருகனுக்கு அனுமதி வழங்குக - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS தென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டத் தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு

‘மகாமுனி’ – திரைப் பார்வை

review-of-magamuni-movie

மகாதேவன், முனிராஜ் எனும் இரண்டு கதாபாத்திரங்களுக்கும் சமூகத்தின் மீதான கோபமும், துரோகத்திற்கு எதிரான கொந்தளிப்பும், பேரன்பின்பால் கொண்ட தவமுமே ‘மகாமுனி’ திரைப்படம்.

மௌனகுரு படத்திற்குப் பிறகு எட்டு ஆண்டுகள் இடைவெளியில் மகாமுனியை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சாந்தகுமார். அதுவே படத்திற்கு ஒருவித எதிர்பார்ப்பை உருவாக்க, பெயருக்கேற்ப சாந்தமாய் அந்த எதிர்பார்ப்பை அவர் பூர்த்தி செய்திருக்கிறார். மனநிலை பிறழ்ந்த அம்மா தன் இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டுச் செல்ல வெவ்வேறு இடங்களில் வளர்கிறார்கள் மகாதேவன் மற்றும் முனிராஜ். வளர்ப்புக்கேற்ற குணாதிசயங்களோடு வளரும் இருவரும் தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் எதிர்கொள்ளும் சம்பவங்கள் ஒருகட்டத்தில் இருவரையும் சந்திக்க வைக்கிறது. ஆனால், எந்தப் புள்ளியில் அந்த சந்திப்பு நிகழ்கிறது என்பது நோக்கி திரைக்கதையை நகர்த்திய விதமும், படமாக்கிய விதமும் வெகு சுவாரஸ்யமானது.

 அதோடு, அரசியலும், சாதியமும் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள எந்த எல்லைக்கும் செல்லும் என்பதும் அழுத்தந்திருத்தமாய் படத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இடையிடையே வரும் பிரியாணி அண்டா, சேக்கிழாரும் கம்பராமாயணமும் போன்றவையும் சிரிக்க வைக்கின்றன. இயக்குநர் சாந்தகுமாருக்கும் தமிழ் சினிமாவிற்கும் ‘மகாமுனி’ முக்கியமான திரைப்படம்.

ஆர்யா. நடிக்க வந்த இத்தனை ஆண்டுகளில் அவரால் இவ்வளவு நடிக்க முடியும் என்பதை மகாமுனியில் நிரூபித்திருக்கிறார். மகாதேவன், முனிராஜ் என இரண்டு கதாபாத்திரங்கள். படத்தில் வரும் வசனத்தைப் போலவே மீசையை தவிர்த்து தோற்ற ரீதியாக பெரிய வித்தியாசமில்லை. ஆனால், உடல் மொழியாலும், உணர்வுகளாலும் வித்தியாசம் காட்டி ரசிக்க வைத்திருக்கிறார். முதுகில் குத்தப்பட்ட கத்தியோடு மருத்துவமனைக்கு செல்லும் காட்சி, தன் மகனோடு பள்ளி தலைமையாசிரியரிடம் பேசும் காட்சி, இறைவன் என்றால் என்ன? எனும் காட்சி என பல இடங்களை அவர் நடிப்புக்கு உதாரணமாக சொல்ல முடியும். வாழ்த்துகள் ஆர்யா.

மஹிமா, இந்துஜா என இரண்டு கதாநாயகிகள். இருவர் கதாபாத்திரமும் திரைக்கதையோடு ஒன்றும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதில் இருவரது நடிப்பும் பிரமாதமாய் வெளிப்படுகிறது. அதேபோல், கூலாக வில்லத்தனம் காட்டும் ஜெயப்பிரகாஷ், இளவரசு, போலீஸ் அதிகாரி, கோபாலாக வரும் யோகி ஆகியோரும் கவனம் ஈர்க்கிறார்கள். ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் ‘மருத்துவர்’ காளி வெங்கட், பின்னர் செய்தித்தாளில் சர்ப்ரைஸ் கொடுக்கிறார்.

நேர்த்தியும் சுவாரஸ்யமும் கலந்த திரைக்கதைக்கு இன்னும் பலம் சேர்க்கிறது தமனின் பின்னணி இசை. துரோகத்தின் வலியையும், பாசத்தின் மணத்தையும் பரப்பி மகாமுனியோடு ஒன்ற வைப்பதிலும் அவரது இசை முக்கிய பங்காற்றியிருக்கிறது. பாடல்கள் பின்னணி இசை அளவிற்கு மனதைத் தொடவில்லை. மனநல காப்பகத்தில் தொடங்கி ஆற்று நீரில் முடியும் திரைப்படத்திற்கு அருண் பத்மநாபனின் ஒளிப்பதிவு ஆன்மா எனுமளவிற்கு முக்கியத்துவத்தோடு விளங்குகிறது. அதேபோல், ஷாபு ஜோசப்பின் படத்தொகுப்பும், ஆக்‌ஷன் பிரகாஷின் சண்டைக் காட்சிகளும்.

மகாமுனி நீளம் கொஞ்சம் அதிகமாக இருந்தாலும், சில காட்சிகள் மெதுவாக நகர்ந்தாலும் அது இந்தப் படத்திற்கு தேவையாகவே இருக்கிறது. அதனால், நல்ல சினிமாவை ரசித்து அணுகுபவர்கள் முதல் திரைக்கதையில் திருப்பங்கள் அவசியம் என்பவர்கள் வரை மகாமுனியை எல்லோரும் ரசிக்கலாம். தரமான ஒரு படத்தை கொடுத்த ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் வாழ்த்துகள்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close