[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்

ner-konda-paarvai-movie-ctreat-new-chapter-in-tamil-cinema-history

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு வாரமும் தவறாமல் குறைந்தபட்சம் இரண்டு திரைப்படங்களுக்கு மேல் வெளியாவது வழக்கம். ஆனால், இதில் ஆரோக்யமான விவாதத்தை, உரையாடலை ஏற்படுத்தும் படங்கள் மிகவும் சொற்பமாகவே வருகின்றன. சொல்லப்போனால், ஒரு வருடத்திற்கு ஒன்றிரண்டு படங்கள்தான் மக்கள் மத்தியிலும் பேசு பொருளாக மாறுகிறது. தமிழ் சினிமாவில் புதுமுக இயக்குநர்கள் பலரும் கடந்த சில வருடங்களாக அதற்கான முயற்சிகளை செய்து வருவதாக சினிமா ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

அந்த வகையில், அஜித் குமார் நடிப்பில் வெளியாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஒரு நேர்மறையான விவாதப் பொருளாக மாறியுள்ளது. அஜித் குமார் திரைப்பட வரலாற்றில் உணர்வுபூர்வமான படங்கள் நிறைய இடம்பெற்றிருந்தாலும், மக்கள் மத்தியில் சிந்தனையை தூண்டக் கூடிய வகையிலான படங்கள் சிலவே உள்ளன. அந்த வகையில் முத்திரை பதிக்கும் படமாக நேர்கொண்ட பார்வை திரைப்படம் உருவாகியுள்ளது.

         

பாலியல் உறவு தொடர்பான திரைப்படங்கள் எடுக்க தமிழ் சினிமாவில் அதிக தயக்கம் உண்டு. அப்படியிருக்கையில், நேர்கொண்ட பார்வை படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்களும், விவாதிக்கப்படும் பொருளும் முற்றிலும் புதிதானவை. பெண்களின் சுதந்திரம் குறித்தும் அவர்களின் சுதந்திரத்தை ஆண்கள் பார்க்கும், புரிந்து கொள்ளும் விதத்தில் உள்ள சிக்கல்கள் குறித்து நேரடியாகவே இந்தப் படம் பேசியுள்ளது.

இந்தியில் அமிதாப் நடித்த ‘பிங்க்’ படம்தான் தமிழில் நேர்கொண்ட பார்வையாக ரீமேக் ஆனது. இந்தப் படத்திற்கான அறிவிப்பு வெளியான போதே, தமிழில் எப்படி அந்தக் கதை எப்படி எடுக்க முடியும் என பலரும் வியப்பாக பார்த்தனர். பாலிவுட் சினிமாவிலுள்ள கலாச்சாரத்தை தமிழில் எடுப்பது மிகவும் ரிஸ்க் என பலரும் கருத்து தெரிவித்தனர். பாலியல் தொடர்பான பிரச்னைகள் தமிழ் சினிமாவில் அவ்வளவு எளிதில் பேசிவிட முடியாது என்றார்கள். ஆனால், நேர்கொண்ட பார்வை படத்தை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். 

      

ஒரு பெண்ணின் கன்னித்தன்மை குறித்து இவ்வளவு வெளிப்படையாக வேறு எந்தப்படத்திலும் வசனங்கள் இடம்பெற்றதா? என்பது சந்தேகமே. அதாவது, படத்தில் வரும் மீரா என்ற கதாபாத்திரம் திருமணத்திற்கு முன்பாக நான்கு பேரிடம் உறவு வைத்துக் கொண்டதை நீதிமன்றத்தில் வெளிப்படுத்துகிறார். எத்தனை பேரிடம் உறவு வைத்துக் கொண்டிருந்தாலும், தனக்கு பிடிக்கவில்லை என்றால் அந்தப் பெண்ணை எந்த ஆணும் வற்புறுத்தக் கூடாது என்று படத்தில் வலியுறுத்தப்படுகிறது.

நேர்கொண்ட பார்வை படத்தை திரையுலகைச் சார்ந்தவர்கள் உட்பட பலரும் பாராட்டியுள்ளனர். பெண்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இத்தனை இருந்தும், அஜித் அல்லாமல் வேறுவொரு நடிகர் இந்தப் படத்தில் நடித்திருந்தால் கன்னித்தன்மை குறித்து காட்சிகள் நிச்சயம் விவாதப்பொருளாக மாறியிருக்கும் எனவும் சிலர் கூறுகின்றனர். அதே நேரத்தில் கதை ஓட்டத்திற்கு மிகவும் பொருத்தமான காட்சியாக இருப்பதால் யார் நடித்திருந்தாலும் அதனை மக்கள் ஏற்றுக்கொண்டு இருப்பார்கள் என்றும் ஒருதரப்பு கருத்து தெரிவிக்கின்றனர்.

                    

ஏனெனில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கருத்தியலின் அடிப்படையிலேதான் தமிழில் படங்கள் வந்துள்ளது. கற்பு குறித்த விவாதத்துடன் வந்த ‘விதி’ திரைப்படமும் அந்தக் கருத்தியலையே வலியுறுத்தியது. நேர்கொண்ட பார்வை படத்தின் முக்கியமான மைய கதாபாத்திரம் திருமணத்திற்கு முன்பு பலருடன் உறவு வைத்திருந்ததை பேசுவது என்பது முற்றிலும் இங்கு புதிது. சரி, தவறு என்பதை தாண்டி இப்படியொரு கருத்து தமிழில் பேசப்பட்டுள்ளது என்பதுதான் இங்கு முக்கியமானது.

         

“ஆணெல்லாம் கற்பை விட்டுத் தவறு செய்தால் 
அப்போது பெண்மையும் கற்பு அழிந் திடாதோ? 
நாணற்ற வார்த்தை அன்றோ? வீட்டைச் சுட்டால் 
நலமான கூரையும் தான்எரிந் திடாதோ?” என்று நூறு வருடங்களுக்கு முன்பே கற்பை உபதேசிக்கும் ஆண்களைப் பார்த்து பாரதி உரக்க பேசியிருந்தார்.

           

ஆண்களுக்கான சுதந்திரம் எல்லையற்றதாகவும், பெண்களுக்கான சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் இருந்த சமுதாயத்தில் ஆண்களை நோக்கி முதல் குரலை உயர்த்தியவர் பாரதியார். அதற்கு பின் பெண்களுக்கான சுதந்திரத்துக்காக பலரும் குரல் கொடுத்து வந்தார்கள். ஆனால் இன்றளவும் பெண்களின் பாலுறவு சுதந்திரம் குறித்து யாரும் வெளிப்படையாக பேசவில்லை. இந்தக்காலக்கட்டத்தில் பாரதியாரின் வரியை தலைப்பாகக் கொண்ட நேர்கொண்ட பார்வை பெண்களின் சுதந்திரம் குறித்து பேசுகிறது. தமிழ் சினிமாவும், ரசிகர்களும் அதனை முழுமையாக ஏற்றுக் கொண்டனர் என்பதே புதிய தொடக்கமும் கூட.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close