[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

“96” படத்தின் சொல்ல மறந்த கதை : நாளை மாலை வெளியீடு

96-movie-deleted-scene-will-released-tomorrow-evening-6-o-clock

விஜய்சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான ‘96’ படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

விஜய்சேதுபதி மற்றும் த்ரிஷா நடித்த ‘96’ படம் வெளியாகி, வெற்றி பெற்று, அது டிவி-யிலேயே ஒளிபரப்பப்பட்ட பின்னரும் அதன் தாக்கம் இன்னும் குறையவில்லை எனலாம். ஏனென்றால் அந்தப் படத்தின் கதை அம்சம் அப்படி. இருபாலரும் சேர்ந்து படிக்கும் பள்ளியில் தங்கள் பள்ளி வாழ்வை கடந்து வந்த யாராலும் இந்த படத்தை எளிதில் கடந்து செல்ல முடியாது. காரணம் அனைவருக்குள்ளும் ஒரு ‘அழகி’ (பார்த்திபன் திரைப்படம்) அல்லது ஒரு சொல்ல மறந்த (மறைத்த) காதல் கதை இருக்கத்தான் செய்யும். அந்த கதை ஒவ்வொருவரின் வாழ்விலும் நினைத்தாலே இனிக்கும் வசந்த காலமாக அனைவரது மனதிற்குள்ளும் பசுமையாக ஓடிக்கொண்டிருக்கும். அந்த ஓட்டத்திற்கு உயிர் கொடுத்த திரைப்படம் தான் ‘96’.

இந்தப் படத்தின் டீஸர் வெளியானது முதல் இன்று வரையிலும் பள்ளிப்பருவ காதலை நினைவூட்டும் நபர்களின் நினைவிற்கு வரும் பாடல் வரி “காதலே காதலே தனிப்பெரும் துணையே” என்பது தான். அந்தப் பாடல் அனைவரது மனதையும் உருக்கிவிட்டது. பள்ளிப் பருவ தோழியை நினைக்கும் போது வரும் இனிப்பான நினைவுகளையும், திரும்பி அந்த வாழ்விற்கு செல்லமுடியாதா என்ற ஏக்கத்தையும் ஒன்றாக தீர்க்கும் வரியாக அது அமைந்தது. இதைத்தொடர்ந்து வெளியான டிரெய்லரும் சரி, படமும் சரி அனைவரும் எதிர்பார்த்த படியே அவரவரின் பள்ளி வாழ்க்கைக்கு ஒருமுறை அழைத்துச்சென்றது. இந்தப் படத்தில் வந்த அனைத்து விஷயங்களும் சினிமா ரசிகர்களின் மனதிற்குள் ஆழமாக பதிந்தது. உதாரணமாக, படத்தில் த்ரிஷா அணிந்திருந்த மஞ்சள் நிற ஆடை தீபாவளிக்கு ட்ரெண்டானதை கூறலாம். 

படம் தொடங்கியது முதலே ஒரு மெல்லிய இசை அனைவரது மனதிற்குள்ளும் ஓடத்தொடங்கும். படத்தில் விஜய் சேதுபதி அவர் படித்த பள்ளியை சென்று பார்க்கும்போது ஒரு இனம் புரியாத உணர்வோடு, சொல்ல முடியாத மகிழ்ச்சியில் மூழ்கிப்போவார். அத்துடன் அப்போது இருந்த அதே வாட்ச்மேனை கண்டு, அவருடன் ஒரு பள்ளி உரையாடலை நடத்திவிட்டு, பின்னர் மீண்டும் மாணவன் போல பள்ளியை சுற்றிவருவது அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்த காட்சியாக அமைந்தது.

அதேபோன்று பள்ளிப்பருவ கதாபாத்திரங்களில் வரும் அனைத்து காட்சிகளும் பசுமையாக இருந்தது. பள்ளிப்பருவ நட்பு, வகுப்பறை அலப்பறைகள், பருவ வயது காதல், சிறு பிரிவில் உலகத்தையே மறக்கடிக்கும் அன்பு, அளவில்லா அக்கறை என கதை அனைவரையும் கண் சிமிட்டாமல் பார்க்க வைத்தது. கதாநாயகி நெஞ்சில் கை வைத்தவுடன் கதாநாயகன் மயங்கி விழும் இயல்பு சொல்ல முடியாத உணர்வை சொல்லியது. 

 

நீண்ட வருடங்களுக்குப் பின்னர் விஜய் சேதுபதி தனது பள்ளிப்பருவ காதலி த்ரிஷாவை சந்தித்ததும், பின்னர் இருவரும் தட்டுத்தடுமாறி
பேசியதும் அவரவருக்கு மீண்டும் தங்கள் பள்ளிப்பருவ தோழியை காணலாம் என்ற எண்ணத்திற்கு தள்ளியது. அதே நேரம் விஜய் சேதுபதியின் கண்ணியம் என்பதும், த்ரிஷாவின் யதார்த்தம் என்பதும் பாராட்டத்தகுந்த வகையில் அமைந்தது. ஒரு கட்டத்தில் விஜய் சேதுபதி “நான் உன் கல்யாத்துக்கு வந்தேன். தாலி கட்டுற வரைக்கும் என்னால் அங்க இருக்க முடியல. நான் போய்ட்டேன்” என்று உருக்கமாக கூறும்போது, த்ரிஷா கதறி அழுத காட்சி அனைவரையும் கலங்கடித்தது.

அதேபோன்று மாணவிகளிடம், கல்லூரி படிக்கும்போது ஜானுவை ராம் வந்து பார்த்த காட்சியை த்ரிஷா மாற்றிக்கூறும் போது ராமும், ஜானுவும் சந்தித்துக்கொள்ளும் காட்சி பலரின் கண்களையும் ஈரமாக்கியது. இறுதிக்காட்சியிலும் விஜய்சேதுபதியின் முகத்தில் த்ரிஷா கை வைத்து அழும் காட்சி நீங்காத சோகத்திற்கு ரசிகர்களை தள்ளியது. திரையரங்குகளை விட்டு வெளிய வந்த அனைவரும், “அட போப்பா ஆயிரம் இருந்தாலும் ஸ்கூல் லைஃப் ஸ்கூல் லைஃப் தான்பா” என்று சொல்ல வைத்தது. 

இந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்திய 96 படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தை பார்த்த அனைவருமே அந்த காட்சிகளை காண்பதற்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். மேலும் இந்தத் தகவலை சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து வருகின்றனர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close