[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும் - தலைமை நீதிபதி
  • BREAKING-NEWS போலி பயிற்சியாளர் ஆறுமுகம் பகீர் வாக்குமூலம்
  • BREAKING-NEWS ஒப்பந்ததாரரின் இடங்களில் 174 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது
  • BREAKING-NEWS கோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்
  • BREAKING-NEWS 100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு

கண்ணீர் விட்ட தன்ஷிகாவுக்கு பெருகும் ஆதரவு..... டி.ஆருக்கு கண்டனம்....

dhansika-and-t-rajendar-issue-vengatprabu-comment

விழித்திரு பத்திரிகையாளர் சந்திப்பில் தன்ஷிகாவை அழவைத்த டி.ஆருக்கு எதிராக திரைத்திறையினர் பலர் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் தன்ஷிகாவுக்கு ஆதரவு குவிந்து வருகிறது.

இயக்குநர் மீராகதிரவன் இயக்கியுள்ள படம் விழித்திரு. அதன் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய தன்ஷிகா மேடையில் உட்கார்ந்திருந்த டி.ராஜேந்தர் பெயரை குறிப்பிட மறந்துவிட்டார். அதற்காக டி.ராஜேந்தர் தன்ஷிகா மேடை நாகரிகத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் எனக் கடுமையாகப் பேசினார். பின்னர் தன்ஷிகா ஸாரி கேட்ட போதும், ‘நீ கட்டி வர்றல சாரி..என்கிட்ட கேட்குற சாரி’ என்று ரைமிங்காக பேசி அவரை நோகடித்தார்.  

இந்தப் பேச்சின் வீடியோ பதிவை பார்த்த பலர் வலைதளத்தில் டி.ஆரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். நடிகர் சங்கம் சார்பாக விஷால் கண்டனம் தெரிவித்திருந்தார். 

இது குறித்து  நடிகை ஜனனி ‘ஒட்டுமொத்த சூழலையும் மிகச் சரியாக கையாண்டிருக்கிறீர்கள். வலிமையாக இருங்கள்’என்று தன்ஷிகாவுக்கு தைரியம் தந்துள்ளார். இதை போல நடிகர் பிரசன்னா ‘நீங்கள் செய்தது சரி. நல்ல முறையில் கண்ணியமாக பேசினீர்கள். உங்களது கடுமையான உழைப்புதான் இந்தளவுக்கு உங்களை இன்றைக்கு உயர்த்தியுள்ளது. தலை நிமிர்ந்து இருங்கள்’என்று சொல்லியுள்ளார்.

பிரபல சினிமா தயாரிப்பாளர் தனஞ்செயன் ‘உங்களது தப்பை சரி செய்ய உங்களால் முடிந்ததை செய்துள்ளீர்கள். ஆனால் அது சரியாக புரிந்துகொள்ளபடவில்லை. இதை கடந்து நீங்கள் வர வேண்டும். சோகமாக இருக்க வேண்டிய அவசியமில்லை’என்று ஆறுதல் வழங்கியுள்ளார். 

எந்த சமூக பிரச்னையாக இருந்தாலும் உடனே கருத்து சொல்பவர் ஆ.ஜே.பாலாஜி. அவரும் ‘இப்போதுதான் டி.ஆர் அவர்களின் பேச்சை வீடியோவில் பார்த்தேன். சார் உங்கள் மீது மரியாதை இருக்கிறது. ஆனால் நீங்கள் செய்தது ஆணவம். ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு. அவமரியாதையான செயல். என் பார்வையில் நீங்கள் மரியாதையை கேட்டு பெற கூடாது. சம்பாதிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கூறுகையில் ‘தன்ஷிகாவுக்கு என் அளவுக்கு அதிகமாக அன்பு. நீ வலிமையான பெண். அற்புதான பெண். நாங்கள் அனைவரும் உன்னோடு இருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார். நடிகை ப்ரியா ஆனந்த் ‘மிகமிக கண்ணியத்தோடு நடந்து கொண்டீர்கள். நீங்கள் செய்ததுதான் சரி’ என்று சொல்லியுள்ளார். 

சாந்தனு இது குறித்து கூறுகையில்  ’நீங்கள் அற்புதமானவர். பக்குவமாக சூழலை கையாண்டீர்கள்.எனது வாழ்த்துகள். தைரியமாக இருங்கள். உங்களுக்கு நடந்தது சரியல்ல என்பது அனைவருக்கும் தெரியும்.’ என்றுள்ளார். இயக்குநர் மற்றும் பாடகர் அருண்ராஜா காமராஜ், ’ஒரு படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் தன்ஷிகா கண்ணீர் வடித்ததை பார்த்ததிலிருந்து கலக்கத்தில் இருக்கிறேன். இதுவும் கடந்து போகும். தைரியமாக இருங்கள்’என்றும் கூறியுள்ளனர்.

விழா மேடையில் அமர்ந்திருந்த நடிகர் கிருஷ்ணாவும் வெங்கட் பிரபுவும் விளக்கம் தந்துள்ளனர். நடிகர் கிருஷ்ணா தனது நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்தி இருக்கிறார். அதில், சுயமரியாதை கொண்டவனாக, ஒழுக்க விதிகளை கடைப்பிடித்து வாழும் நான் மேடையில் அமைதி காத்ததற்காக என்னை தவறாக எண்ணிவிட வேண்டாம். முதலில் நகைச்சுவையாக ஆரம்பித்து, பிறகு தீவிரமாகி, மனதை புண்படுத்தும் அளவுக்கு போனது. எல்லாம் மிக வேகமாக நடந்து விட்டன. அந்த சமயத்தில் எங்களால் எதையும் செய்ய முடியவில்லை. டி.ஆர் போன்ற மூத்த நடிகரின் பேச்சின் நடுவே குறுக்கீடு செய்வது மேடை நாகரிகமாக இருக்காது. அதே நேரம் தன்ஷிகாவை தொடர்ந்து அவமரியாதை செய்ததை ஏற்றுக் கொள்ளவும் முடியாது. நியாயப்படுத்தவும் முடியாது. ஆணோ, பெண்ணோ யாருக்கு நடந்திருந்தாலும் அது அவமரியாதைதான். எங்களில் யாராவது ஒருவர் எதிர்ப்பு தெரிவித்திருந்தால் அது நிகழ்ச்சியை பாதித்திருக்கும். தேவையில்லாத வாக்குவாதங்களை உண்டாக்கியிருக்கும். மூத்த நடிகர்கள், இளைய நடிகர்களை மன்னித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய முன் வருவார்கள் என எண்ணுகிறேன். நாம்தான் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்ள முடியும்’ என்று கூறியுள்ளார். 

வெங்கட்பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் ‘எல்லா சமயங்களிலும் பெரியவர்களுக்கு உரிய மரியாதை கொடுப்பவனாகவே வளர்க்கப்பட்டுள்ளேன். விழுத்திரு விழாவில் அங்கிள் டி.ஆர் குரலை உயர்த்தி சத்தம் போட்டார். நாங்கள் முதலில் அதை கிண்டலாகவே நினைத்தோம். திரும்பி பார்த்த போதுதான் விஷயம் தீவிரமாக மாறியதை உணர்ந்தேன். தன்ஷிகாவுக்கு பொது மேடைகளில் அதிகம் பேசி பழக்கம் கிடையாது. அவர் எப்படி பேசிப்பழக வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. சொல்லிக் கொடுப்பது நல்ல வேலை. என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால துன்புறுத்துவதால் எந்தப் பலனும் இல்லை. யாராக இருந்தாலும் நாம் மரியாதை கொடுக்க வேண்டும்’என்று கூறியிருக்கிறார்.


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close